........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

10. பழங்காலப் பண்டரிபாய்

விஷ்ணு அவளுடைய தோள்களை இறுகப் பற்றி அவளது கண்களை சந்தித்தான். "நீ என்ன சொல்கிறாய்?"

"அட்சரம்பிசகாமல் நீங்கள் எண்ணுவதே."

விஷ்ணு அவளுடைய கூந்தலின் வாசனையை நுகர்ந்தபடி ஒரு கணம் கண்களை இறுக மூடினான். "உன்னுடைய லட்சியம் என்ன? மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, நினைவிருக்கும் நேரமெல்லாம் அடைய வேண்டுமென்று நினைக்கும் ஒன்று?"

ஜோதி விழுங்கினாள். பார்வையைத் தாழ்த்தினாள். அவளால் அதை கூற முடியாது. அவளது நெருங்கிய தோழி கூட - இதுவரை அவள் ஒருத்தியிடம் மட்டுமே கூறியிருக்கிறாள் - அவளை கிண்டலாய்ப் பார்த்தாள்.

ஒருவேளை குடும்பப் பாங்கான படங்களும் கதைகளும் அதிகம் பார்ப்பததாலே சற்று பழங்காலமாகவே மாறிவிட்டாள் போல. வேலைக்குச் செல்லும் புதுமைப் பெண் ஸ்தானம் ஏற்பதற்கு முன், ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் மாறி இனிய இல்லறம் நடத்தி குழந்தைகள் சிறப்பாக வளர்வதை பார்த்து அனுபவிக்கவே ஆசைப் பட்டாள். இதை அறிந்த நிக்கி கூட அவளை பழங்காலப் பண்டரிபாய் என்று கிண்டல் செய்தாள்.

அவள் விரும்பிய எதுவும் அப்படியே பூமியில் முளைத்து விடாது என்பதால், இத்தனை ஆண்டுகளும் வேலையிலே கவனத்தை செலுத்தினாள்.

"ஆமாம், அடைய முடியாத சில ஆசைகள் எனக்குண்டு." என்றாள் விஷ்ணுவிடம்.

"அடைய முடியாதா," அவன் சவால் விட்டான், "அல்லது தேடிச் சென்று அடைவதற்கு பயமா?"

அவள் வெடுக்கென்று நிமிர்ந்தாள்.

அவள் வரமாய் கருதுவதை அடைவதற்கு அவளுக்கு பயமா, அவள் மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டிக் கொண்ட வரம்?

"வேண்டியது கிடைக்கும் வரை வேண்டிக் கொண்டே இரு" என்று உஷா சித்தி அடிக்கடி கூறுவாள்.

அவன் - விஷ்ணு முகேஷ் - தான் அந்த வேண்டுதலா?

விஷ்ணு முகேஷ் தான் அவளுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை என்ற அனுமானமே சாத்தியமற்றது. அதன் உள் அர்த்தங்களும் அப்படியே. ஒருவேளை அவன் சொன்னதன் அர்த்தத்தை அவள் சரியாக விளங்கியிருக்க மாட்டாளோ.

"உங்கள் கேள்வியை திரும்பக் கேட்க முடியுமா?"

"அது கேள்வி என்பதில்லை, ஜோதி, சாதாரண வாத்தைகள். சில நேரங்களில் மனிதர்கள் தங்களுடைய லட்சியத்தை அடைய அஞ்சுவார்கள். வெற்றிப் பாதையின் ஆரம்பத்தில் தடையாய் அமைவதே அவர்களின் இந்த பயம்தான்."

ஜோதி கண்மூடித்தனமானவள் இல்லை. அவள் எப்போதும் பட்டியல், திட்டங்களுடன் மாற்றுத் திட்டங்களும் வைத்திருக்கும் பெண். ஆனால் அடுத்து அவள் கூறிய வார்த்தைகள் அவளையே அதிரச் செய்தது.

