வாடா மருதப்பா...
ஊற்றுமலை ஜமீன்தார் ஹிருதாலயா மருதப்ப பூபதியும், சர்க்கரைப் புலவரும்
நெருங்கிய நண்பர்கள்.
ஒரு சமயம் புலவர் உடல்நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தார். பலரும் வந்து
அவரைப் பார்த்து உடல் நலம் விசாரித்துச் சென்றனர்
பல நாளாகியும் வராத ஜமீன்தார், ஒரு நாள் புலவரது உடல்நலம் குறித்து விசாரிக்க
நேரில் வந்தார். அவருடன் சில முக்கியமானவர்களும் வந்திருந்தனர்.
ஜமீன்தாரைக் கண்ட புலவர், "வாடா மருதப்பா!" என்றார். இதைக் கேட்ட ஜமீன்தாருக்கு
அதிர்ச்சி ஏற்பட்டது. புலவர் தன்னை ஒருமையில் அழைக்கிறாரே என்ற ஆதங்கம்.
ஆனால் புலவரோ தொடர்ந்து, "வாடினேன் உன்னைக் காணாமல்..." என்றார்.
அப்போதுதான் ஜமீந்தாருக்கு அர்த்தம் விளங்கியது. படுத்த படுக்கையாய் இருக்கும்
போதும் புலவரின் சிலேடைப் பேச்சைக் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
(வாடா- ஒரு போதும் மனம் தளராத, வாடினேன்
- உன்னைப் பார்க்காமல் உடல் மெலிந்தேன்)
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஒரு சமயம் சிரங்குகளின் தொல்லையால் வேதனையுற்றார்.
பல மருந்துகள் போட்டும் சிரங்குகள் ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க
முடியாமல் அவதிப்படும் நேரங்களில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார். அப்படி
அவர் வெளியிட்ட நகைச்சுவைப் பாடல்களில் ஒன்று;
முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.
படி அளப்பவர்
ஒருநாள் இரவு, தமிழ் பேரறிஞர் ந.மு.வேங்கடசாமி நாடார், தமிழ்ப் பெரும் புலவரான
பண்டிதமணி கதிரேசன் செட்டியாரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்.
கதிரேசன் செட்டியார் மிகவும் கவனமாக நடந்து வந்து கொண்டிருந்தார். வழியில்
படிகள் இருக்குமோ என்று பயந்து நடந்து வந்தார்.
அப்போது நாடார் "படியில்லை படியில்லை" என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
உடனே பண்டிதமணி, "இறைவனின் திருச்சந்நிதியில் வந்து, படியில்லை, படியில்லை என்று
சொல்லாதீர்கள். இறைவன்தான் எல்லோருக்கும் படி அளப்பவர்" என்றார்.
அரசன் ஆனையும் பூனையும்
தின்பவன்
அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அவைக்குள் வந்தார்.
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னரைப் பார்த்து, "பாராளும் மன்னனிவன்
ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.
அரசனுக்கு அதிர்ச்சி, "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?"
என்றான் கோபத்துடன்.
அதற்குப் புலவர், "மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய்
அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன்.
வருந்தற்க" என்றார்.
பரிசும் பெற்றுச் சென்றார்.
தொகுப்பு:
தேனி.எஸ்.மாரியப்பன்.
