|
கவிதை: 686
ஊர்க்குருவியின் கவிதைகள்...!

நீர்த்த வார்த்தைகள்
மரத்த உணர்வுகள்
அர்த்தமற்ற ரசனைகள்...
இவை மத்தியில் என் வரிகளை
அரூவ வெளியில் புகையும் மலை முகடென
எழுதி முடித்திருக்கையில்
வெறும் சாம்பலாய் மிஞ்சிவிடுகிறது மனம்,
பீனிக்ஸ் பறவையை மட்டும் மீதமாய் விட்டு விட்டு...
சூழ் கொள்ளும் மகரந்தம் என
எழுதி எழுதி எழுதி... ... ..
கசக்கி எறிந்த பின்
அவற்றை அறிவியல் கூடமாக்கி ஆராயும்
வக்கிர உணர்வுகளில்
என் வார்த்தைகள்
சிதைந்து உருமாறிப் போகின்றன.
இதில் என் எழுத்திற்கு
மறுபிறப்பு கொடுத்ததாய் பெருமிதம்...
அதற்கு மேலும் நீண்டுவிடும் சிலாகிப்பு என
சூடு கண்ட பூனைகள்
வெற்றுப் பாத்திரத்தை உருட்டி அலைகின்றன!
என் கவிதை அறைகளில்...
என் எழுத்துக்களை சுற்றி ஓநாய்கள்...
நிர்வாணமாய் என் உணர்வுகள்...
என் எழுத்துக்களின் ஆடைகள்
சதைகளோடு பிடுங்கி எறியப்படுகின்றன!
பிய்ந்து தொங்கும் ரத்த சதைகளோடு
பிறந்த மேனியாய் ஓடுகிறன என் வரிகள்,
திறந்த திசை நோக்கி...
இத்தனைகுமான பின்னணியில்
தொடரும் என் கவிதைகள்
பரந்த வெளியில் கூவித்திரியும் ஊர்க்குருவியாய்
நிறைந்து வழிகிறது...
வெட்டவெளிக்குப் பழகியவன் காதுகளுக்கு
அவை தப்பிப் போகின்றன...
-ஆபுத்திரன்.
|