........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

   குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

1.கனவு நாயகன்

ஜோதியைப் பொறுத்தவரை காலம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

தொழிலாளர் ஊக்கத் திருநாள். அதோ அடுத்த வாரம்.

இன்னும் தன்னுடைய வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்தபாடில்லை.

முகேஷ் பன்னாட்டு நிறுவனம் அந்த சுற்று வட்டாரத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். நவீனம் அதன் தொழில் யுக்தியிலும், செயல்பாட்டிலும் இருந்தாலும் அதன் தலைமை முற்றிலும் சம்பிரதாயம் மிக்கது.அதன் நிறுவனர் குடும்ப அமைப்பில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். அவருடைய எண்ணப்படி அலுவலகத்தின் மேலதிகார பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரு நபரும் குடும்ப அமைப்பைச் சார்ந்தவராய் இருக்க வேண்டும். அதாவது, திருமணமாகியோ திருமணமாகி குழந்தைகளுடனோ.

பெரியவர் எப்போதும் சொல்லுவார் திறமை மிக்கவர்களுக்கு பதவி உயர்வு போதுமான அளவு உண்டு. ஆனால் அந்த மலையேற்றத்திற்கு ஒரே நேர்ப்பாதை தான் குறுக்குவழி எதுவும் கிடையாது என்று.

ஜோதிக்கும் காலத்தால் திருமணம் குழந்தை என்று வாழ ஆசையுண்டு. ஆனால் அதை தன்னுடைய பதவி உயர்வுக்காக செய்து கொள்வதில் உடன்பாடில்லை.பகிர்ந்து கொள்ள அவளிடம் எக்கச்சக்கமான அன்புண்டு, அவளுடைய வேலை நிலையால் அதையெல்லாம் உள்ளுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டியிருந்தது. நடப்பதை வைத்து பார்த்தால், இன்றுவரை சரியான ஜோடியை அவள் வழி அனுப்பாதது கடவுளின் திட்டம் என்றே தோன்றியது.

ஒரு காலத்தில் அவளிடம் பட்டியலே இருந்தது. அவளுடைய கனவு நாயகன் ஆறடி இரண்டு அங்குலத்துக்கு மிகாமலும் ஆறடிக்கு குறையாமலும் கருத்தடர்ந்த கூந்தலுடனும்,கூரிய கருவிழிகளுடனும் இருப்பான். முழுக்கை சட்டை அணிந்து அதில் பட்டை பித்தான்கள் வரை போட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட வகை கார், ஐந்து பேர் உள்ள குடும்பத்தை வைத்து நடத்தக் கூடியளவு வருமானம் - ஒரு வேளை குழந்தைகள் பிறந்த பிறகு அவள் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்தால். நகைச்சுவை உணர்வுடன், எப்போதும் சிரித்த முகமாக, அப்பப்ப இனிய சிறு சிறு செய்கைகள் மூலம் ஆச்சரியம் மூட்டி, என்றும் மங்காத காதலுடன் இருக்க வேண்டும். தம்பதியராய் சேர்ந்து ஆன்மீகத்தோடும், சமுதாய அக்கறையோடும் வாழ்ந்து காலமெல்லாம் சந்தோஷமாய் இருக்க வேண்டும்.

ஆம்...சற்று பழையதுதான் என்றாலும் இனிய கற்பனை இன்றைய நிலையில் சாத்தியமில்லாததும் கூட.

ஜோதி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி பெருமூச்சு விட்டாள்.

அவளும் கொஞ்ச காலமாகவே கனவு நாயகனைத் தேடி வருகிறாள். மேலும் அவளுக்கும் வயது ஏறிக்கொண்டே போகிறது, இருபத்தி நான்கை நெருங்குகிறாள். வேலை வேலை என்று அதிலே மூழ்கியிருப்பதால் பிறரை சந்தித்து பேசி பழகி என்பதெல்லாம் அரிதாகி விட்டது தான் உண்மை, தயக்கத்துடன் ஒத்துக் கொண்டாள். இந்த வழக்கமும், கசப்புடன் எண்ணினாள், பழைய பழக்கமாயிற்று.

