|
குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்
மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா

7. விஷ்ணுவின்
நண்பன்
அன்று நடந்தவற்றை நினைக்கையில், சந்திப்பில்
நடந்து கொண்டதற்கும், ஜோதியிடம் மனம் திறந்து
பேசியதற்கும் உண்மையாய் தோன்றக் கூடிய ஒரு காரணத்தைக் கொண்டு வர முயன்றான்.
என்ன முயன்றும் ஒன்றைக் கண்டு கொள்ள முடியவில்லை.
முகேஷ் நிறுவனத்தில் துரித முன்னேற்றம் கண்டவள்
ஜோதி. இன்று பகல் தன் மனதில் இருப்பதை தைரியமாக வெளிப்படுத்த முடியும் என்றும்
காட்டி விட்டாள்.
மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், மனத்தின்மையுடன், கம்பனி
வளர்ச்சிக்கு மிகச் சிறந்த ஆலோசனைகைளும் அவனுக்கு வேண்டியிருந்தது. அவை வனப்பான
மேனியும், மயக்கும் புன்னகையும் கொண்டவளிடம் இருப்பது அவனது குற்றமல்லை.
"அதனாலே நீ பொறுப்பற்றவன் ஆகிவிட முடியாது," என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு
தனது
ப்ரீப்கேசைப் பற்றினான்.
அவளது வேலை அறிவிப்பை பொதுக் கூட்டத்தில் அறிவித்திருந்தாலும், உண்மை என்னவோ
அவளது வேலை நன்னெறியும், ஆர்வமும், ம்ம்.. ஆமாம், திருமதி உஷா வீட்டில் இருந்த
புகைப்படத்தில் அவளது புன்னகையையும் பார்த்ததிலிருந்தே அவனுக்கு என்னவோ ஒரு வித
தீராத ஆவல்.
அரிமலைக்கு திரும்பிய நாளிலிருந்து அவன் பங்கேற்று வரும் சமூகக் கூடத்தின்
பொதுச் செயலாளர் திருமதி உஷா. பெரியவர் நடத்திய ஹார்ட்-அட்டாக் நாடகம் அவனை
ஊருக்கு இழுத்து வந்தது.
தனது பேரப் பிள்ளைகளுள் பொறுப்பான வாரிசைக் கண்டு கொள்ள வேண்டி, சி.பி.முகேஷ்
தனது செயலாளர் மூலம் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். இருவர் அக்கறையுடன்
விசாரித்தார்கள், மற்றவர்களோ திரும்ப போன் செய்து கூட விசாரிக்கவில்லை. ஆனால்
பதற்றத்துடன் ஓடோடி வந்தது விஷ்ணு தான், இளிச்சவாயன். அவனது மற்ற ஒன்றுவிட்ட
சகோதரர்களுக்கோ ஒன்று அக்கறையில்லை இல்லாவிட்டால் தங்களுடைய சீரான வாழ்க்கையை
குழப்பிக் கொண்டு, அந்த ஆடம்பர வாழ்க்கைக்கே காரணமான பெரியவரை, விசரிக்க
விரும்பவில்லை.
நடப்பு முறை அவனுக்கு சலித்து விட்டதாக ஜோதியிடம் அவன் கூறியது உண்மை.
அவன் குழுக்களை பிரித்த விதம் பார்க்க இலகுவாக
தோன்றினாலும், ஊழியர்களின் பட்டியலை மிக நுணுக்கமான முறையில் அலசி ஆராய்ந்து
வகுக்க அவனுக்கு அதிக நேரம் பிடித்தது. கம்பனியை மேம்படுத்தும் வளர்ச்சிக்கான
மாற்றங்களும், சாத்தியக் கூறுகளும் அவனைப் பரவசப்படுத்தியது.
அதே சமயம் அதற்கு சமமான முக்கியமான வேலையொன்றும் அவனுக்கு இருக்கிறது.
அவனது அலுவலக அறைக்கு வெளியே இரு புறமும் நோட்டமிட்டான், பிறகு சர்விஸ்
எலிவேட்டரை நோக்கிப் பாய்ந்தான் - அவன் இரகசியமாய் தப்பியோடும் வழி.
