........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

விவாதக்களம்-4

நவீன அறிவியல் உலகிலும் மூடநம்பிக்கைகள்

அறியாமையே!            இயலாமையே!

( தலைப்பு தந்த வாசகர்: எஸ்.அனந்தவேலு, மானாமதுரை)

as

அறியாமையே!  

உயிர்த்தெழுவான் தம்பி அறியாமையா?

எந்த தவறுக்கும் முதல் காரணம் அறியாமையே. யார் எதைச் சொன்னாலும் அறியாமையால் அதை அப்படியே நம்பிக்கை கொள்வதால் இந்த மூடநம்பிக்கைகள் வளர்ந்து வருகிறது. இதற்கு ஆன்மீகத்தில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்து மதம் மட்டுமில்லை, எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதாயில்லை. சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் கிறித்துவப் பாதிரியார் ஒருவர் இறந்து போன தன் தம்பி மீண்டும் உயிர்த்தெழுவான் என்று ஒரு மாதத்திற்கும் மேலாக குடும்பத்துடன் ஜெபம் (பிரார்த்தனை) செய்த மூட நம்பிக்கையை அறியாமையாக எடுத்துக் கொள்வதா? . இல்லை அந்த மதத்தின் மீது கொண்ட அதிகப்படியான (மூட) நம்பிக்கை என்பதா?

-எஸ்.முத்துக்குமார், பெல்லாரி (கர்நாடகம்).

முடிவு எப்போதோ?

ஏன்? எதற்கு என்று சிந்திக்காமல் பெரியவங்க சொல்லியிருக்காங்க... நாங்க செய்றோம் என்று அறியாமையில்தான் பலரும் மூட நம்பிக்கையான பல செயல்களைச் செய்கிறார்கள். பெரியவர்கள் அந்தக் காலத்தில் அறியாமையில் செய்த பல விசயங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த தொடருக்கு முடிவு எப்போதோ...?

 -இரா.விஸ்வநாதன், திருவண்ணாமலை.

மன நிம்மதியைத் தேடி...

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து விடுபட எத்தனையோ தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள், சுய முன்னேற்ற புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றை யாரும் தேடிப் போவதில்லை. பலரும் மன நிம்மதியைத் தேடிச் செல்லும் போது அவர்களுக்கு சாதகமாய்த் தோன்றுவது சில மூடநம்பிக்கையான விசயங்கள்தான். இந்த விசயங்கள் அவர்களுக்கு அறியாமையால் வந்தாலும் பின்னாளில் அதிலேயே முடங்கிப் போகிறார்கள். இது அவர்களை மட்டுமின்றி அவருடன் இருக்கும் மற்றவர்களையும் கூட இழுத்துக் கொள்கிறது.

-அன்புக்கொடி, நாகப்பட்டினம்.
 

இயலாமையே!

தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

இயலாமையில்தான் தன்னால் முடியாது என்கிற எண்ணமே வருகிறது. இயலாமையின் வெளிப்பாடு மூடநம்பிக்கையைத் துணை தேடுகிறது. தன்னம்பிக்கை இல்லாத இவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் அதிலேயே முடங்கிப் போய் விடுகிறார்கள். இவர்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை...

- கே.செல்வமாரி, மதுரை-10.

அறியாமையா? இயலாமையா?

குழந்தைகளை உயிருடன் மண்ணுக்குள் புதைப்பது,மொட்டைத் தலையில் தேங்காய் உடைப்பது போன்ற மூடநம்பிக்கையான செயல்களை கடவுளின் பெயரைச் சொல்லிச் செய்யும் இந்த அறியாமையால் பின்னால் என்ன நடக்கும்? என்று அறிவியல் பூர்வமாகச் சிந்திக்காமல் இருப்பது வேதனைக்குரியது. விபத்து நடந்தால் அதிகமாக தலையில்தான் காயமேற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்கிற முன்னெச்சரிக்கையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய சட்டமியற்றியுள்ள அரசு இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அறியாமையா? இல்லை... இயலாமையா ?

-ஆர்.எஸ். சுரேஷ் பிரபு,சென்னை-14.

திருத்தவோ, திருப்திப்படுத்தவோ முடியாது.

 தங்கள் முயற்சி, உழைப்பை நம்பாமல் சோதிடம் மூலம் தம் நிலை உயர்ந்திட வழி தேடும் அவலம் இன்னும் பலருக்கும் இருக்கு. இது அவர்கள் இயலாமையைத்தான் காட்டுகிறது. நவீன அறிவியல் வளர்ந்தாலும் , நாகரீகம் வளர்ந்தாலும் மூடநம்பிக்கையான செயல்பாடுகளின் வளர்ச்சியும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இவர்களைத் திருத்தவும் முடியாது, திருப்திப்படுத்தவும் முடியாது.

-ஏகாம்பரம், கும்மிடிப்பூண்டி..

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு