........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

4. ஜோதியின் முடிவு

ஜோதி வாயைப் பிளந்தாள்.

நிக்கி லேசாக அவளை இடித்து, "நீ தான், பெண்ணே." என்று வாயசைத்தாள். அரை மணிக்குள் வெடித்த இரண்டு பூகம்பங்களில், அன்று எழுந்து தயாராகி வேலைக்கு கிளம்பியதே தவறு என்று தோன்றத் தொடங்கிவிட்டது. சில விநாடி வித்தியாசத்தில் ஏற்பட்டிருந்த வேலை மாற்றம் அவளை அசரச் செய்தது.

கண்டிப்பாக, கம்பனி சிஇஓவிற்கு நெருக்கமாக வேலைப் பார்ப்பதென்பதே பலரின் லட்சியக் கனவு. குமரவேலின் கீழ் வேலை பார்ப்பதின் சிறப்பே இந்த மாதிரி மேல்மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்ளமுடியும் என்பதே. இதை விட சிறப்பாக அந்த நிறுவனத்தை எப்படி நடத்தலாம் என்ற யோசனைகளும் திட்டங்களும் அவளிடம் உண்டு. அவற்றில் சிலதைப் பற்றி குமரவேலிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் இருக்கிறாள், ஆனால் பயன்தான் இல்லை.

ஆனால் பிரச்சினை அதுவல்ல. விஷ்ணுவுடன் நெருக்கமாக வேலைப் பார்ப்பதால் தவறான ஆசைகள் வளரக்கூடுமே. மனது இவ்வளவு தூரம் மயங்கிக் கிடக்கும் ஒருவனின் கீழ் எப்படி அவளால் வேலை பார்க்க முடியும்?

அவளுக்கு முன்னேற்றம் வேண்டும். ஆனால் இது? அவன் ஒரு பார்வை பார்த்தாலே நொறுங்கிப் போகிறவள் எப்படி தன் வேலையை சிறப்பாக செய்யப் போகிறாள்? ம்... அவள் இருக்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது.

விஷ்ணு அவளுடைய மலைத்த பார்வையை சந்தித்தான்.

கையில் இருந்த தாள்களை விநியோகம் செய்தபடி அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

"தொழில் நடத்தும் முறையையே மாற்றியமைப்பது என்றால் என்ன அர்த்தம்?" யாரோ கேட்டார்கள்.

"முற்றிலும் மாற்றுவதென்று அர்த்தம்." என்றான் விஷ்ணு.

தாள்களில் பார்வையை செலுத்தியவர்களின் பலர் மூச்சுத் திணறுவது கேட்டது.

நிக்கியிடமிருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்ட ஜோதி தலையெது வாலெது என்று பிரித்தறிய முயன்றாள். அவளுடைய மனம் விஷ்ணுவின் அறிவிப்பிலேயே சுழன்றது.

"ஏய், மூச்சுவிடுடி." என்று கிசுகிசுத்தாள் நிக்கி.

தோழியை நோக்கி லேசாக தலையசைத்தவள் மூச்சை இழுத்து விட்டாள்.

எழுத்துக்கள் கருத்தில் பதிய ஆரம்பித்த போது தான் அறையில் நிலவிய குழப்பத்தின் காரணம் புரிந்தது.

என்ன மாதிரி யோசனைகளை வெளிப்படுத்துவார்கள் என்றறிந்து கொள்ள குழுக்களில் பழமைவாதிகள், புதியவர்களோடு எதிர்ப்பாளர்களையும் கலந்து பிரித்திருக்கிறான்.

முணு முணுப்புகள் மூத்த அதிகாரிகளிடம் இருந்தே அதிகம் கிளம்பியது. "இது ஒழுங்கீனத்தின் மொத்த உரு."

யாரோ ஆத்திரத்தில் கிசுகிசுப்பது கேட்டது.

"கவனியுங்கள்," என்றான் விஷ்ணு சூட் ஜாக்கட்டை அகற்றியபடி. சூட் அவனுக்கென்றே அளவெடுத்து தைத்தது போல் இருந்தாலும், ஏனோ அவனது இயல்புக்கு அது பொருந்தாத மாதிரி தோன்றியது. ஜாக்கட்டை இருக்கையின் மீது வீசிவிட்டு சட்டைக் கைகளை மடித்து விட்டான்.

"எல்லாமே, இவை எல்லாவற்றையுமே நிச்சயமாக செயல்படுத்த முடியுசெய்து விட்டேன். உங்கள் அனைவரிடமும் நிறுவனத்தின் அமைப்பு பற்றிய வரைபடம் உள்ளது. அதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமையுங்கள். இன்றைய வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தக் கூடியதாய் இருக்கட்டும்."

"ஒரு வேளை சி.பி. இந்த கம்பனியை நடத்திக் கொண்டிருந்தால்..."

விஷ்ணு அந்த எதிர்ப்பாளரை நேர்ப்பார்வையாய் பார்த்தான். "கம்பனியை நடத்திக் கொண்டிருப்பது தாத்தா இல்லை, நான்."

"யாருக்கு வேண்டுமோ," என்றபடி தன் தோல் பையிலிருந்து மற்றுமொரு கற்றை தாள்களை வெளியில் எடுத்தான்.

"இப்போதே வெளியேறலாம். ஒரு வருட உழைப்புக்கு ஒரு மாதம் ஓய்வளிக்க நான் தயார். இந்த ஒப்பந்தம் இங்குள்ள அனைவருக்கும் பொருந்தும். வேண்டுமென்பவர்கள் படிவங்கள் அடங்கியிருக்கும் இந்த பாக்கட்டுகளில் ஒன்றை எடுத்து நிறைவு செய்து இன்று வேலை நேரம் முடிவதற்குள் எனது மேசையில் வைக்கவும். மற்றவர்கள், இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுடைய திட்டங்களை பரிசீலிக்க நாம் இங்கே கூடுவோம். நான் என்னுடைய கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்."

அவன் அமர்ந்திருந்தவர்களை நோக்கி "கேள்வி எதுவும்?" என்று வினவினான்.

ஒருவரும் ஒரு வார்த்தையும் கூறவில்லை.

"பிரமாதம்." என்று புன்னகைத்தான், ஆனால் அதில் தோழமையோ வரவேற்கும் தொனியோ இல்லை.

"நல்லது. இத்துடன் இந்த கூட்டம் களைகிறது."

ஜோதி மூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்ததை உணராமல்.

தனது தோல் பையையும், கோட்டையும் எடுத்தபடி, "மிஸ் ஜோதி, எனது முடிவை பற்றி யோசிக்க உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைத்திருக்கும். புதிய வேலையை ஏற்றுக்கொள்ள தயாரென்றால் என்னோடு வாருங்கள். வேலை இருக்கிறது. இல்லை என்றால், நான்காவது குழுவில் சேர்ந்து கொள்ளலாம்."

ஜோதி விழுங்கினாள். கையிலிருந்த காகிதத்தில் பார்வையை பதித்தாள். குழுவில் குமரவேல் இடம்பெறவில்லை. அவர் புறம் நிச்சயமில்லாத பார்வை ஒன்றை வீசினாள். இதெல்லாம் அவளின் வேண்டுதலுக்கு கிடைத்த விடைகளா? அவளது எதிர்காலத்தையே மாற்றக் கூடிய முடிவை இக்கட்டான சூழலில் நொடிப் பொழுதில் எடுக்கும் நிலை?

"மிஸ் ஜோதி?"

அந்த விநாடியில், தேர்வு செய்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒன்று முன்னேறலாம் அல்லது பின்னேற்றம் தான். இரண்டு வகையிலும் நிச்சயமில்லாத தோற்றம் இருக்கவே செய்தது.

நடுவில் மாட்டிக் கொண்டவள், மனதிற்குள் கடவுளிடம் உதவி கோரினாள். உடனே அவளது பழைய  மன்றாடல்கள் காதில் எதிரொலித்தது. கடவுளே, எனக்கு வேலை மாற்றம் வேண்டும். கடவுளே, அவன் என்னை கண்டு  கொள்ள வேண்டும்.

வீட்டிலும் கோயிலிலும் மாற்றம் கோரி மன்றாடினாள். இதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், விஷ்ணு அவளை கவனிக்க வேண்டினாள். ஆனால் இப்போது ஏன்டா வேண்டிக் கொண்டோம் என்பது போல் தோன்றியது.