"என்னை முத்தமிடுங்கள், விஷ்ணு."

இப்போது விழிப்பது அவன் முறையாயிற்று. அவன் விழுங்கினான். பிறகு அவளைப் அதிர்ச்சியோடு பார்பதைக் கண்டாள். அவன் ஒரு அடி பின்னே வைத்தான். அவள் இரண்டடி முன்னே வைத்தாள்.

"என்னை முத்தமிடுங்கள், விஷ்ணு."

"இதோ பார் ஜோதி. இது ஒன்றும்..."

அவனது கரத்தைப் பற்றி, முன்னே சென்று அவளுடைய இதழ்களை அவனது உதடுகளில் பதித்தாள். ஒரு கணம் கழித்து, அவனது கரங்கள் அவளது இடுப்பைச் சுற்றி இறுக அணைத்தன.

அவனோ அவளோ முத்ததில் ஆழ்ந்துவிடு முன் ஜோதி விலகினாள். இதயம் படப்படக்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனும் அவளைப் போலவே மலைத்துப் போயிருந்தான்.

"எதற்காக அப்படி செய்தாய்?" என்று வினவினான்.

"எனக்கு வேண்டியதை தேடிப் போகுமளவு தைரியம் இருக்கிறதா என்று பார்த்தேன்."

**********************

வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், தன்னுடைய கண்மூடித்தனமான செயலுக்கு தன்னைத் தானே திட்டிக் கொண்டே வந்தாள். அவளாகவே அவன் மடியில் போய் விழுந்து கௌரவத்தை குறைத்துக் கொண்டாளே. இந்த மாதிரி விஷயங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்படி நடந்ததில் அவளுக்கு சந்தோஷமே. இருவரும் முத்தமிட்டுக் கொண்ட அந்த சில விநாடிகளில், தன் கனவுகளெல்லாம் மெய்ப்பட போகிறதென்ற தெம்பு வந்திருந்தது.

அவளுக்கு கிடைத்ததைக் கொண்டு முயற்சி செய்து சொந்தக் காலில் நிற்கப் போகிறாள். அவளுக்கு கிடைத்ததாக சொன்னது அலுவலகத்து புது வேலையை அல்ல மாறாக அவளது லட்சியத்தை நோக்கி பயணிக்க - அதுவும் இப்போதே - கிடைத்த சந்தர்ப்பத்தை. கதவுகள் திறந்தாகிவிட்டன. அவள் செய்ய வேண்டியதெல்லாம் உள்ளே சென்று அவளது வரங்களைப் பெறுவதே.

அன்று இரவு, அவள் போட்டு வைத்திருந்த தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்தாள். அவள் செயல்படுத்த தயங்கியத் திட்டங்கள்.

"இதை என்னால் செய்ய முடியும்." என்று சொல்லிக் கொண்டாள்.

கல்லூரியில் பட்டம் பெற்ற பின், ஒரு சிறு நிறுவனத்தில் ஆறு மாதகாலம் பயிற்சி மேற்கொண்டாள். அதன் அனுபவங்களை எல்லாம் தனது முழு நேர வேலைகளில் கொட்டி முன்னுக்கு வந்தாள். தன்னுடைய திறமைகளை செதுக்கிக் கொள்ள வாய்ப்புக் கொடுத்த முகேஷ் நிறுவனத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு வருடம் வேறொறு கம்பனியில் வேலைப் பார்த்தாள்.

இப்போது, அவள் செய்ய வேண்டியது எல்லாம் தனது உள்ளுணர்வையும், தன்னையும் நம்பி அவள் சத்தியமாக அடைய விரும்பிய லட்சியத்தில் - சொந்தத் தொழில் தொடங்குவது - அத்தனை திறமைகளையும் காட்ட வேண்டும்.

