........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
a |
குறுந்தொகைக் கதைகள்-4 தலைவன் பிரிவிற்கு வருந்தலாமா...? -முனைவர். மா. தியாகராஜன்.
ஒரு தொழிலை மேற்கொண்டு, அதன் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்று, அந்தத் தொழிலைச் செய்து பொருள் திரட்டி வருதல் ஆண்களின் கடமை ஆகும்! -
தொழிலே ஆடவர்க்கு உயிர் ஆகும்! - அந்த வரம்புக்கு ஏற்ப - முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த கடமைகளுக்கு ஏற்ப அழகனும் தன் இல்லற வாழ்க்கையை இனிமையுடன் நடத்திச் செல்வதற்குத் தேவையான பொருளைத் திரட்டுவதற்காகத் தலைவி அழகியை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்றான். அவன் பிரிந்து சென்றது முதலே அழகி அவன் நினைவாகவே இருந்தாள். அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில்லை. அப்படியே சில சமயங்களில் அழகுபடுத்திக் கொண்டாலும் கண்களில் மையிட்டுக் கொள்வது இல்லை. ஏன் தெரியுமா? கண்ணிலே தங்கிக் காட்சி அளித்துக் கொண்டிருக்கும் கணவனின் உருவத்தை அந்த மை மறைத்து விடுமாம்! என்னே அவள் அன்பு. சரியாக அவள் உண்பதில்லை. அப்படியே உண்டாலும் உண்ணும் உணவை நன்கு ஆற வைத்துக் குளிர வைத்தே உண்பாள். ஏன் தெரியுமா? அவள் நெஞ்சுக்குள்ளே தலைவன் நிலைத்துத் தங்கி உள்ளான். சுடு சோற்றை உண்டால் - சுடு பொருள்களை உட்கொண்டால் அந்தச் சூடானது நெஞ்சத்தில் தங்கியிருக்கும் கணவனைச் சுட்டுப் பொசுக்கி விடுமாம்! என்னே அவள் பாசம்! இவ்வாறு அவனுடைய பிரிவை ஆற்ற மாட்டாமல் - தாங்க முடியாமல் உள்ளத்தையும் உடலையும் வருத்திக் கொண்டு, கவலை தோய்ந்த முகத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள்! அவள் தோழி அங்கே வந்தாள். அன்புத் தோழியை - அழகியை நோக்கினாள். “ஏண்டியம்மா அழகு! அவர்தான் விரைவில் திரும்பி விடுவாரே! அதுவரைக்கும் பொறுக்கக் கூடாதா? அவர் உன் அருகிலேயே இருக்க வேண்டுமா? கொஞ்சம் நாள் கூடப் பிரிந்திருக்கக் கூடாதா? என்று கேலியும் கிண்டலும் கலந்திட, அதே சமயம் ஆறுதலும் தேறுதலும் கூறும் வகையில் கேட்டாள். அது கேட்ட அழகு, “அடியே தோழி! அமுது! அப்படி இல்லையடி! இந்தச் சில நாள் பிரிவைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் கோழை இல்லையடி - பொறுமையும் பொறுப்பும் அற்றவள் இல்லையடி! அவருடைய பிரிவுக்காக நான் வருந்தவில்லை. இல்லறத்தின் நன்மைக்காக என் தலைவர் பிரிந்துள்ளார் - விரைந்து வந்து சேர்ந்திடுவார். குளிர்ச்சி நிறைந்த என் மார்பிலே தலை வைத்துத் தூங்குவதை வெறுத்துத் தொழிலை விரும்பிப் பிரிந்து சென்றுவிட்டாரே என்று எண்ணி நான் சிறிதும் வருந்தவில்லை. இது தற்காலிகப் பிரிவே ஆகும் - அவர் தன் கடமைக்காகப் பிரிந்த பிரிவே ஆகும். ஆனால், அவர் சென்றுள்ள வழியை நினைத்துத் தான் வருந்துகிறேன். அப்பாதையை நினைத்தாலே பயமாக இருக்கிறதடி! அப்பாதையை நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறதடி! அதுவோ பாலை வழி! பாலை நிலம்! அந்த வழி எப்படிப்பட்டது தெரியுமா? வெப்பம் நிறைந்த காற்று வேகமாக வீசிக் கொண்டே இருக்கும்; ஓங்கி நிற்கும் வாகை மரங்கள்! அவற்றில் முதிர்ந்து, முற்றி, உலர்ந்து போன காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக் காய்களுக்குள் காற்சிலம்புக்கு உள்ளே இருக்கும் உள்ளிடு பரல்களைப் போல விதைகள் இருக்கும். வெப்பக் காற்று வீசுகின்ற பொழுது அவ்விதைகள் கலகலவென ஒலிக்கும். ஆனால் அந்த வாகை மரங்களில், உலர்ந்து போன காய்கள் மட்டும் தொங்கிக் கொண்டிருக்குமே தவிர ஓர் இலை கூட இருக்காது. இலைகள் எல்லாம் வெப்பத்தால் கருகி உதிர்ந்து போய் மரங்கள் எல்லாம் பட்டுப் போய் மொட்டையாய் நிற்கும். அதனால், வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்ளவும், சற்று இளைப்பாறிக் கொள்வதற்கும் ஒதுங்குவதற்குக் கூட சிறிதளவு நிழல் கூட கிடைக்காதே!
அவ்வளவு கொடிய வழி ஆயிற்றே!
அதை எப்படித்தான் அவர் தாங்கிக் கொள்வாரோ? அது மட்டுமா?
அந்தப் பாலை நிலத்தில் உள்ள மலைகள் கூட அங்கு வீசும் வெப்பத்தைத்
தாங்க முடியாமல் பிளந்து போகுமே?
அவ்வளவு கொடிய அனல் வீசும் பாதை ஆயிற்றே! - பாலை ஆயிற்றே! -
அருஞ்சுரம் ஆயிற்றே! ஐயோ! தோழி! அமுது! அன்பிற்குரியவளே! இதற்காகத்தான் வருந்துகிறேனே தவிர, அவருடைய பிரிவை எண்ணிச் சிறிதும் வருந்தவில்லை. அதனை ஆற்றிக் கொள்ளும் ஆற்றல் எனக்கு நிரம்பவுண்டு என்று அழகி வருத்ததிற்கான உண்மைக் காரணத்தை கூறினாள். அவள் உரை கேட்ட அமுது, அழகி தன் கணவனிடம் கொண்டுள்ள களங்கமற்ற காதலையும், பாசத்தையும், பற்றையும், கடுங்கதிர் வெம்மையில் காதலன் படும் பாட்டை எண்ணி இவள் நடுங்கி வருந்துவதையும் எண்ணி எண்ணி வியந்தாள்.
“வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென,
|
முகப்பு |