ஆரம்பத்தில் குமரவேலும் அவளிடம் நல்ல மாதிரியாகத்தான் நடந்து கொண்டார். அவருக்கு கீழ் அவளுக்கு இடமளித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அதற்காக வேண்டும் அவள் அவரிடம் கடன்பட்டிருந்தாள்.

அவளால் அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை. அவளது வயதுக்கு யாருமே கொடுக்கத் தயங்கும் வாய்ப்பை அளித்த அவளது வழிகாட்டியை திரும்பிப் பார்த்தாள்.

கதவருகே காத்திருந்தவன், "முடிவெடுங்கள், மிஸ் ஜோதி." என்று அவசரப்படுத்தினான்.

குமரவேலை பார்த்தாள். பிறகு விஷ்ணுவை நோக்கி, "என்னை மன்னியுங்கள்," என்றாள், அர்த்தத்துடன் அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையுடன். 

5. சுய சந்தோசத்துக்காக

அறையே அமைதியானது. அனைவரின் பார்வையும் ஜோதியை நோக்க, அவளது பதிலுக்காக காத்திருந்தார்கள்.

விஷ்ணுவின் உதவியாளராக வேண்டி அவள் மனதை தயார் படுத்துவதாக அனைவரும் எண்ணுவது அவளுக்கு தெரியும்.

உண்மையில், வாக்குறுதிக்கும் கடவுள் வழங்கிய வாய்ப்புக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு நின்றாள். கடவுள் அவளுக்கென்று வழங்கிய வாழ்க்கை என்ன என்பது தெரியும். இது தான் அதை அடையக் கூடிய வழியா என்பதில் தான் நிச்சயமில்லை. பார்ப்பதற்கு சுற்று வழிபோல் தெரிந்தாலும், சரியான வழி என்றே உள்மனம் கூறியது.

ஒரு வேளை இது விஷ்ணுவின் மேல் அவளுக்கிருக்கும் ஈடுபாட்டினாலா அல்லது இது தான் சரியான முடிவா?

அவள் கவனிக்கவில்லை என்றெண்ணி சில சமயம் அவளைப் பார்க்கும் அவனது பார்வைகளை கவனித்திருக்கிறாள்.

மேலும் அந்த கண் சிமிட்டலுக்கு என்ன அர்த்தம்?  புதிய வேலை வாய்ப்பை நோக்கி போகிறாளா அல்லது ஏதாவது கூத்தில் சிக்கப் போகிறாளா?

இதை அறிந்து கொள்ள ஒரே வழிதான். கத்தி முனையில் நடப்பது போன்ற சூழல் தான், ஜோதி தன்னுடைய குறிப்பேடு மற்றும் குழு விவரமடங்கிய காகிதம் சகிதமாக இருக்கையை விட்டு எழுந்தாள்.

விஷ்ணுவை நோக்கி, நிச்சமில்லாத எதிர்காலத்தை நோக்கி நடந்தாள்.

"நான் இந்த வேலையை ஏற்றுக் கொள்கிறேன்."

"சபாஷ்," என்று விஷ்ணு புன்னகைத்தான்.

கதவைத் திறந்து அவளுக்கு வழி விட்டான்.

இருவரும் வெளியே நடக்கையில்  சேர்ந்து  ஜோதியின் இதயம் பந்தக் குதிரையின் வேகத்தில் துடித்தது. இறக்கை கட்டி பறந்தது.

அவர்களுக்கு பின்னால், எதிர்ப்புக் குரல்களின் இரைச்சல் கிளம்பியது.

"என்ன குழப்பமா?" சிறிது நேரம் கழித்து விஷ்ணு கேட்டான்.

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு சரியாகத் தெரியவில்லை. பெரும்பாலும் என்னிடம்
நல்லபடியாகவே நடந்து கொண்ட பாஸிடமிருந்து விலகிவிட்டேன்."

"அந்த 'பெரும்பாலும்' பகுதிதான் என்னை கவலைக்குள்ளாக்கியது."

பள்ளத்தாக்கின் பசுமையான காட்சியிலிருந்து பார்வையை திருப்பினாள்.

விஷ்ணுவுடைய அலுவலகம் முகேஷ் நிறுவன கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்திருந்தது. கட்டிடம் பெரியது என்றாலும் சுற்றுச்சூழலின் அழகை அது பாதிக்கவில்லை. அலுவலகமும் அவள் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. நவீன மயமாக இருப்பதற்கு பதில், வசதியான இருக்கைகள், பச்சை பசீரென்ற செடிகள், ஓவியங்களிலும் இசைக்கலைஞர்கள், கடவுள்கள் என அவனுடைய அறை பார்ப்பதற்கே வீட்டு அறையை போன்றிருந்தது.