அவனது பதவியில் பல வசதிகள் உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவற்றில் சில
இப்படி
திருட்டுத்தனமாய் வேலை நேரம் முடியும் முன்பே வெளியேறுவது - பாஸாய் இருப்பதற்கு
ஒரு அர்த்தம் வேண்டாமா - மற்றும் ஜோதியை சந்திக்க முடிவது.
"சற்று பரிதாபமானது தான், முகேஷ்," தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.
கார்களை நிறுத்தும் தளம் நோக்கி எலிவேட்டர் இறங்கிய நேரத்தில், கழுத்தில்
இருந்த டையை உருவி தனது சூட் ஜாக்கட் பையில் செருகினான். அடுத்து, வெள்ளைச்
சட்டை காலரை தளர்த்தினான். தனது அதிகாரிகளின் ஆடம்பர கார் அனிவகுப்புக்குப்
பக்கத்தில் நின்றிருந்த தனது பழைய பிக்-அப் டிரக்கை அடைந்த நேரத்தில்
விஷ்ணுவுடைய தோற்றமே மாறி விட்டிருந்தது.
நேரமாகிவிட்டதால், தனது காற்சட்டையை அவன் ஒன்றும் செய்வதற்கில்லை. சட்டையை
இழுத்து விட்டு விரல்களால் முடியை கோரி விட்டான்.
தனது சூட் ஜாக்கட்டையும், பெட்டியையும் பின்புற இருக்கையில் வீசி விட்டு,
கால்களில் இருந்த விலையுர்ந்த காலணிகளிலிருந்து சௌகரியமான பழைய காலணிகளுக்கு
மாறினான். அந்த காலணிகளும் டிரக்கைப் போல அவனது சொந்த விருப்புக்குரியவை.
பயன்பாட்டுக்கும், நடைமுறைக்கும் எளிதான டிரக்கை விஷ்ணு பெரிதும் விரும்புவதற்கு
காரணம், அது பெரியவரை வெறுப்பேற்றியது.
சில நிமிடங்கள் கழித்து, அந்த காபி விடுதியின் கார் நிறுத்துமிடத்தை அடைந்தான்.
"ஹே, விஷ்ணு. என்னப்பா இவ்வளவு நேரம். பகல் பொழுது முடியப் போகிறது."
"சாரி. வேலையில் மாட்டிக் கொண்டேன்."
நீல்கமல் அவனை மேலிருந்து கீழாய் பார்த்தான். "உன்னை பார்த்தால் பணக்கார
சாம்ராஜ்யத்தைக் கட்டியாலும் சக்தி வாய்ந்த தலைவனாய் தெரியவில்லை. "
தனது நீண்ட நாள் நண்பனின் பின்னலிட்ட முடியையும், நாடியில் ஒற்றைப் புள்ளியாய்
இருந்த தாடியையும் பார்த்து விஷ்ணு புன்னகைத்தான். "நீ கூடத்தான் பார்ப்பதற்கு
கிரிமினாலஜி பிஹச்.டி போல் தோன்றவில்லை."
"ம் ஒப்புக் கொள்கிறேன், நண்பா."
"எல்லோரும் வந்தாயிற்றா?"
"உனக்காகத் தான் காத்திருக்கிறார்கள். "
இருபது நிமிடம் கழித்து, நீலன் டிரம்மும், விஷ்ணு சாக்சாபோனும் வாசிக்க, அந்த
காபி விடுதியின் இசைக் குழு தனது ஒத்திகையை ஆரம்பித்தது.
8. உஷா சித்தி
ஜோதிக்கு விஷ்ணு முகேஷ் குடும்ப தொழிலுக்கு
வந்த காரணம் விளங்கியது. ஆனால் அரிமலை போன்ற சிறிய ஊரில் வாழ வந்தது தான் ஏன்
என்று விளங்கவில்லை.