முகேஷ் நிறுவன மாற்றமைப்பு திட்டம் அவளது தொழிலைத் தொடங்க தேவையான ஒரு ஊக்கமே. ஆனால் ஏன் அது தவறான செய்கைப் போல் தோன்ற வேண்டும்.

                                                                        
    11. கட்டை பிரம்மச்சாரி.

"நான் ராஜினாமா செய்கிறேன்?" என்றாள் அடுத்த நாள் காலையில்.

காலை வாழ்த்து அவனது உதட்டோடு உறைந்தது. "ராஜினாமாவா அப்படி என்றால்?"

ஜோதி தனது பையையும் காபி கோப்பையையும் மேஜை மீது வைத்தாள். "அப்படியே கடிதத்தில் இருப்பதைப் போல. விலகிக் கொள்கிறேன்." அவளது பையிலிருந்து ஒரு உறையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"முறையான கடிதம். இதை கொடுக்க வேண்டியது குமரவேல் சாரிடமா உங்களிடமா என்று சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் நிறுவனத்தின் தலைவர் நீங்கள் தானே," என தோளைக் குலுக்கினாள்.

விஷ்ணுவிற்குள் அதிர்ச்சிப் பரவியது. அவள் இந்த வேளையில் அவனை விட்டு விலக முடியாது. அதுவும் அவன் தேடி வந்த லட்சியப் பெண் அவள் தான் என்று கண்டு கொண்ட இந்த வேளையில். மேலும் அவன் மனதை முழுதாய் திறப்பதற்கான சந்தர்ப்பம் அமைவதற்கு முன்னால்.

ஆக நடப்பு இது தான் என யூகித்தான்.

"நேற்று நம் இருவருக்குள் நடந்ததைக் கண்டு பயந்துவிட்டாய்."

அவள் ஏறிட்டுப் பார்த்து இல்லை என்பது போல் தலையசைத்தாள். "சில விஷயங்களில் நான் வெகுளியாக இருக்கலாம், விஷ்ணு. ஆனால் நிச்சயமாக இது முத்தத்தினால் ஏற்பட்ட முடிவல்ல."

"பிறகு ஏன் விலகுகிறாய்?"

"காலம் கூடி விட்டது," என்றாள் எளிதாக. "சில சமயம் நமக்கு வேண்டியதை அடைய கண்ணை மூடிக்கொண்டு இதயம் சொல்லும் பாதையில் போகத்தான் வேண்டும்."

"உன் இதயம் சொல்லும் பாதை எது?"

அவள் புன்னகைத்தாள், அந்த மயக்கும் மாயப் புன்னகை விஷ்ணுவின் முட்டிகளை வலுவிழக்கச் செய்தது. அவன் கீழே விழாமல் நிற்பதற்காக என தோன்றாமல், எத்தேச்சை செயல் போல் தோன்றும் என நம்பி, கைகளால் துலாவி இருக்கையின் பின்புறத்தைப் பற்றினான்.

"இது உங்களைப் பற்றி அல்ல," என்றாள் அவனிடம். " நேற்று நடந்ததைப் பற்றியும் அல்ல. நான் ராஜினாமா செய்வது எனக்காக. சில காலமாகவே நான் ஒன்று செய்ய எண்ணி வருகிறேன்."

"அது?"

"'ஜஸ்ட் ரைட் ·பார் யூ' என்ற விற்பனை நிறுவனம் ஒன்று தொடங்குவது."

அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தினான். "முகேஷோடு போட்டிப் போடப் போகிறாயா?"

அவனது குரல் கிட்டதட்ட அதிகாரத் தொனியில் ஒலிக்கவும் அவள் சிரித்து விட்டாள். "ஒரு பெண் ஆரம்பிக்க நினைக்கும் சிறு தொழில் எந்த வகையில் அறுபது வருட முதிர்ச்சியுடைய பெரிய நிறுவனத்துக்கு போட்டியாகும் என்று எனக்கு தோன்றவில்லை."