"ஜோதி, சந்திப்புக்கு வரவில்லையா?"

திடுக்கிட்டு எழுந்து தன்னுடைய குறிப்புகளை எடுத்தாள்.

குமரவேல், அவளுடைய மேலதிகாரியின் எரிச்சல் மிக்க குரலே அது.

"இதோ கிளம்பி விட்டேன்." என்றவள் மெல்ல,  "சார், இது சரி என்று.."

அவளை நிறுத்தி, "போதும். அதைப் பற்றி முன்பே பேசி முடித்தாயிற்று. இனி பேச்சை என்னிடம் விடு."

ஜோதி முகம் சுழித்தாள். இந்த மாதிரி அதிகாரப் போக்கு தான் இங்கிருந்து செல்வதை பற்றி யோசிக்க வைத்தது. அவளுக்கு சாதிக்க வேண்டும். அதுக்கு இங்கே வாய்ப்பிருக்கும் என்று நம்பினாள்.

ஒரு காலத்தில், குமரவேல் அலுவலகத்தின் நெளிவு சுளிவுகளை அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் சிறந்த வழிக்காட்டியாக இருந்தார். பிறகு, முன் கோபியாக மாறிவிட்டார். இந்த ஆறு மாத காலத்தில் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற சந்தேகம் அவளுக்கு. அவரிடம் மாற்றம் தெரிகிறது அதுவும் மோசமானதொரு மாற்றம்.

இன்றைய அலுவலக சந்திப்பில் அவர் வழங்கயிருக்கும் அறிக்கையில் அவளுக்கு திருப்தி இல்லை. அவருடைய முடிவுகள் சட்டப்படி செல்லாது. அவளை அதிகாரத்தால் மடக்கியதோடு மட்டுமல்லாமல், அவளுடைய எதிர்ப்புகளையும், அக்கறைகளையும் அலட்சியப்படுத்தி விட்டார்.

இது மட்டும் அவளுடைய நிறுவனமாக இருந்திருந்தால், அவளுடைய முடிவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும்.

அந்த வார இறுதிக்குள் இதற்கொரு முடிவு கட்டுவதாக உள்ளுக்குள் உறுதி செய்து கொண்டே அலுவலக சந்திப்பு அறைக்குள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அனைத்து உபதலைவர்களும் பெரிய முட்டை வடிவமுள்ள மேஜையைச் சுற்றி அமர, கீழ்நிலை அதிகாரிகளோ சுழலும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவளுக்கு மேஜையைச் சுற்றி அமர வேண்டும்.

அந்த நிறுவனத்தில் அவளுக்கேற்ற சவால்கள் நிறைய இருந்தன, விற்பனைத் துறை உதவியாளராய் பொறுப்பேற்ற நொடியிலிருந்தே அந்த சவால்களை அவள் ஏற்றுக்கொண்டாள். முன்னேறும் ஆவலுடன் கற்பூரபுத்தியும் சேர்ந்து கொள்ள துறையிலுள்ள மேற்பதவிகளை எளிதில் அடைந்தாள். மூன்று உயர்வுகளுக்கு பின், தன் தலை கூரையில் முட்டுவதாய் உணர்ந்தாள். காரணம் இனி வரும் உயர்வுகள் எல்லாம் திறமையை அல்ல திருமண அந்தஸ்தை பொறுத்தது. யாரும் அதை திட்டவட்டமாகக் கூறவில்லை என்றாலும் விஷயம் இது தான் என்பது தெளிவாக விளங்கியது.

ஜோதி வெளியேற முயன்ற பெருமூச்சை அடக்கினாள்.