"உங்களுடைய அறை இப்படி இருக்கும் என நான் நினைக்கவில்லை."

புரிந்துக் கொண்டவனாய் சிறு சிரிப்புடன், "நவீன மயம் அடுத்த அறையில். அதை சந்திப்புகளுக்கு மட்டுமே நான் பயன்படுத்துவது. வேலை நடத்த இது தான் சரி."

"இந்த மாதிரி பெரிய நிறுவனத்தின் தலைமையகம் அரிமலையில் போன்ற சிற்றூரில் அமைந்திருப்பதே ஆச்சரியம் தான்."

விஷ்ணு பற்கள் பளீரிட புன்னகைத்தான். "இந்த காரணத்துக்காக தான் உன்னை என் செயலாளராக தேர்வு செய்தேன்."

ஜோதி அவனைப் புரியாமல் நோக்கினாள். அவளுக்கும் அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. ஆனால், அவனது தோற்றத்தில் அவளது கேள்வியும், மூச்சும் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. மேஜையில் சாய்ந்து கொண்டு இரு கால்களையும் நீட்டி, குறுக்கே போட்டு விளம்பர மாடலை போல காட்சியளித்தான்.

அவளையே உற்று நோக்கினான்.

"என்ன...?"

"புது பாஸிடம் நிறுவன தலைமைச் செயலகம் பாதாளத்தில் அமைந்திருப்பதாக சொல்லும் தைரியம் எல்லோருக்கும் வந்து விடாது."

அரண்டு போய், அவனை நோக்கி கையை நீட்டியவள், பின்பு கீழே போட்டாள்.

"நான் அப்படி சொல்ல..."

"தெரியும்." என்றவன் அவளை வெறிப்பதை தொடர்ந்தான்.

ஆடை நலுங்கியிருக்கிறதோ, உள்ளாடை வெளியில் தெரிகிறதோ, தலை களைந்துள்ளதோ என்று அறிய கைகள் குறுகுறுத்தன.

ஏற்கெனவே இந்த சந்திப்பை கெடுத்துக் கொண்ட உண்மையை உள்ளுக்குள் ஒத்துக் கொண்டு, நேரடியாகவே கேட்டுவிட்டாள்.

"என்னிடம் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"

"இல்லை," என்றவன், "நன்றாகவே இருக்கிறாய்." தொண்டையை செருமி நிமிர்ந்தவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான்.

"உன்னை செயலாளராக்கும் எனது முடிவு திடீரென்று எடுக்கப்பட்டதல்ல. உன்னுடைய வேலைத் திறன் திருப்திகரமாகவே இங்கு பதிவாகியுள்ளது."

மென்மையான அவனது குரலில் சற்று கடுமையேற அவள் என்ன செய்தாள் என்பது விளங்கவில்லை.

ஜோதி அவளது செயலாளர் தோற்றத்தை வரவழைத்துக் கொண்டாள்.

"நன்றி, சார்."

ஒற்றை விரலை உயர்த்தி, "விஷ்ணு, ப்ளீஸ். என் தாத்தா தான் 'சார்'." என்றான்.

"ஆனால் அலுவலக சந்திப்புகளில் எல்லோரையும் 'சார்' என்று கூப்பிட வைத்தீர்களே."

அவளை பார்த்து திரும்பியவன், ஒரு கன்னத்தில் குழி விழ சிரித்தான்.

அவனோடு வேலை பார்ப்பதென்பது பெரும் சவால் என்பதை உணர்ந்தாள்.

"நான் மாற்ற எண்ணும் நிறுவன சம்பிரதாயங்களில் அதுவும் ஒன்று. உன்னிடமும் யோசனைகள் இருக்கின்றன."

அவனது வாக்கியத்தை கேள்வி என்று தவறாக நினையாமல், "ம்... இருக்கிறது." என்றாள்.

வசதியான இருக்கைகளில் ஒன்றில் அமருமாறு அவளை அழைத்தான்.

"இதற்கு முன்னால் எப்போதாவது இந்த நிறுவனம் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறதா?" என்று ஜோதி வினவினாள்.

