|
கவிதை: 673
அர்த்தமுள்ள இந்த மதம்!

அடுத்த வீட்டில்
அறுபதாம் கல்யாணம்-
மாலையும், கழுத்துமாய்
மணமேடையில்
தாத்தாவும், பாட்டியும்..!
வாழ்த்திப் பேசுகிறார்கள்,
சீர் செய்கிறார்கள்,
ஆரத்தி எடுக்கிறார்கள்,
‘வாராயோ தோழி’-
பாடல் கேட்கிறது..
பாட்டி கைபிடித்து
கூட்டிச் செல்கிறார்
கைத்தடி தாத்தா..!
முப்பது வயதில்
மூழிக் கழுத்து,
பொட்டில்லை, பூவில்லை,
வெள்ளை உடை..
மூலையில் நின்று
மூக்கை உறிஞ்சிக்
கண்ணீர் வடிக்கிறாள்
அரை குறையாய்
வாழ்க்கையை அனுபவித்த
அபலைப் பெண்;;..
வறுமையின் மறுபக்கம்
வரதட்சணைக் கொடுமை..!
வயது கடந்த பருவம்
முதிர் கன்னி..!
திருமணம்..?!
சொர்க்கத்தில் இன்னும்
நிச்சயக்கப்படவில்லை அவளுக்கு..!
ஆனால்,
அனுதினமும்
கனவில் வந்து போகும்
காட்சிப் பொருள் அவளுக்கு..!
‘பாலிருக்கும், பழமிருக்கும்’
கேட்டு, கேட்டு
அலுப்புத் தட்டிய பாடல்..!
மாமரத்தில்
ஜோடிப் புறாக்கள்,
ரசிக்க மறுக்கும் மனம்..!
டிவி பெட்டியில்
காதல் காட்சிகள்,
வெறுத்து ஒதுக்கும் கண்கள்..!
படுக்கை அறைக்குள்
பால் நிலா,
பற்றி எரியும் உடல்..!
கண்கள் சிந்தும்
உப்பு நீரால்
கனத்துப் போன
தலையணை..!
கையில்
அர்த்தமுள்ள இந்த மதம்;
அதுவும் புரியவில்லை அவளுக்கு..!!
-பாளை.சுசி
|
|