அவள் திருமணம் செய்வதற்கு முன், அதற்கு தகுந்த துணையைத் தேடவேண்டும்.

சில நொடிகள் கழித்து நீண்ட காலடிகளுடன் விஷ்ணு முகேஷ் அறைக்குள் நுழைந்தான். எப்போதும் போல அவனை கண்டவுடன் ஜோதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.

எல்லோராலும் 'பெரியவர்' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சி.பி.முகேஷ் தான் அந்த நிறுவனத்தின் தலைவர் என்றாலும், செயலாற்றும் அதிகாரம் முழுவதும் அவருடைய கவர்ச்சிமிக்க பேரனுடைய கையில்.

ஏறிட்டுப் பார்க்கும் உயரம், நவீன உடை, நேரே விளம்பரத்தில் இருந்து குதித்தது போல் விஷ்ணு போகும் இடமெல்லாம் தலையைத் திருப்பி பார்க்க வைக்கும் தோற்றம். அவனுடைய அலுவலகத்திலும் கூட. அவனுடைய கருத்தடர்ந்த கேசம் பார்ப்பதற்கு எப்போதும் சற்று நீளமாகவே தோன்றியது. அந்த பகுதியின் நூறு மைல் சுற்றளவில் தகுதி மிக்க பிரம்மச்சாரி அவன் ஒருவனே என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இருபத்தெட்டு வயதில், ஜோதி எதிர்பார்க்கும் அனைத்தும் அவனிடம் இருந்தது. என்ன ஆறு அடி நான்கு அங்குலத்தில், அவள் எதிர்ப்பார்த்ததை விட உயரம், அளவுக்கு அதிகமான பணம். அவளுடைய அந்தஸ்தை மறந்து விட்டு பார்த்தாலும் கூட, முகேஷ் குடும்பத்தால் ஆளப்படும் பணத்தின் பூஜ்ஜியங்களை எண்ணினாலே அவளுக்கு தலை சுற்றியது.

ஜோதிக்கு வேண்டியது சௌகரியமே அன்றி சுமையில்லை. அதுவும் அவளுடைய ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் அவளுடைய ஆண்மகனை கஷ்டப்பட்டு கழுத்தை வளைத்துப் பார்க்க அவள் விரும்பவில்லை.

விஷ்ணு முகேஷ் விஷயத்தில், ஆனாலும், அவளிடம் விதிவிலக்குகள் உண்டு - அந்த இரண்டு விஷயத்திலும்.

ஜோதி, மற்றவர்களைப் போல், அறையே அவனுடைய அதிகாரத்தின் கீழ் வருவதைக் கண்டாள்.

"என்னவொரு அழகன் இல்லடி!" என்று ஜோதியின் பக்கம் மெல்ல சாய்ந்து ரகசியமாய் முணுமுணுத்தாள் அவள் தோழி நிக்கி.

மெல்ல ஆம் என்பது போல் தலையசைத்து முகம் மாறாமல் காத்தாள்.

கடவுளே, இவனுடைய அந்தஸ்த்துக்கு என்றாவது அவள் பொருந்துவாளா? அவள் ஒருத்தி இருப்பதையே அவன் அறிந்திருக்க மாட்டான் உம்... வருத்தமான விஷயம் தான்.

2.உதவாக்கரை அறிக்கை

அவன் அறைக்குள் நுழைந்த விநாடி பேச்சு சப்தம் நின்றது. விஷ்ணு முகேஷின் முதுகுக்கு பின்னால் சிலர் முணுமுணுப்பது கேட்டது. அவை என்றுமே அவனை பாதித்தது கிடையாது.

இதுவரை - அதாவது அவளும் முணுமுணுப்பதை அவன் காணும் வரை. ஒரு நிமிடம் அவளின் விசுவாசம் பற்றி சிந்தித்தான். நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களை எல்லாம் சோதித்து விட்டான். அவளைப் பற்றி எதையும் கவனியாமல் விட்டு விட்டானோ? முக்கியமான எதையும் - அவன் முடிவு செய்துவிட்ட விஷயம் சரிதானா அறிவிக்க இது சரியான சமயமா?

திட்டங்களை வகுத்தாயிற்று என்று எண்ணியபடி பல்லைக் கடித்த பிறகு தான் இனி இப்படி பல்லைக் கடிப்பதில்லை என்று முடிவெடித்தது ஞாபகம் வந்தது.

"குட் மார்னிங்" என்ற அவனது குரல் நறுக்கென்றிருந்தது.

தலைமை நாற்காலியை நோக்கி நடந்தான், எப்போதும் அதில் அமர்வது அவனுக்கு பிடிக்காது. ஆனால் தாத்தாவின் பிடிவாதம் அறிந்த பின், வேறு வழியில்லை என்பது தெரியும். யாராவது ஒருத்தர் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்தித்தானே ஆகவேண்டும்.

"இன்றைய விஷயத்துக்கு செல்வோம்" என்று கூறி தயாரிப்பு பிரிவு அதிகாரியிடம் அறிக்கை வாசிக்க சைகை செய்தான்.

சுமார் ஒரு மணி நேரம் உற்சாகம் இல்லாமல் ஊர்ந்து சென்றது. விஷ்ணு சலிப்பில் சரிந்து விடுவோமோ என்றஞ்சி, ஜோதியை பார்வையில் நன்றாக படும் வகையில் இருக்கையில் இலேசாக சுழன்றான். அவனுடைய கவனத்தை சிதறவிடாமல் காத்து வந்த ஒரே விஷயம் அவள் தான்.

விற்பனைத் துறை உபதலைவர் சில வரைபடங்களை விளக்கும் வகையில் எழுந்த போது, ஜோதி அவனைப் பார்த்தாள். விஷ்ணு புன்னகைத்தான்.

மற்ற பெண்களைப் போல் பதிலுக்கு புன்னகைக்காமல் அவளுடைய விழிகள் விரிந்தன. குமரவேலின் பக்கம் பார்வையை திருப்பு முன் சில நொடி அவளது இமைகள் படபடத்தன.

விஷ்ணு பெருமூச்சு விட்டான்.

திரும்பவும் அறிக்கையில் கவனத்தை செலுத்தினான். கவனிக்க கவனிக்க அவனது புருவத்தின் இடையில் முடிச்சு விழுந்தது. ஜோதியின் பக்கம் பார்வையை வீசினான். அவளோ இருக்கையின் நுனியில் அமர்ந்து கீழ் உதட்டைப் பற்களால் கடித்தபடி பேனா மூடியை திருகிக் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரி சந்திப்புகளுக்கு பயன்படும் சுவரளவு தொங்கிய வெண்திரையை முகச்சுழிப்புடன் பார்த்தான்.

முதலாளி என்ற அதிகாரத்தைக் காட்ட அவன் விரும்பியதில்லை. ஆனாலும், யாரவது அவனை ஏய்க்க முயன்றால், அதை எப்போது எப்படி காட்ட வேண்டும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

"ஒரு கேள்வி."

அனைத்து ஜோடி கண்களும் விஷ்ணுவிடம் பாய்ந்தது. சிலரின் தூக்கத்திலிருந்து விழித்தது போன்ற தோற்றமும் அவனது கவனத்துக்கு தப்பவில்லை.

முகேஷ் பன்னாட்டு நிறுவனத்தின் வளர்ச்சி தேங்கி நிற்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இந்த உதவாக்கரை அறிக்கைகளால் சலிப்பு தட்டியது அவனுக்கு மட்டுமில்லை அதை தயாரித்தவர்களுக்கும்தான்.

அந்த மேஜையைச் சுற்றியுள்ள, எல்லோரும் இல்லை என்றாலும், பாதிக்கும் அதிகமானோர் சம்பளமும், ஊக்கதொகையும் வெறுமனே வாங்கிச் செல்வதாக சந்தேகப்பட்டான். ஒன்று ஓய்வு காலம் வரை நேரத்தைப் போக்குவது இல்லையேல் போட்டி நிறுவனம் முன்வந்து அளிக்கும் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைக்கு தாவுவது.

இதற்கு முன் பேச்சின் நடுவே நிறுத்தப்பட்ட பழக்கம் இல்லாததால், குமரவேல் தடுமாறினார். பேச்சின் தொடர்ச்சி விட்டுப் போக, தொண்டையைக் கனைத்தவர் திருதிருவென விழித்தார். "என்ன, சார்?"

"இதைப் பற்றி மிஸ் ஜோதி என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."

ஜோதியின் விழிகள் விரிந்தன. கையில் இருந்த குறிப்பேட்டை இறுகப் பற்றியவள், பேனாவை தவறவிட்டாள். "நா...நானா."

நின்ற இடத்தில் இருந்தே குமரவேல் அவளை முறைத்தார். இந்த மாதிரி மாத சந்திப்புகளில் உதவியாளர்கள் யாவரும் பார்வைக்கு மட்டும் தான் பேசுவதற்கு அல்ல என்பது அனைவரும் அறிந்த விஷயம். அது தான் அந்த நிறுவனத்தின் வழக்கமும் கூட.

விஷ்ணு எழுந்து பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினான். ஒரு கணம் இருவரின் கரங்களும் உரசிக் கொண்டன. சட்டென்று மூச்சை இழுத்த ஒலி அவள் மறைக்க முயன்றும் அவன் செவிகளை எட்டியது.

"இன்று எல்லாவற்றையும் சற்று வித்தியாசமாகச் செய்யப் போகிறேன்."

"ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லையே." என்றார் குமரவேல்.

உட்காரவில்லை என்றால் உன் கதை முடிந்தது, என்று சொல்லாமல் சொல்லியது அவனது பார்வையில் இருந்த அதிகாரம்.

மறு பேச்சின்றி அமர்ந்தார்.

அறை முழுவதும் பரிமாறிக் கொள்ளப்பட்ட பார்வைகளில் பதற்றம் நிறைந்திருந்தது.

"உபதலைவர்கள் வெளிச்சுற்றில் அமரவும்," என்றான் விஷ்ணு. "உதவியாளர்கள் அனைவரும் முன்னிருக்கைக்கு வரவும்." தன்னுடைய இருக்கைக்கு திரும்பி சொன்னதை உறுதிபடுத்தும் விதமாக அந்த சிகப்பு நிற மேஜையை லேசாக தட்டினான். "சீக்கிரம், நாம் ஏற்கனவே இங்கே அதிக நேரம் செலவழித்து விட்டோம்."

"ஆனால் விஷ்ணு, மிஸ்டர் முகேஷ்...."

விஷ்ணு கையை உயர்த்தினான். "உங்களையும் சேர்த்துதான், சந்தோஷ் சார்" என்றான் விற்பனை துறை தலைவரை நோக்கி, அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே அந்த நிறுவனத்தில் இருப்பவர்.

 "நேரம் பொன் போன்றது. ஆம் விரைவாக."

நிச்சயமில்லாத பார்வை பரிமாற்றலுடன், அனைத்து உதவியாளர்களும் தங்களுடைய துறைத் தலைவர்களுடன் இடம் மாறினார்கள்.

அனைவரும் அமர்ந்ததும் விஷ்ணு புன்னகைத்தான். தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி கேட்டான்.

"இப்போது கூறுங்கள் மிஸ் ஜோதி, நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு வருடம் இருக்குமா?"

"ஆமாம், சார்." என்று தலையாட்டினாள்.

"அந்த அறிக்கையில் இருப்பவற்றை நீங்கள் அறிவீர்கள், இல்லையா? சந்தையில் நமது நிலவரம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்."