கிராமங்களுக்கே உரிய சுகம் அந்த டவுனில் இருக்கவே செய்தது. தினமும் காலையில்
நாற்பது நிமிடங்கள் பிரயாணம் செய்து அரிமலையை அடைவதில் அவளுக்கு ஒன்றும்
கஷ்டமில்லை என்றாலும், அங்கேயே வாழ்வதென்பதை அவளால் நினைத்துக் கூட பார்க்க
முடியாது. உஷா சித்தி மற்றும் சிலரைத் தவிர அவளது குடும்பக் கிளையில் உள்ள
அனைவரும் சுற்றியுள்ள பெரிய பெரிய ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.
உஷா, ஜோதிக்கு மிகவும் பிடித்த சித்தி, அந்த ஊரின் சமூகக் கூடத்தின் பொதுச்
செயலாளர். எல்லா வகையிலும் ஆனந்தமான அந்த சிறிய ஊரில் தனக்கென்று இல்லம்
அமைத்துக் கொண்டு, பெரிய இடங்களுக்கு மாறக்கூடிய வாய்ப்புகளை நிராகரித்து
விட்டார்.
அங்கே என்னவெல்லாம் இல்லை என்பதை விட என்ன இருக்கிறது என கவனித்தாள்.
ஒரு ஐஸ்கிரீம் கடை, சில கலைக் கூடங்கள், அழகான
சிறிய கபே. பப்ளிக் பார்க்கில் ஒரு பெரிய வெள்ளை கூரையிட்ட மேடை நின்றது.
கோடையில் பிக்னிக் போவதற்கு சரியான இடம். மேடையில் இசைக் கச்சேரி நடந்தால்
இன்னும் நன்றாக இருக்கும்.
"அது சரி, பிக்னிக் போவதற்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கிறது பார்." என்று தனக்கு
தானே சொல்லியபடி முக்கியச் சாலையிலிருந்து சித்தி வீட்டுக்கு போகும் பாதையில்
வண்டியைத் திருப்பினாள்.
அவள் விழித்தாள், பின் முகம் சுழித்தாள். பிக்னிக் போவதற்கு அவளுக்கு ஏன்
நேரமில்லை? மற்றவர்கள் போகவில்லை? வாழ்க்கையில் ஒய்வும் இருக்க வேண்டும்.
சித்தி வீட்டின் போர்ட்டிகோவில் வண்டியை செலுத்திய நேரம், வாழ்க்கை தன்னை விட்டு
நழுவிக் கொண்டிருப்பதை ஜோதி உணர்ந்தாள். பட்டம் பெற்றதிலிருந்து வேலையில்
வேகமாக இருந்து விட்டாள். பின்னே வாழ்க்கையில் சந்தோசம் எப்போது ஆரம்பிக்கும்?
இப்படியே போனால் அவளது வாழ்வில் காதலுக்கு ஏது நேரம்?
வேலையுடன் வாழ்வையும் அனுபவிக்கத் தெரிவதே இரகசியம்.
மல்டி மில்லியன் டாலர் கம்பனிக்கு பொறுப்பு என்றாலும், விஷ்ணு முகேஷ் வேலையோடு
வாழ்க்கையையும் அனுபவிக்கக் கற்றிருந்தான். சாக்சாபோன் அலாரம் , அவளுடைய
மண்டையைக் குடையும் தேனீக்குரல் அலாரம் போலில்லை - செய்து கொண்டிருப்பதை
நிறுத்திவிட்டு அடுத்ததற்கு செல்ல நினைவூட்டியது.
"சித்தி."
"சமையலறையில் இருக்கிறேன்," உஷா கூப்பிட்டாள்.
" பின்புறம் வா. "
உஷாவின் அந்த பெரிய சமையலறையில் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விருந்துகள் நடந்து
விட்டன. இப்போது கூட, பார்க்கும் இடமெல்லாம் குக்கீஸ் நிரம்பிய தட்டுகளாய்
காட்சியளித்தது.
"ஆ..ஆ!" என்றபடி உஷா இரு கைகளிலும் இரு தட்டுகளை ஏந்தியபடி ஓவனின் கதவை மூட
முயன்றாள்.
"நான் பிடித்துக் கொள்கிறேன்." என்று ஜோதி ஓவனை கவனிக்க உஷா சின்கின் ஓரத்தில்
தட்டுக்களை வைத்தாள்.
"பிஸ்கட் பாக்டரி போல் காட்சியளிக்கிறது. "
உஷா சிரித்தபடி கையுறைகளைக் கழற்றினாள். "ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில்
குழந்தைகளுக்கு கொடுக்கவென்று ஆரம்பித்தேன். பிறகு தான் பெரியவர்களும்
விரும்புவார்கள் என்று தோன்றியது. "
பேச்சின் போக்கு அவள் விரும்பிய மாதிரி இருக்கவே, "சமூகக் கூடத்திலா?" என்று
ஆவலோடு கேட்டாள்.
"உம்," என்றாள் உஷா ஆறிவிட்ட தின்பண்டங்களை சரி பார்த்தப்படி.
"விஷ்ணு முகேஷை தெரியுமா? "
புன்னகையுடன், "தெரியுமாவா? கிட்டத்தட்ட அவனை வளர்த்ததே நான் தான். சிறப்பாக
வளர்ந்திருக்கிறான். என்னதான் வேலையால் நேரமில்லாமல் இருந்தாலும், சமூகக் கூட
நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவறுவதில்லை." என்றாள் உஷா.
ஏற்கெனவே தன் மேல் தவறிருப்பதாய் உணர்ந்திருந்த வேளையில், அந்த வார்த்தைகள்
அவளைக் கண்டிப்பது போல் இருந்தது. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்தில் உஷா
சொல்லவில்லை என்பது ஜோதிக்குத் தெரியும்.
"இவ்வளவு காலத்திற்கு அப்புறம் நீ அவனுடைய வேலையில் மாட்டிக் கொள்ளவில்லையே?"
"சொல்லப் போனால் மாட்டிக் கொண்டு விட்டேன்," என்றாள் ஜோதி. "இன்று எனக்கு
முக்கியமான பதவி உயர்வு கொடுத்தார். "
உஷா இரு கரங்களையும் தட்டி, "ஜோதி, சந்தோஷமான விஷயம் அது." என்றாள்.
"அப்படியா நினைக்கிறீர்கள்."
"அதில் என்ன தப்பு ஜோதி?"
அவள் தோளைக் குலுக்கி, "தெரியவில்லை. எனக்கு வாழ்க்கையில் இதை விட மேலான ஒன்று
வேண்டும். பதவி உயர்வு பெரிது தான், ஆனால்..." மீண்டும் தோளைக் குலுக்கி, "எதையோ
தொலைத்த உணர்வு இருக்கு. இது எனக்கு திருப்புமுனை மாதிரி. சிறப்பாக செயல்பட ஒரு
வாய்ப்பு."
"அதாவது 'ஜஸ்ட் ரைட் பார் யூ' ஆரம்பிப்பது மாதிரி, சமீப காலமாக நீ பேசி
வருகிறாயே அந்த தொழில் மாதிரி?".
9. உன்னை விரும்புகிறேன்.
தங்களது ஒத்திகை முடிந்து,
நீலனுடன் விஷ்ணு அந்த காபி விடுதியில் அமர்ந்திருந்தான். இருவரின் முன்னாலும்
இரு நீண்ட தம்ளர்களில் குளிர்ந்த நீர் அமர்ந்திருந்தது.
"அதிகக் கவலையுடன் தெரிகிறாய். விட்டால் சோக கீதமே வசிப்பாய் போல. என்ன ஆச்சு?
"
விஷ்ணு தம்ளரின் ஒரத்தை சுற்றி விரலால் வருடி, அதில் வளைந்தோடும் நீர்த் துளிகளை
கவனித்தான். "எனது கனவு நாயகியை சந்தித்தேன்."
"ஆனால் அது சரியில்லை காரணம்?"
"அவள் எனக்கு கீழ் வேலை பார்ப்பவள்."
