கவிதை:
506
சமத்துவபுரம்?

யாரானால் என்ன.. .
எவரானால் என்ன...
எப்படிப்பட்ட மரணமானாலும்
ஆறுக்கு மூன்று
கல்லறைக் குழிக்குள்
பேச்சின்றி, மூச்சின்றி
ஆடாது, அசையாது
கண்கள் மூடி
கனவுகள் துறந்து
காற்றுக்கும், மழைக்கும்
குளிருக்கும், வெயிலுக்கும்
கவலைப்படாமல்
தாய்வயிற்று
உறைவிடத்தை
நினைத்தவர்களாய்
பூமாதேவி வயிற்றில்
நித்திரையிலிருக்கிறார்கள்..!
வாழ்ந்தபோது
வாழ்த்தாத வாசகங்கள்
இறந்தபோது கல்லறைமேல்
பொறிக்கப்படுவதை
வெளியில் வந்து பார்க்காத
கல்லரைவாசிகளுக்குள்,
கட்சி பாகுபாடு இல்லை..
கருத்து வேற்றுமை இல்லை..
கருப்பு வெள்ளை பேதமில்லை..
உயர்ஜாதி, கீழ்ஜாதி இல்லை..
அருகில் உள்ள கல்லறையில்
ஆணா? பெண்ணா?
அக்கரை இல்லை..
அழகனா? அழகியா?
ஆட்சேபனை இல்லை..
நல்லவனா? கெட்டவனா?
நண்பனா? பகைவனா?
நாத்திகனா? ஆத்திகனா?
வாலிபனா? வயோதிகனா?
வாழ்ந்தவனா? வீழ்ந்தவனா?
ஏழையா? பணக்காரனா?
எடுபிடியா? முதலாளியா?
அறிவாளியா? முட்டாளா?
எதையும் எண்ணி
உள்ளே உறங்குவோர்
உணர்ச்சிவசப்படுவதில்லை..!
செயற்கையாய் மனிதன்
செதுக்கி வைத்த
வேற்றுமைகளை
வென்று நிற்கும் கல்லறைத்தோட்டம்
சமத்துவப்புர கோட்பாடுகளின்
சன்னிதானம்..!
-பாளை.சுசி.
|
|