விஷ்ணு தலையசைத்து, "முன்பு ஒரு தரம். எழுபதுகளில், பெரியவருக்கு சலிப்பேற்பட்ட சமயம் தன்னுடைய சந்தோசத்துக்காக சுற்றியிருக்கும் அனைத்தையும் மாற்றினார்."

"உங்களுடைய குறிக்கோளும் அது தானா, அத்தனை பேரின் வேலையையும், வாழ்வின் ஆதரத்தையும் மாற்ற எண்ணுவது சுய சந்தோசத்துக்காகவா?"

அவளுடைய குற்றச்சாட்டைப்  பொருட்படுத்தாமல் சிரித்தவன், இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, "சொல்லப் போனால், அது தான் உண்மை." என்றான்.

6. நான் அப்படி இல்லை.

 விஷ்ணு ஜோதியிடம் உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே கூற எண்ணினான்.

ஆனால் அவன் எதிலும் முழுமையை எதிர்பார்ப்பவன், இந்த விஷயத்திலும் முழுமை இருக்க வேண்டுமென்றால், அவன் ஏன் எதனால் முகேஷ் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்றான் என்ற முழுக் கதையும் கூறியாக வேண்டும்.

பொதுவாக விளக்கம் கிடைக்க அவனை வலியுறுத்த வேண்டியிருக்கும், ஆனால் ஏனோ ஜோதியின் கருத்து அவனுக்கு முக்கியமாகப் பட்டது. அதுவும் ரெம்பவே. அதனாலே, நிறுவனத்தில் வெகு சிலருக்கு மட்டும் தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்தினான்.

"நான் ஒரு சாத்தியமில்லாத சிஇஓ." என்றான் அவன், "இந்த நிறுவனத்தை எடுத்து நடத்துவதென்பது எனது விருப்பதுக்கு எதிரானது."

அவனது வெளிப்படையான பேச்சு அவளை ஆச்சிரியப் படுத்தியிருந்தாலும் அவள் அதை வெளிக் காட்டவில்லை.

"உங்களால் எப்படி இதையல்லாம் விரும்பாதிருக்க முடியும்?" அந்த வசதியான அறையை கையால் சாடை காட்டி வினவினாள். "எத்தனையோ பேர் வாழ்நாள் முழுவதும் உழைத்தும் இந்த இடத்தை எட்ட முடிவதில்லை."

அவன் தரப்பு கருத்தை அவள் புரிந்து கொள்ளவில்லை என்ற விரக்தியில் விஷ்ணு விரல்களால் முடியை கோதி விட்டான். "நீ வெற்றி வலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் என்று நான் நினைக்கவில்லை."

"நான் அப்படி இல்லை." என்று வெடித்தாள். "அதே சமயம் உண்மையான உழைப்புக்கு கிடைக்கும் வெற்றியை மதிப்பவள் நான். உங்களுடன் இடம் மாற்றிக் கொள்ள நொடிப் பொழுதும் தயங்காதோர் எத்தனை பேர்."

"நீயும் கூடவா?"

அந்த கேள்விக்கு பதில் சொல்லி அவள் தன் கௌரவத்தை குறைத்துக் கொள்ளாததால், அவன் தொடர்ந்தான்.

"நான் மற்றவரோ பெரும்பாலானோரோ இல்லை." என்றான் அவளிடம்.

"இதில் நான் சௌகரியமாக இல்லை. இது எனக்கானது அல்ல" என்றவனின் கை அவளுக்கு அருகேயிருந்த விலையுயர்ந்த பூஜாடியை தட்டியது.

ஜோதி அதை பிடிக்க எத்தனித்தாள், ஆனால் விஷ்ணு அதில் கவனமின்றி நிலைப்படுத்தினான்.

"யாரிடம் அதிகம் கொடுக்கப் படுகிறதோ அவரிடம் அதிகம் எதிர் பார்க்கப்படுகிறது," என்றாள் ஜோதி.

ஒரே சுழற்சியில் திரும்பியவன், "சரியாகச் சொன்னாய். மேலும் எனக்கு அருளப்பட்ட மற்ற திறமைகள் இதனால் வீணாகிறது." என்றான்.

ஜோதி தலையத்தாள். "உங்களுக்கு சலித்து விட்டது என்பதற்காக அத்தனை பேரின் வாழ்க்கையிலும் குழப்பத்தை உண்டு பண்ண நினைப்பதில் கொஞ்சம் கூட நியாயமில்லை." என்றாள்.

"உன்னுடைய கோணத்திலிருந்து மட்டுமே இதை பார்க்கிறாய். என்னுடைய இருக்கையிலிருந்து பார்த்தால் இதெல்லாம் அவ்வளவு பயங்கரமாகத் தெரியாது."

நீண்ட நேரம் மௌனமாய் இருந்தான். அவனது மௌனம் அவளது கருத்தை மாற்றவில்லை. சொல்லப் போனால், அவனுக்கு சரிசமமாய் வாதிட்டுக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள். இந்த மாதிரி அவனோடு சமமாய் அமர்ந்து பேசுவாள் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அவள் குடிப்பதற்கு குளிர்பானம் வழங்கினான். அவள் பானத்தோடு அமரவும், விஷ்ணு ஜன்னலை அடைந்தான். அவளோடு பேசினாலும், வெளிப்புறக் காட்சியிலிருந்து அவன் பார்வையை திருப்பவில்லை.

"உண்மை என்னவென்றால், சில காலமாகவே நாம் லாபங்களை இழந்து கொண்டிருக்கிறோம். பொருள் விற்பனையால் அல்ல, ஆனால் வளர்ச்சிக்கு வேண்டிய வாய்ப்புகளை தவற விடுவதால். அதில் மாற்றம் கொண்டு வர முடியும்." என்றபடி அவள் புறம் திரும்பினான்.

பிறகு தலையை ஆட்டி அவளது கருத்தை ஒப்பினான்.

"எனக்கு சலிப்பு தட்டியது நிஜம் தான். அத்தோடு என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை சரிவர நிர்வகிக்க வேண்டிய கடமையும் இருக்கிறதே."

"கடவுளை நம்பி செய்யும் எந்த காரியத்துக்கும் கை மேல் பலன் கிடைக்கும். நான் உணர்ந்திருக்கிறேன்."

ஒருகணம் ஆச்சரியமாய் பார்த்தவன், பிறகு மெல்ல முகம் மலர சிரித்தான். "கடவுள் பக்தி அதிகம் போல."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தொழிலும் பக்தியும் ஒன்று சேராது போல."

"இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையக் கூடியதே. அதற்கு உதாரணமே நான்."

கடைசியில் இருவருக்கும் இடையில் இருந்த ஒருமித்த கருத்தை அறிந்த பின், கிட்டதட்ட முக்கால் மணி நேரம் முகேஷ் நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைப் பற்றி பேசுவது எளிதாய் இருந்தது.

ஜோதியின் இதர வேலைகளைப் பற்றி விஷ்ணு விளக்கிக் கொண்டிருக்கையில், அவனது மேசையில் இருந்து இதமான மெல்லிசை ஒலித்தது.

"ஓ..." என்று குதித்தெழுந்தான். "எனது அலாரம்."

"அலாரக் கடிகாரத்தில் சாக்சாபோன் இசையா?"

ஆம் என்று தலையசைத்தபடி அதை நிறுத்தினான். "தனிப்பட்ட தயாரிப்பு."

அவன் கைக்கடிகாரத்தை நோக்குவதைக் கண்டாள்.

"முடிக்க வேண்டியது வேறெதுவும் இருக்கிறதா?"

"இப்போதைக்கு இல்லை," என்றவன், அவளிடம், "இத்தோடு இன்றைய தினத்தை நாம் ஏன் முடித்துக் கொள்ளக் கூடாது?" வினவினான்.

"மணி 3.30 கூட ஆகவில்லை. விற்பனைத் துறையில் நான் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகள் எனக்கு இருக்கிறது."

கதவு வரை சென்று சம்பிரதாயத்துடன் கை குலுக்கி அவளை வாழ்த்தி விடை கொடுத்தான்.

"குமரவேலை பற்றிய கவலை வேண்டாம். ஏதாவது தொந்தரவு கொடுத்தால், எனக்கு தெரியப்படுத்து."

அப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவள் நம்பவில்லை.

( தொடரும்...)

முந்தைய பதிவிற்குச் செல்ல                                தொடர்ச்சி அடுத்த பதிவில்

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.