நாடியில் விரல் வைத்து அவள் சொன்னதை அசைப் போட்டான்.

சட்டென்று அவன் கண்கள் பளிச்சிடவும் சற்று தயங்கினாள். "என்ன?" என்று வினவினாள்.

"நீ ராஜினாமா செய்து விட்டதால் - இதை நான் அங்கீகரிக்கிறேன்," என்றான் உறையை தனது ஜாக்கட்டின் உள் பையில் செருகியபடி, "நமக்குள் இந்த முதலாளி-தொழிலாளி சங்கடங்கள் இனி இல்லை. இனி நாம் சுதந்திரமாகச் சுற்றலாம்."

***********************

சில நாட்களில் ஏற்பட்ட வித்தியாசம் ரொம்ப வேடிக்கையாய் இருந்தது. அதே வாரம் ஆரம்பத்தில், விழாவில் அறிமுகப்படுத்த ஒரு துணை இல்லையே என்று கவலைப்பட்டாள். ஆனால் சில நாட்களிலேயே பதவி உயர்வும் பெற்று, அதை ராஜினாமாவும் செய்து, தனக்கென்று ஒரு தொழிலும் ஆரம்பித்துவிட்டாள்.

ஆனால் இப்போதைக்கு தொழில் திட்டங்கள், லாப நஷ்ட விகிதங்கள் எல்லாம் மனதை விட்டு மறைந்திருந்தன.

வெள்ளை டக்சீடோவில் அதிக பிரகாசத்தோடு, கோப்பை நிறைய திண்பண்டங்களோடு விஷ்ணு திரும்பி வந்தான். இருவரும் நிஜமாகவே காதலர்கள் ஆகிவிட்டார்கள் என்ற எண்ணம் இன்னமும் அவளை மூச்சடைக்கச் செய்தது.

"உனக்கு தெரியுமா, அங்கே பைனான்ஸ் துறையிலுள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இன்று விழாவிற்கு அழைத்து வர மனைவியோ, காதலியோ இல்லாததால் பெரும் கவலையில் இருப்பதாகச் சொன்னார். கேட்பதற்கே வித்தியாசமாக இல்லை?"

அவன் தந்த சிறு தம்ளரை வாங்கிக் கொண்டு தலையை ஆட்டினாள். "நான் கூட முன்பு அதே காரணத்துக்காக ரொம்ப கவலையிலிருந்தேன்."

விஷ்ணு அதிர்ந்தான். "ஏன்?"

"கம்பனியின் கொள்கையினால்."

"அது என்ன கம்பனியின் கொள்கை?"

"முன்னேற்றமடைய இருக்கும் ஒரே வழி குடும்பஸ்தனாய் இருப்பதே."

விஷ்ணுவின் முகத்தில் குழப்பம் மேலும் அதிகரித்தது. "நீ என்ன சொல்கிறாய்?"

"விஷ்ணு, சி.பி.முகேஷ் சார் தெளிவாகச் சொல்லிவிட்டார், கம்பனியின் உயர்மட்டத்திற்கு முன்னேற வேண்டுமானால் குடும்பம் குழந்தை என்ற நிலையில் இருக்க வேண்டும் என்று. அதனால் தான் பலர் வாய்ப்பிருந்தும் மேல் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்யாமலே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் நான் அங்கே இருந்த காலத்தில் இதுதான் நடப்பு."

விஷ்ணு கன்னத்தின் பொறியை அழுத்திவிட்டு மூக்குத்தண்டை கிள்ளினான். "என்னால் இதை நம்பமுடியவில்லை. இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்."

அவன் கூட்டத்தில் மறைவதை ஜோதி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கணம் கழித்து, மேடையில் கையில் ஒயரில்லா சிறு ஒலிப் பெருக்கியுடன் நின்றிருந்தான்.

