குறுந்தகவல்-20
பாரதியாரின் வாள் அப்பாசாமியிடம்...

"புரட்சி" என்ற சொல்லை முதன்முதலில் தமிழ்
உலகிற்கு அறிமுகம் செய்தவர் எட்டயபுரத்துக் கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதிதான்.
" ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி" என்றொரு கவிதையில் ரசியப் புரட்சியைப்
பற்றி பாடினார். அந்தப் "புரட்சி" என்கிற சொல்லை கம்யூனிசவாதிகள்
மட்டுமில்லை பல அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ்
சினிமாக்காரர்கள் கூட இந்தப் புரட்சியைப் பயன்படுத்தி புரட்சி நடிகர்,
புரட்சிக்கலைஞர் என்று போட்டு பெருமிதம் கொள்கின்றனர்.
இந்தப் புரட்சிக் கவிஞன் பாரதியார் உடற்கட்டைப் பொறுத்தவரை மெலிந்த
நோஞ்சான்தானாம். இருந்தாலும் இவர் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பில்
முன்னனியிலிருந்த வ.வே.சு.அய்யரிடம் சிறிது காலம் வாள் பயிற்சி பெற்றிருந்தார்
என்பதும், தனது பயிற்சிக்காக வாள் ஒன்றைக் கூட வாங்கி வைத்திருந்தார் என்பதும்
பலருக்கும் தெரியாத ஒன்று. காளிதேவி பக்தரான இவர் காளி கோவிலுக்குச் செல்லும்
போதெல்லாம் இந்த வாளுடன்தான் செல்வாராம். வெள்ளைக்காரர்கள் மீது கோபம் ஏற்படும்
போதெல்லாம் இந்த வாளைச் சுழற்றி வெள்ளைக்காரனை வீழ்த்துவது போல் செய்து
காண்பிப்பாராம்.
இந்த
வாள்
பாரதியார் வசித்த வீட்டில் இருந்த அவரது உறவினர் குடும்பத்தில் ஒருவரிடம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்தக் குடும்பத்தினர் எட்டயபுரத்தை விட்டு
வெளியூர்க்கு சென்று குடியேற நினைத்த போது, பாரதியார் பயன்படுத்திய வாளை
நாம் வைத்திருப்பதை விட பாரதி மேல் பற்று கொண்ட ஒருவரிடம் கொடுக்கலாமே என்று
அவர்கள் நினைத்தனர். அப்போது அவர்களுக்கு ஞாபகத்திற்கு வந்தவர் நாடக நடிகரான
பாரதி அப்பாசாமிதான்.
இந்த பாரதி அப்பாசாமியிடம் பாரதியார் வைத்திருந்த வாளை பரிசாகக் கொடுத்து இந்த
வாளை தொடர்ந்து பாதுகாத்து வாருங்கள் என்று கூறினர். இன்றும் அந்த வாள் பாரதி
அப்பாசாமியின் வீட்டுப் பூஜை அறையில் பயபக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சரி யார் இந்த பாரதி அப்பாசாமி?
பாரதியார் கவிதைகளில் ஈடுபாடு கொண்ட இவர் பாரதியார் வாழ்க்கை வரலாற்றை மேடை
நாடகங்களாக்கி பல்வேறு ஊர்களில் அரங்கேற்றி வருபவர்.
எட்டயபுரத்தில் பல முறை இவரது பாரதியார் நாடகங்கள் அரங்கேறி இருக்கிறது என்பதும்
குறிப்பிடத் தக்கது. இவர் பொதிகை தொலைக் காட்சியில் "பாடிப்
பறந்த குயில்" என்கிற தலைப்பில் 6 வாரத் தொடர் நாடகமாக நடத்தியுள்ளார். சில
திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள இவர் தற்போது
பாரதியார் நாடகங்கள் தவிர, இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களிலிருந்து
குறிப்பிட்ட சில பாத்திரங்களை மட்டும் மையமாகக் கொண்டு " சகுனியின் சபதம்" "பாதுகை
சுமந்த பரதன்" போன்ற நாடகங்களையும் எழுதி நடத்தி
வருகிறார்.
பாரதியார் மேல் பற்று கொண்டவர்கள் அல்லது அமைப்புகள் தங்களது விழாக்களின் போது
இந்த பாரதி அப்புசாமியின் பாரதியார் நாடகங்களை அரங்கேற்ற முன் வரலாமே?
விரும்புபவர்கள் தொடர்பு கொள்வதற்காக அவரது முகவரி கீழே...
பாரதி அப்பாசாமி,
269, சீனிவாச நகர் இரண்டாவது தெரு,
கோவில்பட்டி-628 502,
தூத்துக்குடி மாவட்டம்.
கைத்தொலைபேசி: 9965294151
- தூத்துக்குடி பாலு,
கோவில்பட்டி

தூத்துக்குடி
பாலு அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய குறுந்தகவல் காண

|