........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-3

உதவியவர்களை உதறித் தள்ளுபவர்கள்

நய வஞ்சகர்கள்!             நம்பிக்கைத் துரோகிகள்!

( தலைப்பு தந்த வாசகர்:   மீனாட்சி வள்ளியப்பன், சிங்கப்பூர்)

as

நய வஞ்சகர்கள்!  

வாழ முடியாதவர்கள்

உதவியவர்களை உதறித் தள்ளியவர்கள் மட்டுமா? வாக்காளர்களை ஏமாற்றி வாழும் அரசியல்வாதிகள், உழைப்பவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் முதலாளிகள், அறியாதவர்களை அரட்டிப் பறிக்கும் அதிகாரிகள்... இப்படி நயவஞ்சகர்கள் ஆயிரக்கணக்கில்... இவர்களால் இவ்வுலகில் வாழ முடியாதவர்கள் கோடிக்கணக்கில்...

- தமிழ்ச்செல்வி, புதுக்கோட்டை.

கூமுட்டைகள் அடிக்கும் தம்பட்டம்.

உனக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று பண வசதி இல்லாதவர்களிடம் அள்ளி விட்டு, அவர்களின் உழைப்பையும், உண்மையையும் சுரண்டிப் பிழைக்கும் ஊதாரிகள், நயவஞ்சகர்களில்லாமல் வேறென்ன? தான்தான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று இந்த கூமுட்டைகள் அடிக்கும் தம்பட்டமிருக்கே... அப்பா... இவர்களிடம் ஏமாறும் ஏழைகளுக்கும் அளவேயில்லை... பாவம் அவர்களிடம் பணமில்லை... பணமிருக்கும் மிருகங்களிடம் குணமில்லை.

 - என்.சண்முகநாதன், விருதுநகர்.

ஏமாற்றுப் பிழைப்பு

நட்பு என்கிற போர்வையில் மறைந்திருக்கும் நயவஞ்சகர்களிடம் மாட்டிக் கொள்ளும் பலர் கடைசியில் தாம் ஏமாற்றப்பட்டதை அறியும் போது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக தற்கொலை வரை சென்று விடுகின்றனர். இந்தப் போர்வையில் இருப்பவர்களிடம் உதவி என்று உதவப் போய் எத்தனையோ பேர் தங்களை இழந்திருக்கிறார்கள். பணம், கற்பு, உழைப்பு என்று இவர்களது இழப்புகளின் பெயர் வேண்டுமானால் மாறலாம். இந்த நயவஞ்சகர்களின் ஏமாற்றுப் பிழைப்பு மட்டும் என்றுமே மாறப் போவதில்லை.

-ஆர்.ஜெயலட்சுமி, நாகப்பட்டினம்.
 

நம்பிக்கைத் துரோகிகள்!

கடைசிக் காலம்.

 உதவிகளை மட்டுமில்லை, எதையும் மறந்து விடும் பணக்கார வர்க்கம் "தான்" என்ற அகத்தில் செய்யும் அனைத்தும் நம்பிக்கைத் துரோகம் தான். இந்த நம்பிக்கைத் துரோகிகளுக்கு கடைசிக் காலம் தான் அவர்களின் மனசாட்சி அளிக்கும் தண்டனைக் காலம்.

- கவிதா பால்பாண்டி, மதுரை.

எப்படி பாடம் புகட்டுவது?

தங்களுக்கு பிறர் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிலர் தமக்கு உதவி செய்தவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... அவர்கள் கொடுக்கும் தொல்லைகளுக்கு எல்லைகளே இல்லை... இந்த நம்பிக்கை துரோகிகளுக்கு எப்படி பாடம் புகட்டுவது என்று தான் தெரியவில்லை.

-வீர. சரவண சுப்பையா, கோயம்புத்தூர்.

வாழ்க்கையைத் தொலைத்தவர் அதிகம்.

 தங்களின் முடியாத நிலை எல்லோருக்கும் தெரிந்து விடுமோ என்கிற பயத்தில் இந்த அரைவேக்காடுகள் அடிக்கடி ஆளை மாற்றிக் கொள்ளும். உதவியவர்களை உதறித் தள்ளும் இந்த கோழைகள் வெட்டிப் பேச்சு பேசுமே தவிர சுயமாய் ஒன்றும் செய்ய முடியாது. இருந்தாலும் இன்று இந்த நம்பிக்கைத் துரோகிகளிடம் வாழ்க்கையைத் தொலைத்தவர் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். இந்த பேராசைக்காரர்கள் இறுதியில் இருப்பதையும் இழந்து நிற்கும் அவலமும் வரும்.

- -ஆ.மரிய சுந்தர்ராஜ், திருச்சி-4.

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு