........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-52

 பேச்சு சாமர்த்தியம்

சொர்க்கம் போகிறவர்கள் கை தூக்குங்கள்.

அமெரிக்கக் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) தேர்தல் வேட்பாளர் ஆபிரகாம் லிங்கன், பிரச்சாரத்திற்காக, ஒரு கூட்டத்தினரை அணுகினார்.

அப்போது அங்கே பேசிக் கொண்டிருந்த மத போதகர் ஒருவர், "உங்களில் யார் யார் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்" என்று கூட்டத்தினரை வினவினார்.

எல்லோரும் கைகளை உயர்த்தினர். லிங்கன் மட்டும் கையை உயர்த்தவில்லை.

போதகர் கிண்டலாகக் கேட்டார், "மிஸ்டர் லிங்கன் நீங்கள் எங்கே செல்ல விரும்புகின்றீர்கள்?"

எல்லோரும் உன்னிப்பாக
லிங்கனின பதிலை எதிர்பார்த்தனர். ஏனெனில், சொர்க்கத்திற்கு மறுபக்கம் நரகம்தானே?. போதகரும் அந்தப் பொருளில்தான் கேட்டார்.

யாரும் எதிர்பாராத வகையில் லிங்கன் தெளிவான குரலில், "நான் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) போக விரும்புகிறேன்."

கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது.

அளந்தே அடியெடுத்து வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானவுடன் ஏழை எளிய மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரது ஆட்சிக்கு மக்களிடம் பாராட்டைப் பெற்றிருந்தார்.


ஒரு சமயம் சட்ட மேலவையில் முதுபெரும் காங்கிரஸ் கட்சிக்காரர் டி.செங்கல்வராயன், "Mr. Chief Minister your days are numbered" என்று உங்கள் ஆட்சி விரைவில் கவிழும் என்கிற பொருளில் அவர் கூற எதிர்க்கட்சியினர் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

இதற்கு நீண்ட விளக்கம் தர வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

அண்ணாவின் பதில் சுருக்கமாக உதிர்ந்தது, "Thank you, Hon'ble Member, but my steps are measured" என்று நான் அளந்தே அடியெடுத்து வைக்கிறேன். எனவே பிழை நிகழ வாய்ப்பில்லை. நீங்கள் எதிர்பார்க்கிறபடி நடக்காது என்கிறது போல் பதிலளிக்க அங்கிருந்தவர்கள் அசந்து போய்விட்டனர்.

ரயில் டிரைவருக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், மாணவரிடையே பேசினார்.

ஒரு மாணவர் எழுந்து, அவரிடம் "Sir, what is the difference between a rail engine driver and a teacher?" என்று கேட்டார்.

இந்த ஒப்பீடு பலருக்கும் தொடர்பில்லாதது போல் தோன்றியது.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லோரும் காத்திருந்தனர்.

அவர் சொன்னார்.

"The Driver minds the train and the teacher trains the mind"

அங்கிருந்தவர்கள் அனைவரும் அசந்து விட்டனர்.

மூன்றாம் தர ஆட்சி

கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் மேம்பாடு, எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் என்று பல வழிகளில் கவனம் செலுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

மக்களிடையே அவரது அரசுக்கு ஏற்பட்டு வந்த ஆதரவு கண்டு, அதைப் பொறுக்க முடியாத நிலையிம் எதிர்க்கட்சி வரிசையிலிருந்த டாக்டர் எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில் முதல்வரை நோக்கி, "இந்த அரசு மூன்றாம் தரமான அரசு" என்றார்.

அதுகேட்டு அவரது கட்சியினர் ஆரவாரம் செய்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மிக மட்டமான அரசு (Third Rate) என்ற பொருளில் அவர் கூறியதே அதற்குக் காரணம்.

கலைஞர் எழுந்தார். அவை சற்று அமைதியாயிற்று. அவர் சொன்னார்:

"உறுப்பினர் சரியாகச் சொல்லவில்லை; இது மூன்றாம் தர அரசல்ல. இது நான்காம் தரத்தினர் ஆள்கிற அரசு. அதனால்தான் நான்காம் தரத்தினருக்கான மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டுகிறது."

பிராமணர், சத்திரியர், வைசியர், வேளாளர் என்ற நான்கு வருணத்தினரில் கடைப்பட்டவரது ஆட்சி இது" என்ற அவரது பதிலைக் கேட்ட போது, ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் அவரது வாக்கு சாதுர்யத்தை வியந்து பாராட்டினர்.

பின்னர்,

சோழ மன்னன் ஒருமுறை ஒளவையாரிடம், "நான்கு வருணத்தினரில் யாருடைய ஆட்சி மக்களுக்குப் பெரிதும் நன்மை செய்யும்" என்று வினவினான்.

"நான்காம் வருணத்தவரது ஆட்சியே மாட்சி தரும். பிற மூவருடைய ஆட்சிகளும் ஒவ்வொரு வகையில் குறைபாடுடையவை" என்ற பொருளில் ஔவையார் பாட்டாலே பின் வருமாறு பதில் தந்தார்.

"நூலெனிலோ கோல்சாயும்; நுந்தமரேல் வெஞ்சாமராம்;
கோலெனிலோ ஆங்கே குடிசாயும்; நாலாவான்
மந்திரியுமாவான், வழிக்குத் துணையாவான்,
அந்த அரசே அரசு."


மூன்றாம் தரமானது என்ற கேலிப் பேச்சுக்கு சினம் கொள்ளாமல் கலைஞர் கருணநிதி அளித்த பதில் எதிர்க்கட்சியினரையும் கைதட்ட வைத்தது.

ொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.