........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                                        
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

குறுந்தொகைக் கதைகள்-4

அவர் திரும்பி வருவாரா...?

-முனைவர். மா. தியாகராஜன்.

ஒருவரை ஒருவர் கண்டனர்; காதலித்தனர்; ஊரார் கண்ணில் படாமல் பகல் பொழுதுகளில் சந்தித்துப் பரவசம் அடைந்தனர். ஊரார் கண் உறங்கும் பொழுதுகளில் இணைந்து இன்பம் துய்த்தனர்.

காலம் கடந்தது. வளவனுக்குச் சிந்தனை ஒன்று பிறந்தது. காதல் வாழ்க்கையை - களவு வாழ்க்கையை எத்தனை நாளுக்குத்தான் இப்படியே நடத்துவது? காதலித்துக் களிப்பூட்டும் கன்னி வள்ளியை ஊரார் அறியக் கைப்பிடித்து, மணம் முடித்து வாழ வேண்டும் என்று துடித்தான்.

ஆனால்..............? தடை! தடை! என்ன தடை?

பெற்றோரா? இல்லை!

மற்றோரா? இல்லை!

பின் என்ன தடை?

பொருள்! பொருள்!

ஆம்!

இனிமையுடன் இல்லறத்தை நடத்த வேண்டுமானால் இன்றியமையாதது பொருள் அல்லவா!

எனவே, ஒரு முடிவுக்கு வந்தான். தலைவி வள்ளியைச் சந்தித்தான். அழகு ஒழுகும் அவள் முகத்தை அள்ளி அள்ளிப் பருகினான் கண்களாலே.

“ஏன் அத்தான் இந்தப் புதுமை? என்றைக்கும் இல்லாததாய் இன்றைக்கு ஒரு மாதிரியாய்ப் பார்க்கிறீர்கள்? ஏன் ஒரு மாதிரியாகத் துடிதுடிக்கிறீர்கள்? எதற்காக நெஞ்சம் படபடக்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றாள் வள்ளி.

“வள்ளி! அள்ளி உன்னை அணைத்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால்... அதற்கு முடியாது போலிருக்கிறது...!” என்று சொல்லி முடிப்பதற்குள்...

“ஆ...! அத்தான்! என்ன சொல்கிறீர்கள்?”

“பதறாதே நிரந்தரமாய் அல்ல! தற்காலிகமாய்! சிறிது காலத்திற்கு நாம் பிரிந்திருக்க வேண்டும்!”

“என்ன அத்தான் கூறுகிறீர்கள்? எப்படி என்னால் பிரிந்திருக்க முடியும்?”

“நல்லதொரு வாழ்வை நாம் அடைய வேண்டுமதனால் இன்னல் சிறிது ஏற்கத்தானே வேண்டும்!”

“ஏன் அத்தான் இப்படிக் கலங்க வைக்கிறீர்கள்? நடக்கப் போவதைத்தான் நன்கு விளக்கமாகக் கூறுங்களேன்!”

“ஆம் வள்ளி! நம் காதல் ஈடேற வேண்டுமானால் நம் திருமணம் நடந்தேற வேண்டுமானால் பொருள் வேண்டும். நம் இன வழக்கப்படி பொருள் திரட்டி, அதைக் கொண்டே மணம் முடிக்க வேண்டும். அப்பொருளைத் திரட்டவே அன்பே உன்னைப் பிரிந்து அயலூர் செல்ல முடிவு செய்துள்ளேன்” என்றான்.

அரைகுறை மனதுடன் அவளும் ஒப்புக் கொண்டாள். வளவன் புறப்பட்டுச் சென்றான்.

-----------------

காலம் கடந்தது!

அவன் திரும்பி வருவதாகக் குறித்துக் கூறிய காலமும் வந்தது. அவள், தினந்தோறும் தெருவையே நோக்கியவளாய் இருந்தாள். கணப் பொழுதும் வாசலிலேயே கண் வைத்தவளாய் இருந்தாள்.

குறித்த காலமும் கடந்து விட்டது!

அவளோ, உறங்குவது இல்லை; உண்பது இல்லை; ஒரு பொழுதும் தன்னை ஒப்பனை செய்து கொள்ளவும் இல்லை.