"அன்பர்களே," அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இரு நிமிடங்கள் ஆயிற்று. அறை அமைதியாகி அனைவரின் பார்வையும் விஷ்ணுவை நோக்கியது. " நமது கம்பனியில் வேலை பார்ப்போரிடம் திருமண அந்தஸ்த்தை வைத்தே சில பதவி உயர்வுகள் நிர்ணயிக்கப்படுவதாக சில தவறான அபிப்பிராயங்கள் பரவிக் கிடப்பது இப்போது தான் எனது கவனத்துக்கு வந்தது."

விஷ்ணு சிலர் தலையாட்டுவதை கண்டு விஷயம் பரவலாக நம்பப்படுவதை உணர்ந்தான். "சி.பி.? எங்கே இருக்கிறீர்கள்?"

"கத்துவதை நிறுத்து. எனக்கு வேண்டுமானால் வயதாகி இருக்கலாம், செவிடாகி விடவில்லை." என்றபடி சி.பி.முகேஷ் உதவியுடன் அந்த சிறு படிக்கட்டில் ஏறி வந்தார். விஷ்ணு நின்றிருந்த இடத்தை அடைந்து, பேரனின் கையிலிருந்த ஒலிப்பெறுக்கியை வாங்கினார்.

"பல வருடங்களுக்கு முன்னால் நான் இந்த கம்பனியை ஆரம்பித்த போது, இந்த சிறிய ஊரில் மக்களை தங்கியிருக்கச் செய்வது ரொம்பவும் கடினம். அரிமலையும் அப்போது இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை.எல்லோரும் பட்டணத்தில் வாழ்வதையே பெரிதும் விரும்பினர். அவர்களை தங்க வைப்பதற்காக, தங்களது வேர்களோடு இங்கே தங்கியிருந்த குடும்பஸ்தர்களுக்கு கம்பனியில் பதவி உயர்வுகள் அளித்து வந்தேன்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த அந்த கிறுக்குத் தனத்தை நம்பி நீங்கள் பல வாய்ப்புகளை இழந்திருப்பீர்கள்."

பார்வையாளர்கள் பக்கம் சிரிப்பொலி பரவியது.

விஷ்ணு குனிந்து ஒலிப்பெறுக்கியில் பேசினான். "அதனால் அனைவரும் கவலையை விட்டு விழாவை கொண்டாடி மகிழுங்கள். அத்தோடு கவலையே படாதீர்கள் பதவி உயர்வு வேண்டி உடனடியாக திருமண ஏற்பாட்டில் இறங்க வேண்டியதில்லை."

சி.பி. ஒலிப்பெறுக்கியைப் பிடுங்கி பெரு விரலால் பேரனைக் காட்டி, "ஆமாம், இவனைப் பாருங்கள். நிறுவனத்தையே எடுத்து நடத்துகிறான் ஆனாலும் கட்டை பிரம்மச்சாரி. எனக்கு ஒரு கொள்ளுப் பேரப்பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நாகரீகமில்லை."

விஷ்ணுவின் பார்வை ஜோதியின் பார்வையோடு கலந்தது. "இனி நீண்டநாள் பிரம்மச்சாரியாகவே
இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்."

12. உன்னை விரும்புகிறேன்.

 சிறிது நேரம் மக்களோடு கலந்திருந்துவிட்டு விஷ்ணுவும் ஜோதியும் அங்கிருந்து நழுவினார்கள்.

 "எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது," என்று அவளிடம் கூறினான். "நீயும் வருகிறாயா?"

எந்த ஒரு விஷயத்திலும் அவன் காட்டும் பற்றுதலை அதிசயத்தபடி, "சரி" என்று சொன்னாள்.

"அங்கே நீங்கள் கூறியது உண்மைதானா?" என வினவியவள், ஒருவேளை எதைப் பற்றி என அவனுக்கு விளங்காதோ என்றெண்ணி "அதாவது நம்மைப் பற்றி?" என்று சேர்த்துக் கொண்டாள்.

