........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-80

ஊருக்குத்தான் உபதேசமா?

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். மூத்தவரான தருமர் அரியணையில் அமர்ந்தார்.

போரில் அர்ச்சுனனின் அம்புகளால் குருதி எல்லாம் வெளியேறப் படுகாயம் அடைந்தார் பிதாமகர் வீடுமர்.

"தன் தந்தையிடம் தனக்கு எப்பொழுது சாக விருப்பமோ அப்பொழுதுதான் சாவு வரும்." என்று வரம் பெற்றிருந்தார் அவர்.

நல்ல காலமாகிய உத்தராயண காலத்தில் இறக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் உயிர் உடலில் தங்கியிருந்தது.

தருமர் அரசரானதும் கண்ணனிடம், "நான் எப்படி அரசாட்சி செய்வது என்பது குறித்து விளக்கமாகச் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார்.

அதற்கு கண்ணன், "மரணப்படுக்கையில் உள்ள வீடுமரிடம் இது குறித்துத் தெரிந்து கொள்" என்றார்.

அதன்படியே வீடுமரிடம் சென்றார் தருமர். அவருடன் பாஞ்சாலியும் சென்றாள்

அரசாட்சியை நடத்துவது, நண்பர்களைப் பெறுவது, பகைவர்களை அழிப்பது, அறத்தை நிலைநாட்டுவது போன்றவற்றில் உள்ள குழப்பங்களை எல்லாம் கேட்டார் தருமர்.

வீடுமரும் அறநெறிகள் அனைத்தையும் தருமருக்குச் சொல்லி வந்தார்.

"அரசன் எப்பொழுதும் அறத்தின் பக்கமே நிற்க வேண்டும். என்ன நிகழ்ந்தாலும் பாவத்திற்குத் துணை போகக் கூடாது. அறத்தை எடுத்துரைக்காமல் மவுனமாக இருப்பது பாவத்திற்குத் துணை போவதாகிவிடும்." என்றார்.

இதைக் கேட்டதும் பாஞ்சாலி கலகலவென்று சிரித்து விட்டாள்.

"ஏனம்மா சிரிக்கிறாய்?" என்று கேட்டார் வீடுமர்.

"பிதாமகரே! நீங்களும் ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறீர்கள். எல்லா அறங்களையும் அறிந்தவர் போல் இப்போது பேசுகிறீர்களே. அன்று துரியோதனன் அவையில் என்னைத் துச்சாதனன் துகில் உறித்து அவமானப்படுத்தினானே. அன்று தாங்களும் மவுனமாகத்தானே இருந்தீர்கள்?" என்று கேட்டாள்.

"பாண்டவர் தேவியே, நான் அப்படி நடந்து கொண்டதற்கும் காரணம் உள்ளது. யாருடைய உணவை உண்கிறோமோ அந்த இயல்பு உண்பவருக்கு வந்து விடும். தீயவனாகிய துரியோதனன் உணவை உண்டதனால் நானும் அப்பொழுது தீயவனாக இருந்தேன். அதனால் உனக்கு நிகழ்ந்த கொடுமையைத் தட்டிக் கேட்காமல் அமைதியாக இருந்தேன். துரியோதனன் உணவால் ஊறிய இரத்தம் முழுமையும் அர்ச்சுனன் விடுத்த அம்புகள் பாய்ந்ததால் என் உடலை விட்டு வெளியேறி விட்டது. அதனால் இப்பொழுது அறிவுரை கூறுகிறேன்" என்று விளக்கமளித்தார் அவர்.

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.