........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                                        
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

குறுந்தொகைக் கதைகள்-4

என்னைக் குறை சொல்லலாமா...?

-முனைவர். மா. தியாகராஜன்.

அது ஒரு வளமான கிராமம்!

வளம் செறிந்த வயல்கள் சுற்றிலும் நிறைந்த கிராமம்! - செல்வம் கொழிக்கும் செழிப்பான கிராமம்!

செல்லம்மாள் - செல்லப்பன்; இருவரும் இல்லறத்தை இனிதே, இன்புற, எந்தக் குறையும் இல்லாமல் நடத்தி வந்தனர்.

இது இயல்பு தானே! - செல்வம் நிறைந்த குடும்பத்து இளைஞர்களுக்கு இது சாதாரணம் தானே!

செல்லப்பனும் தடம் மாறினான் - நிலை தடுமாறினான் - மனைப் பெண்டியை விடுத்து விலைப் பெண்டியை நாடினான் - ஆற்று நீரில் குளிப்பதை விட்டுச் சேற்று நீரில் குளிக்க முனைந்தான்.

அவ்வூரில் இருந்த விலைமாது ஒருத்தியை - பரத்தை ஒருத்தியை நாடிச் சென்றான்; அடிக்கடி அவளைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டான்.

மழைக் காலம்!

மழை பொழிந்து அவ்வூர் ஆற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

புதுவெள்ளம் வரும் பொழுது ஆற்றில் நீராடிக் களிப்பது அக்கால மக்கள் வெள்ளம்.

அன்று!

செல்லம்மாளை அழைக்காமல் செல்லப்பன் மட்டும் தனியே ஆற்றுக்குச் சென்றான்.

அங்கே அவன் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள் பரத்தை!

இருவரும் சந்தித்தனர்; இன்ப வெள்ளத்தில் மூழ்கினர்; இன்பமாய் வெள்ளத்தில் மூழ்கிக் களித்தனர்.

இந்தக் காட்சியை எல்லாரும் பார்த்தனர்!

செல்லம்மாளின் தோழி சின்னப்பெண்ணும் பார்த்தாள்; மனம் பதைத்தாள்; பதறானாள்; செல்லம்மாளிடம் விரைந்து சென்றாள்; கண்டதைக் கூறினாள்.

அது கேட்ட செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தாள்; நெருப்பில் விழுந்த புழுவெனத் துடித்தாள்; ஏதும் செய்ய முடியாதவளாய் அதிர்ந்து நின்றாள்; இதயம் படபடத்தாள்; என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்.

அந்தச் சமயத்தில்.....?

ஆற்றில் பரத்தையோடு ஆடிக் களித்த செல்லப்பன் அது முடித்து வீட்டிற்குள் நுழைந்தான்.

அவன் நுழைந்தானோ, இல்லையோ வீட்டிற்குள் இடிமுழக்கம் எழுந்தது!

சாது மிரண்டால் காடு கொள்ளாது! அமைதியான பெண் வெகுண்டால் அவனியே தாங்காது!

ஆம்! செல்லப்பனின் அமைதி தவழ்ந்த வீடும் அருஞ்சமம் புரிந்திடும் போர்க்களமாய் மாறிற்று.

“என்னங்க! இது உங்களுக்கே நியாயமா? எங்கே சென்று வருகிறீர்கள்? எந்த முகத்தோடு இங்கே வந்தீர்கள்? ஆற்று நீர் பிடிக்கவில்லையோ சேற்று நீரை நாடிச் சென்றீர்கள்? நான் பிடிக்கவில்லையோ அடுத்தவளை நாடிச் சென்றீர்கள்?”

அதிலும் அவள் எப்படிப்பட்டவள்?