அவன் அவளுடையக் கைகளை தன் கரத்தில் எடுத்து, "உண்மையில்லாததை நான் எப்போது கூறுவதில்லை." என்று கூறி அவளது கைகளில் முத்தமிட்டான். ஜோதி அழகாகப் புன்னகைத்தாள்.

சில விநாடிகள் கழித்து, அவன் காபி விடுதியின் பின்புறம் வண்டியை நிறுத்தியபோது அவளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. "காபி விடுதியிலா உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது?"

ஆம் என்று தலையசைத்தான். "ஞாபகம் இருக்கிறதா எனக்கு வேறு சில திறமைகளும் இருப்பதாக கூறினேனே?"

"ஆம்." என்று ஒற்றைச் சொல்லில் தயக்கத்துடன் பதிலத்தாள்.

"அதில் ஒன்று இசை. நான் ஒரு இசைக் குழுவில் இருக்கிறேன். நாங்கள் வாரத்தில் இருமுறை இங்கே வாசிப்போம். வா போகலாம்," என்றபடி அவளது கையைப் பற்றினான். "எங்கள் சுற்று இன்னும் பத்து நிமிடத்தில் ஆரம்பித்துவிடும்."

விஷ்ணுவும் அவனது நண்பர்களும் வாசிப்பதை ஜோதி ரசித்துக் கொண்டிருந்த போது, இதயம் சொன்ன வழி செல்வது பற்றி உஷா சித்தி கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. அந்த இசைக் குழு இடைவெளி விட்டபோது தனது செல் போனை எடுத்து சித்தியை கூப்பிட்டாள்.

"உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா அந்த முக்கியமான பதவி உயர்வைப் பற்றிச் சொன்னேனே?"

"நிச்சயமாக. இன்று காலை தான் சமூகக் கூடத்தின் தலைவி பாமாவிடம் உன்னைப் பற்றி பொறுமையோடு சொல்லிக் கொண்டிருந்தேன். நீ எங்கே இருக்கிறாய்? ஏதோ விழா போல் இசை சத்தம் கேட்கிறதே."

"நான் முக்கிய சாலையில் இருக்கும் காபி விடுதியில் இருக்கிறேன். நான் அந்த வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை, சித்தி. சொல்லப் போனால் அதை ராஜினாமா செய்து விட்டேன். எனது சொந்தத் தொழிலை தொடங்கப் போகிறேன்."

கவலையை வெளிப்படுத்துவதற்கு பதில் உஷா சிரித்தான். "அட, இது இன்னும் நல்ல செய்தியாயிற்றே."

ஜோதி தலையசைத்தாள். "நான் சொன்னது விளங்கியதா சித்தி? என் வேலையை விட்டு விட்டேன். நல்ல சம்பளத்தில் எனக்கு பாதுகாப்பு கவசமாய் இருந்த வேலை."

"நான் எப்போதும் உனக்காக வேண்டிக் கொள்வதெல்லாம் உனது லட்சியத்தை அடைய போதுமான நம்பிக்கையும், தைரியமும் உனக்கு கிடைக்க வேண்டுமென்றே. நடப்பதை பார்த்தால் அவை உன்னை அடைந்து விட்டன போலும்."

உஷா சித்தி சொல்வது சரிதான் என ஜோதி நினைத்தாள்.  அவளது வாழ்க்கையின் எல்லாத் தரத்திலும் தனது இதயத்தின் சொல்ப்படியே நடக்கிறாள்.

விஷ்ணுவும் அவனது நண்பர்களும் அடுத்த சுற்றுக்கு அமரவும், ஜோதி அந்த இனிய கானத்தை ரசித்தப்படி இனி வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தாலும், வாழ்வு ஒரு இனிய சாகசமாகவே இருக்கும் என்று நம்பினாள்.

முற்றும்.

முந்தைய பதிவிற்குச் செல்ல                                   

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.