........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-81

எச்சில் உணவை விருந்தாக அளிக்கலாமா?

காந்தார நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அங்கிருந்த காக்கைகளுக்கு உணவு கிடைக்கவில்லை. பசியால் வாடின.

காக்கைகள் அனைத்தும் கூட்டம் போட்டன.

"இனியும் இங்கே இருந்தால் பசியால் அனைவரும் உயிரிழந்து விடுவோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இடம் பெயரலாம்" என்று அவை முடிவு செய்தன.

எல்லாக் காக்கைகளும் ஒன்றாக அங்கிருந்து பறந்து சென்றன.

வழியில் கடல் போன்று பரந்திருந்த ஏரி ஒன்று தென்பட்டது. அங்கு ஏராளமான நீர்க்காக்கைகள் வாழ்ந்து கொண்டிருந்தன.

காக்கைகளைப் பார்த்த நீர்க்காக்கைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தன. அவைகள் உடனே, "எங்கள் விருந்தினர்களாக நீங்கள் தங்கிச் செல்ல வேண்டும்" என்று காக்கைகளிடம் வற்புறுத்தின.

காக்கைகளும் அங்கே தங்குவது என முடிவு செய்தன.

நீர்க்காக்கைகளும் காக்கைகளுக்கு எவ்விதக் குறையுமின்றிக் கவனித்துக் கொண்டன. ஏராளமான மீன்களைக் கொண்டு வந்து காக்கைகளுக்கு உண்ணக் கொடுத்தன.

நாட்கள் பல சென்றன.

காந்தார நாட்டில் மீண்டும் வளம் பெற்றதை அறிந்த காக்கைகள் சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆசைப்பட்டன.

"இத்தனை நாட்கள் அன்பு காட்டி உபசரித்த நீர்க்காக்கைகளிடம் சொல்லாமல் புறப்படுவது நல்லதில்லை. சொல்லிச் சென்றால் அன்பு காட்டி உபசரித்ததற்கு நன்றிக் கடனாக ஏதாவது செய்ய வேண்டி வரும். என்ன செய்யலாம்?" என்று காக்கைகள் அனைத்தும் பேசிக் கொண்டன.

அப்பொழுது ஒரு கிழக்காக்கை "நாம் நீர்க்காக்கைகளின் மீது குற்றம் சாட்டிவிட்டுப் புறப்படுவோம். விடை பெற்றதாகவும் ஆகும். நாமும் அவைகளுக்கு நன்றிக் கடனாக எதையும் செய்ய வேண்டாம்" என்றது.

மற்ற காக்கைகளுக்கும் அது சரியாகப்பட்டது.

நீர்க்காக்கைகளைப் பார்த்து அவை "எங்களை இழிவு படுத்துவதற்காக இங்கே தங்கச் சொன்னீர்களா? உங்கள் எச்சில் உணவையே எங்களுக்கு விருந்தாகத் தந்தீர்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் போது உங்கள் பின்புறத்தைக் காட்டுகிறீர்கள். நாங்கள் உங்களது பின்புறத்தைப் பார்த்து அருவருப்பு அடைந்தோம். எங்களால் இனியும் தொடர்ந்து இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. நாங்கள் புறப்படுகிறோம்" என்று கூறிவிட்டுப் பறந்தன.

இந்தக் காக்கைகளைப் போல்தான் பலரும் உதவியதை மறந்து விடுவதுடன் உதவியவர்கள் மேல் ஏதாவது குற்றமும் சுமத்தி விடுகிறார்கள்.

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.