........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

   குறுந்தொடர் கதை

கடல்

வாசுகி நடேசன்

5. எங்க என்ற பிள்ளை?

மறுநாள் காலை வழமை போலப் புலர்கிறது... மேரி குடிசையில் மதியச் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். இன்று வெள்ளி... நாளை சனி... நாளை மறுநாள்... ... அவள் மனம் ஞாயிற்றுக் கிழமைக்காக ஏங்கித் தவிக்கிறது.

இராசனின் கட்டுமஸ்தான உடல்... அவனது காதல் கனிந்த பார்வை... அன்பொழுகும் பேச்சு... ... அவளது மனக்கண்களில் தோன்றி இன்பக் கிலுகிலுப்பை ஏற்படுத்திய வண்ணம் இருந்தன.

அவள் கனவு நிலையைக் குலைப்பது போலச் சந்தையில் இருந்து திரும்பியிருந்த மரியம்மாவின் குரல் வெளியில் கேட்க்கிறது.

“மேரி... மேரி... ...”

மேரி அவசரமாய் குடிசையின் வெளியில் ஓடி வருகிறாள்.

“என்னம்மா... இப்படிப் பதறுகிறாய்...பதறாமல் சொல்லனை.”

“நேற்றைக்குக் கடலுக்குப் போன போட்டிலை ஒண்டை நேவி மறிச்சுப் பெடியலைப் பிடிச்சுக் கொண்டு போட்டுதாம்.”

“ உனக்கு ஆர் சொன்னது.” தாயின் பதற்றம் மேரியிடமும் தொற்றிக் கொள்கிறது.

“சந்தைக்குள்ளை ஒரே கதையாக் கிடக்குது. அதுதான் நான் ஓடிவாரன்”.

“நேற்றைக்குக் கடலுக்கை எத்தனை போட்டுப் போயிருக்கும். அதுக்கு நீ ஏன் பதறுகிறாய்...?” மேரி தாயைத் தேற்றுகிறாளா...? அல்லது தனக்குத் தானே ஆறுதல் சொல்லுகிறாளா...?

“ எனக்கென்னமோ பயமாக்கிடக்குது... வா போய் முதலில பாத்திட்டு வருவம்.”

மரியம்மா மீன் கடகத்தைக் குடிசையை நோக்கி எறிகிறாள்...ஏணையில் கிடக்கும் குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு கடலை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் செல்லுகிறாள். அவளைத் தொடர்ந்து ஒருவிதக் கலக்கத்துடன் மேரியும் போகிறாள்.

கரையில் ஒதுங்கிய படகொன்று இருவர் கண்களிலும் படுகிறது.

அதிலிருந்து சூசை, டானியல், டேவிட் மட்டுமே இறங்கி வருகிறார்கள். ஆனால் கபரி... ராசன்... ..

மரியம்மா சூசையிடம் பாய்ந்து செல்லுகிறாள். போட்டில் இருந்து சோர்ந்தவனாய் வந்த சூசையை உலுக்கி எடுத்து விடுகிறாள்.

“எங்க என்ற பிள்ளை... அவனை எங்க விட்டிட்டு வந்திருக்கிறீர்...? மரம் மாதிரி நிக்காமச் சொல்லுமன்...”

மரியம்மாவுடன் இணைந்து மேரியும் தகப்பனை உலுக்குகிறாள்...

“கபரி... ராசன் எல்லாம் எங்க அப்பு...? “ மேரிக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது.

சூசை பதிலேதும் கூறாமல் குமுறி அழுகிறான்.

“அவங்களைக் குறுக்கால போன நேவி பிடிச்சிட்டுப் போட்டாங்கள்...

கிணற்றுக்குள் இருந்து ஒலிக்கும் குரலாக டானியலிடமிருந்து பதில் வருகிறது.

“ஐயோ என்ற பிள்ளை...என்ற ராசா... இதுக்கோ நான் பத்து மாசம் பத்தியம் இருந்து பெத்து வளர்த்தன்...என்ற குலக் கொழுந்த கோதாரியில போறவங்கள் கொண்டு போனங்களோ...”

மரியம்மாவின் ஒப்பாரியில் ஊரே கூடி விடுகிறது. மேரி குமுறிக் குமுறி அழுகிறாள் அவள் அழுகையில் அவள் எதிர்காலமும் மெல்ல வழுவிப் பாதாளம் நோக்கிச் செல்வது போன்ற உணர்வு மேலிடுகிறது.

கடலின் அலைகள் தரையில் மோதி எழும் பேரோசை அவர்களின் ஒப்பாரிக்குச் சுருதி கூட்டுகிறது.

( தொடரும்)

பகுதி-4                                                                                                                                                                      பகுதி-6

 
                                                                                                                                                                                                                 முகப்பு