ஒரு வேசி - விலைமாது - பலரைக் கூடும் பரத்தை - பணத்திற்காகத் தன் உடலை விற்பனைச் செய்பவள் - பலரோடு தொடர்பு கொள்ளும் ஒரு இழி பிறவி - சீ! அவளோடு தொடர்பு கொண்டீரே! கேவலம்! மகா கேவலம்! அவளோடு கூடினீரே அருவருப்பாக இல்லையா? அதுதான் போகட்டும்! யாருக்கும் தெரியாமல் மறைவாகவாவது அவளுடன் கூடினீரா? ஊரெல்லாம் கூடியிருக்கும் ஆற்றில், பலரும் பார்க்க, அவளுடன் மூழ்க, நீராடினீரே! அது எவ்வளவு கேவலம்! குடும்ப மானமே போய்விட்டதே! இது உங்களுக்கே தகுமா? மானத்தை விற்றுப் பிழைப்பவளிடம் மனத்தைப் பறிகொடுத்தீரே! இது உங்களுக்கே அடுக்குமா?” என்று பலவாறு பேசி ஆர்ப்பரித்தாள்.

இதை, வீட்டுக்கு வெளியே வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பரத்தையரின் தோழி கேட்டு நின்றாள் - நின்றவள் எல்லாவற்றையும் நன்கு கேட்டாள் - கேட்டவள் நேரே பரத்தையிடம் விரைந்தாள் - செல்லம்மாள் அவளைப் பற்றி இழிவாகப் பேசியதை எல்லாம் தெளிவாக, ஒன்றுவிடாமல் சொன்னாள்.

அது கேட்ட பரத்தை ஆத்திரம் கொண்டாள் - ஆர்ப்பரிக்கத் தொடங்கினாள்:

“அடியே! என்னை இழித்துப் பேச அவளுக்கென்ன தகுதி இருக்கிறது? நான் பரத்தை தான்! ஒப்புக் கொள்கிறேன்! ஊருக்கே தெரியும்! ஆனால், தன் கணவனை அடக்கி வைக்கும் ஆற்றல் அவளுக்கு இல்லையே! - தன் கணவனைத் திருப்திப்படுத்த அவளால் முடியவில்லையே! அதற்கு நான் என்ன செய்வேன்? அவன் என்னை நாடி வருகிறான்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

அடியே! தோழியே! ஆம்பல் மலர் பூத்திருக்கும் அழகான செடியைப் பார்த்திருப்பாயே! அந்த ஆம்பல் செடியின் அழகுத் தழைகளை என் மேனியில் சுற்றி உடுத்துக் கொண்டு பெருவெள்ளம் புரண்டோடும் ஆற்றிலே மூழுகுவேன் - நீருக்குள் நுழைவேன் - நீரைக் குடைவேன் - நீராடுவேன் - நீண்ட மகிழ்ச்சி அடைவேன்.

இப்படி நீராடுவதில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. அது என் விருப்பம். அதைத் தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. என் விருப்பப்படியே நீராடுவேன். அதைப் போலவே, அவன் என்னை நாடி வந்தால் நான் அவனுடன் சேர்ந்திருப்பேன். அதுவும் என் விருப்பம். அவள் வேண்டுமானால் அவனை அடக்கி வைத்துக் கொள்ளட்டும்! - தடுத்துக் காத்துக் கொள்ளட்டும்!

அதியமான் அஞ்சி (எழிலி) என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் தன்னாட்டுப் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து செல்ல வந்த பகைவர்களோடு போரிட்டு, வென்று, அவற்றைப் பாதுகாத்தான். இது வரலாறு. அந்த அதியமானைப் போல் அவளும் தன் கணவனைக் காத்துக் கொள்ளட்டும்! அவளால் முடியாது என்றால் அவளுடைய உறவினர்களைக் கொண்டாவது காத்துக் கொள்ளட்டுமே! அப்படிச் செய்யாமல் என்னை இழித்துப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லையே!” என்று அவள் தன் செயலுக்காகச் சிறிதும் நாணம் கொள்ளாமல், செல்லம்மாளின் பரிதாப நிலைக்காக இரக்கம் கொள்ளாமல் எள்ளி நகையாடினாள் - ஆணவத்தோடு பேசினாள்.

“கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி,
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி,
யாம் அஃது அயர்கச் சோறும்; அஃது
அஞ்சுவது உடையாள் ஆயின், வைம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழிலி
முனை ஆன் பெருநிறை போல
கிளையோடு காக்கதன் கொழுநன் மார்பே”
 (குறுந்தொகை 80)

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

     

 
                                                                                                                                                                                                                 முகப்பு