இதனால், உடல் மெலிந்தாள்; உள்ளம் நலிந்தாள்; கலை இழந்த கோவில் போல் காட்சி தந்தாள்.

அவளது கோலம் கண்ட தோழி, “ஐய்யோ! இவளை நான் எப்படித் தேற்றுவேன்? அவனுடைய சிறு பிரிவையும் தாங்க மாட்டாளே! அவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறாளே! இவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவேன்?” என்று செய்வது அறியாமல் அங்கலாய்த்தவளாய் வள்ளி அருகே போய் நின்றாள்.

அன்புத் தோழி அருகே வந்து நிற்பதை அறிந்த வள்ளி, அவளிடம் எதுவும் பேச விரும்பவில்லை. தன் துயர் கண்டும் தோழி வாளாவிருக்கிறாளே என்ற சினம் அவளுக்கு. எனவே அவளிடம் நேரடியாகப் பேசாது, ஊராரைப் பழிப்பது போல் தனக்குத்தானே பேசித் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறாள் - மறைமுகமாகத் தோழியைச் சாடுகிறாள்.

ஐயோ! வாடைக்காற்று வீசுகிறதே! வலிமையாக வீசுகிறதே! சுழன்று சுழன்று வீசுகிறதே! உடல் எல்லாம் நடுங்கும்படி மிக மிக வருத்துகிறதே! இந்த வாடைக் காற்று எப்படிப்பட்டது? சேர்ந்திருப்போர்க்கு இன்பத்தைக் கொடுக்கக் கூடியது - மனந்திருப்போர்க்குத் துன்பத்தைத் தரக்கூடியது.

இப்படிப்பட்ட துன்பகரமான நேரத்தில் என்னைப் பற்றி நினைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? என்னைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

ஊரே இனிமையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் மட்டும் துயிலாமல் துவண்டு கொண்டிருக்கிறேன். யார்க்கு இது புரியும்.

என் துன்பத்தை ஆற்றிக் கொள்ளும் வழி அறியாமல் தவிக்கிறேன். என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை. ஆறுதல் சொல்லி அவலம் போக்குவார் யாரும் இல்லை. நான் மட்டும் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் என்ன செய்வேன்? எந்நிலையை யாரிடம் போய்ச் சொல்வேன்? அதைக் கேட்பதற்குத்தான் யார் இருக்கிறார்கள்? யாரும் இல்லையே! அதற்காக நான் எதன் மீதிலாவது தலையை முட்டிக் கொள்ளவா?

என் நிலைக் கண்டு, இரக்கம் கொண்டு ஆறுதலும் தேறுதலும் கூறத் துணையாய் இருக்க யாருமே இல்லையே! அதற்காக நான் பிறரைத் தாக்கவா?

அல்லது என் நிலைக்காக நானே வருந்தி ஓவென்று ஓலமிட்டு அலறவா?

என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறேன், புரியாமல் துடிக்கிறேனே!” என்று தனக்குத்தானே புலம்புகிறாள்.

தலைவியின் கூற்றிலிருந்து, உளவியல் முறைப்படி ஆராய்ந்தால், சினமுற்றோர் மேற்கொள்ளக் கூடிய மூன்று வேறுபட்ட நிலைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவை:

1.முட்டுதல் - கையறு நிலை
2. தாக்குதல் - சினத்தின் வெளிப்பாடு
3. கூவுதல் - பிறர் கவனத்தை ஈர்த்தல்

“என் தலைவிதி இது என்று என்னையே நொந்து கொண்டு எதிலேனும் முட்டிக் கொள்வேனோ?

என் நிலை கண்டும், இரக்கம் கொள்ளாமல் வாளாவிருப்போரைத் தாக்கிச் செயற்பட வைப்பேனா? அழுது கூவி என் துயர் அவர் நெஞ்சில் தைக்குமாறு - பதியுமாறு குறிப்பாக உணர்த்துவேனா?”

- என்ற தலைவியின் உரையிலிருந்து மேற்குறிக்கப்பட்ட மூன்று நிலைகளையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

“முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்
ஓரென் யானுமோர் வற்றி மேலிட்டு
அது ஒல்லெனக் கூவுவேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோயறியாது துஞ்சம் ஊர்க்கே
(குறுந்தொகை: 28)

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

     

 
                                                                                                                                                                                                                 முகப்பு