"ஹீம்..ம். அது சரியில்லை தான்," என்ற நீலன், "அவளை வேலையிலிருந்து நீக்கி விடு."
என்றான் எளிதாக.
விஷ்ணு தலையசைத்தான். "அவள் திறமையானவள். மிகவும் திறமையானவள். "
நீலன் ஒரு கணம் தனது நண்பனை கூர்ந்து நோக்கினான். "அதனால் மீண்டும் தியாகி
பாத்திரத்தை ஏற்கத் தயாராகி விட்டாய் போல. உனக்கு அந்த பாத்திரம் பழகி விட்டது. "
அவனது வார்த்தைகள் குத்தினாலும் அதுதான் உண்மை. அதற்காக விஷ்ணு வெட்கப்படவோ
ஒப்புக் கொள்ளவோ வேண்டுமென்றில்லை. "நான் தியாகி இல்லை."
"ஹூம்," என்று மட்டும் சொன்னான் நீலன் அட்டவணையைப் படித்த படி. அந்த விடுதியில்
பணிபுரிபவள் அவர்களின் தம்ளர்களை மீண்டும் நிரப்பி, பலவகை பிஸ்கட்டுகள் அடங்கிய
சிறு கூடையும் வைக்க வந்தாள். நீலன் காய்கறி சான்விச் ஒன்று சொல்லிவிட்டு
விஷ்ணுவின் பக்கம் திரும்பினான்.
"ஏதாவது வேண்டுமா? "
விஷ்ணு மறுப்பாய் தலையசைத்தான்.
"அவனுக்கு வழக்கமானது " என்று அவளிடம் நீலன் கூறினான்.
"ஒத்திகை நன்றாகப் போனது, ஆனால் நீங்கள் டல்லாக தெரிகிறீர்களே, உடம்புக்கு
ஒன்றுமில்லையே? " என்று அவள் வினவினாள்.
கவனம் சிதறியவனாய் விஷ்ணு தலையசைத்தான்.
மீண்டும் தனிமையில், விஷ்ணு ஆழ்ந்த யோசனையோடு நண்பனை நோக்கினான். "இதையே எல்லா
நேரமும் செய்ய முடியாதா என்று ஏங்குகிறேன். இசை தான் என் முதல் காதல்."
"உன்னால் முடியும்," என்றான் நீலன் பிஸ்கட்டை சுவைத்தபடி. "அதாவது நீ உண்மையில்
விரும்பினால். ஆனால் அனுதாபத்துக்குரிய வாரிசாய் இருக்கவே விரும்புகிறாய். என்
ஒருவனால் மட்டுமே அன்றைய தினத்தை காக்க முடிவது போல. "
விஷ்ணு விளங்கிக் கொள்ளும் ஆவலோடு அவனை நோக்கி, "அப்படி என்றால்?" என்று
வினவினான்.
"பெரியவர் முகேஷ் தன்னுடைய கண்ணுக்கு கண்ணான கம்பனியின் பொறுப்பை யார் வந்து
கதவை தட்டினாலும் கொடுத்து விடுவார் என்று நினைக்கிறாயா? அவர் எதிர்பார்த்தது
போல் நீ வராமல் போனாலும் அவரிடம் சரியான பின்புலத் திட்டம் ஒன்று கண்டிப்பாக
இருந்திருக்கும் என்னை நம்பு. "
சிறிது நேரம் அதைப் பற்றி அசை போட்டான். நீலன் சொல்வது சரி - மீண்டும்.
தாத்தாவின் அழைப்புகளை மற்றவர்களைப் போல் அவனாலும் அலட்சியப் படுத்தி இருக்க
முடியும். ஆனால் அவன் விரும்பியபடி தொழில் உலகில் முத்திரை பதிக்க கூடிய
வாய்ப்பு என உணர்ந்திருந்தான்.
பொறுப்பேற்ற இத்தனை மாதங்களில் அவன் செய்து
வந்ததெல்லாம் நேரத்தைக் கடத்தியது மட்டுமே. இப்போது, கம்பனி மாற்று அமைப்பின்
கீழ், நல்லதொரு புதிய மாறுதல்களை ஏற்படுத்த ஆவலோடு காத்திருந்தான்.
துரதிஷ்டவசமாக கீழே வேலை பார்க்கும் ஒருத்தியைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையால்
அதுவும் கஷ்டமே.
அடுத்த நாள் ஜோதி, முந்திய நாள் பேச்சுக்களால் சங்கடம் ஏற்படுமோ என்ற கவலையோடு
வேலைக்கு வந்தாள்.
ஆனால் விஷ்ணுவோ வேலையில் மூழ்கியிருந்தான்.
என்ன வேலை செய்ய வேண்டுமென்ற அவசர விளக்கத்தோடு
அவளை தனித் துறை சந்திப்புகளுக்கு அனுப்பி வைத்தான்.
அவனது பெரிய அறைக்கு அடுத்திருந்த அவளது புதிய அலுவலக அறைக்குள் அவன் தலையை
நீட்டிய போது மணி நான்கு.
"ஒரு நிமிடம் வந்து போக முடியுமா?"
அவள் குறிப்பேட்டையும் பேனாவையும் எடுக்கக் கை நீட்டினாள்.
"அதற்கு அவசியமிருக்காது" என்றான் அவன்.
ஜோதி அவனைப் பின் தொடர்ந்து சென்று , நவீன மயமான அறைக்குள், அவன் காட்டிய
இருக்கையில்
அமர்ந்தாள்.
"நேற்று நடந்ததைப் பற்றிப் பேச வேண்டும்," என்று ஆரம்பித்தான். பின் தலைக்குள்
கையை விட்டு முடியைக் கோரி விட்டான். எப்போதும் அமைதியானவனின் சற்றுக் கவலையான
தோற்றம் ஜோதியை தாக்கியது.
"நேற்று நான் முழு உண்மையையும் உன்னிடம் கூறவில்லை. " என்றான் அவளிடம்.
"எதைப் பற்றி?"
"நான் உன்னைத் தேர்ந்தெடுத்தது பற்றி. "
ஜோதி இருக்கையின் கைகளை இறுகப் பற்றினாள். தந்த வேலையை வாபஸ் பெற போகிறானா?
"நான் உன்னை என் முக்கிய உதவியாளராக அறிவித்ததன் காரணம் உன் வேலைத் திறமை,"
என்றவன், "ஆனால் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. நான் பெருமைப்பட முடியாத ஒரு
காரணம்." என்றான் விஷ்ணு.
அவன் தொடர காத்திருந்தாள்.
"நான் உன்னை விரும்புகிறேன், ஜோதி. உன்னை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே
விரும்புகிறேன்."
என்றான்.
அவளும் அவனை விரும்புவதாகச் சொல்ல வாயைத் திறந்தாள், ஆனால் கையை உயர்த்தி அவளை
நிறுத்தினான்.
"சில சட்டங்கள் இருக்கின்றன அவற்றை மீறுவதாக உணர்கிறேன். நமக்குள் எந்த விதமான
தர்ம சங்கடமும் நிலவ நான் விரும்பவில்லை."
அவளும் அதைப் பற்றி தான் கவலைப் பட்டாள். அதுவும் அதே காரணத்துக்காக.
"சமீபத்தில் தான் உனக்கு வேலை அளித்தேன் என்பதை அறிவேன், இருந்தாலும் நீ வேறு
எங்காவது வேலை பார்க்க விரும்பினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
நியாயப்படி, இங்கிருந்து செல்ல வேண்டியது நான்தான் என்று நினைக்கிறேன்."
"அதற்கு அவசியமே இல்லை," என்றாள் அவனிடம். அவள் எழுந்தாள் கவனத்தோடு அவனை
அணுகினாள்.
"உங்களிடம் இருக்கும் அதே உணர்வுகள் பரஸ்பரம்
என்னிடமும் உள்ளதாக நான் சொன்னால் உங்களின் பதில் என்ன?"
( தொடரும்...)

முந்தைய
பதிவிற்குச் செல்ல
தொடர்ச்சி அடுத்த பதிவில்

|