|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-52 அம்பிகையை வணங்காத முனிவர்
பிருங்கிரிஷி என்ற முனிவர் தவவலிமையால் பல சிறப்புகளைப் பெற்றிருந்தார். இம்முனிவருக்கு சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி இருந்தது. சிவபக்தரான இவருக்கு அம்பிகையை வணங்குவதில் விருப்பமில்லை. மேலும் இவர் அம்பிகையை வணங்குவதில்லை என்கிற உறுதியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அம்பிகையை உதாசீனப்படுத்தும் நோக்கத்துடனும் நடந்து வந்தார். ஒருநாள் சிவபெருமான் அம்பிகையோடு தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானைத் தரிசிக்கச் சென்றார். சிவபெருமானும், பார்வதியும் ஒன்றாக இருப்பதைப் பார்த்த முனிவர் சிவபெருமானை மட்டும் வழிபட வேண்டுமென்று நினைத்தார். ஆனால், இரண்டு பேரும் ஒட்டி அமர்ந்து கொண்டிருந்ததால் அப்போது சிவபெருமானை வணங்கினால் அம்பிகையையும் சேர்த்து வணங்கியது போல் ஆகிவிடும். ஒரு போதும் அம்பிகையை எந்தக் காரணம் கொண்டும் வணங்கி விடக்கூடாது என்பதில் பிருங்கிரிஷி முனிவர் தனது முடிவில் நிலையாக இருந்தார். ஆனால் இவ்வளவு தூரம் வந்து விட்டோம் சிவபெருமானைத் தரிசிக்காமல் செல்வதா? என்று யோசித்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு அவருடைய மனதில் வழி தெரிந்தது. அதைச் செயல்படுத்தத் துவங்கினார். ஒரு வண்டின் உருவத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் திடீரென்று சிவபெருமானை மட்டும் வலம் வந்து தரிசித்தார். இதைக் கண்ட அம்பிகைக்குப் பயங்கர கோபம் ஏற்பட்டது. சிவபெருமானை மட்டும் வணங்கிய பிருங்கிரிஷி முனிவர், சிவபெருமானின் மனைவியான தன்னை வணங்கவில்லையே என்று ஆத்திரம் கொண்டாள். முனிவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினாள். சக்தியின் வடிவமான தன்னை பிருங்கிரிஷி முனிவர் அவமதித்து விட்டதால், அவர் உடலில் இருந்த சக்தியை மட்டும் எடுத்துக் கொண்டாள். இதனால் கை, கால், உடல் என அனைத்துப் பகுதிகளும் செயல் இழந்து, உணர்விழந்து தனது சக்தியையும் இழந்து முனிவர் கீழே விழுந்தார். தன்னைத் தவறாமல் வணங்கும் பக்தன் இப்படி சக்தி இழந்து கிடக்கிறானே என்று கருதிய சிவபெருமான், பிருங்கிரிஷி முனிவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காகத் தனது மூன்றாவது காலைக் கொடுத்துக் கையில் தடி ஒன்றும் அளித்தார். பின்னர் சிவமும் சக்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக அவருக்கு அர்த்த நாரீசுவர தரிசனம் அளித்தார்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.