"..ஆமாம்."

அவன் என்ன செய்ய முயற்சிக்கிறான் என்று ஜோதிக்கு விளங்கவில்லை என்பது புரிந்தது. அதைப் பற்றி விஷ்ணுவிற்கு அக்கறையில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் இக்கட்டான சூழலில் அவள் எப்படி செயல்படுகிறாள் என்பதே.

"சொல்லு, ஜோதி." என்றான்.

ஒருமையில் அவளுடைய புருவங்கள் உயர்ந்தன. ஆம் சந்திப்பு அறையில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மற்றுமொரு பிரச்சனை.

"நான் என்ன சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள், சார்?"

வெண்திரையில் தெரிந்த வரைபடங்களை அவன் சுட்டிக்காட்டி, "உன் துறைத் தலைவரின் அறிக்கையில் உள்ள குற்றம் குறைகளை ஏன் நீ சுட்டிக்காட்டக் கூடாது."

3.அந்தரங்கச் செயலாளர்.

சட்டென்று, கம்பெனி விழாவில் அறிமுகப்படுத்த ஒரு சகா இல்லையே என்ற பிரச்சினை மதிப்பிழந்து போனது. விஷ்ணுவின் கேள்விக்கு அவள் உண்மையான பதிலளித்தால் சகாவிற்கு அவசியமே  இல்லாமல் போய்விடும். காரணம் அந்த இடத்திலேயே அவளுடைய துறை தலைவர் அவளை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்.

அதே சமயம் பொய் சொன்னால் அவளது மனசாட்சியே அவளைக் கொன்றுவிடும்.

ஜோதி வாயைத் திறந்தாள். மூடினாள். மறுபடியும் திறந்தாள், பிறகு கையில் இருந்த குறிப்பேட்டை நோக்கினாள். "அறிக்கை, துறைக்கு கிடைத்த சிறந்த தகவல்களின் அடிப்படையால் தயாரிக்கப்பட்டது."

அழகு மட்டுமல்ல சமாளிக்கும் திறனும் இருக்கிறது என்றெண்ணினான் விஷ்ணு. பெண்களின் செயல்திறனை எப்போதும் போற்றுபவன்.

நிமிர்ந்தமர்ந்து மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி, இருக்கையில் நெளியும் ஒவ்வொரு உபதலைவரின் பார்வையையும் சந்தித்தான்.

"நண்பர்களே," அவன் ஆரம்பித்தான். "நான் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் நான் நமது நிறுவனத்தின் பலம், பலவீனங்களை மதிப்பீடு செய்ததில், பலவீனங்கள் அதிகமாகவும் பலம் என்று சொல்லிக் கொள்வதற்கு கிட்டதட்ட எதுவுமே இல்லாததும் தெரியவந்தது."

முடிவெடிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்ந்தாள் ஜோதி. அவளுக்கென்று கம்பனி இருந்தால், நிச்சயமாக விஷ்ணுவைப் போல் அதை நடத்தமாட்டாள் - சர்வாதிகார தொனியில்.

நடக்க ஆரம்பித்திருந்தான். தன் இருக்கைக்கு பின்னால் நடைப்பயின்றபடி தான் அறிந்து கொண்ட விஷயங்களை கவலையுடன் நோக்கிய அந்தந்த துறைத் தலைவரை நேர் பார்வையாய் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.

உதவியாளர்களோ அவர்களின் பங்கிற்கு, சிலர் ஆவலுடன் அவனை நோக்கினாலும் பலர் தங்களின் பாஸைப் போலவே திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தார்கள்.

ஜோதி அமைதியான தோற்றத்துடன் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"என் தாத்தா இந்த கம்பனியை ஆரம்பிக்கும் போது தன் காலத்தையும் தாண்டிய தொலைநோக்குப் பார்வையுடன் தான் திட்டங்களைத் தீட்டினார்." என்றான் விஷ்ணு. "பலர் அதை பைத்தியக்காரத்தனம் என்றனர். ஏன் தயக்கத்துடன் முதலீடு செய்ய இருந்த இரு முதலீட்டாளர்களுக்குமே அந்த திட்டங்களால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையிருக்கவில்லை."

நடந்து சென்று பெரிய ஜன்னலின் வழி வெளியே நோக்கினான். பிப்ரவரி மாதக் குளிரில் பூக்கள் பூத்திருக்கவில்லை. ஆனால், இன்னும் சில மாதங்களில் நடுவே வீற்றிருக்கும் நீர்த்தேக்கத்தினால் அந்த தோட்டமே பசுமையாய் மாறிவிடும்.

"இன்று புதிய நாள்," அறையிலிருந்தவர்களை விட தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

திரும்பி அதிகாரிகளை நோக்கியவன், சில காலமாகவே தனது மனதில் இருப்பதைக் கொட்டினான். "இன்றிலிருந்து, புதிய விளையாட்டும் ஆரம்பம்."

"அந்த புதிய விளையாட்டுதான் என்ன?" ஒரு அதிகாரி மெதுவாக அசட்டுத் துணிச்சலுடன் வினவினார்.

உங்கள் அனைவரையும் வேலையிலிருந்து தூக்குவது என்ற வாக்கியம் நாக்கு நுனிவரை வந்தது. அவர்களுடைய யோசனைகளாலும், ஆக்கபூர்வமில்லாத அணுகுமுறையாலுமே அந்த நிறுவனம் படுத்துவிட்டது. இனி அதன் எதிர்காலம், எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத செயற்திறமைமிக்க நிர்வாகக் குழுவிடமே உள்ளது. அது காலத்தை பொறுத்ததல்ல, நோக்கத்தைப் பொறுத்தது.

அதற்கு சரியான உதாரணம் சந்தோஷ், அவர் கிட்டத்தட்ட நாற்பதாண்டு பழமையான அதிகாரி. அவருடைய கூர்மையான புத்தியும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் கம்பனிக்கு கிடைத்த சில வரப்பிரசாதங்களுள் ஒன்று.

குமரவேலை போலில்லாமல் அவருடைய துறையை எப்போதும் வெற்றியின் கோட்டுக்கு உள்ளேயே
வைத்திருந்தார்.

எல்லாத் தரப்பிலிருந்தும் அதே போன்ற உதவி கிட்டினால் அவரைப் போன்றோர் எப்படி செயல்படுவர்?

யாரெல்லாம் சவாலுக்கு தயார் என்று அறிந்து கொள்ளும் நேரம் எட்டிவிட்டது. "அதாவது புதிய முறையில் தொழிலை நடத்தும் விதம்."

விஷ்ணு தன்னுடைய தோல் பையை திறந்து கற்றை தாள்களை வெளியில் எடுத்தான். இதைப் பற்றி அதிகம் சிந்தனை செய்து விட்டான்.

"ஆறு குழுக்களாய் பிரித்திருக்கிறேன். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு வார காலக்கெடு. அதற்குள் உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் மட்டுமல்லாமல் நாம் தொழில் நடத்தும் முறையையே மாற்றியமைக்கும் விதமான புதிய சிந்தனைகளை அலசி ஆராய வேண்டும்."

"இது ஒழுங்கீனமானது." என்றார் குமரவேல். "எனது துறையில்..."

"இன்று முதல் ஒவ்வொரு கிளையும், ஒவ்வொரு துறையும் மறுபரிசீலனை செய்யப்படும். நான் நிறுவனத்தையே மாற்றியமைக்கப் போகிறேன். அதன் முதல் முயற்சியாக எனது அந்தரங்கச் செயலாளராக ஜோதியை நியமிக்கிறேன்"

( தொடரும்...)

தொடர்ச்சி அடுத்த பதிவில்

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.