மனம் திறந்து-30
தனிமைதான் இனிமையா?.
-சக்தி
சக்திதாசன், லண்டன்.

என்ன சும்மா இரு என்றால் இந்த மனது கேட்கிறதா ?
இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே
ஒரு யுத்தத்தை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம்
விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின்
பாதையிலேயே அமைந்து விடுகிறது.
"தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான்.
அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன ? தனிமை என்பது கொடியது, தனிமை உணர்வினில்
ஒரு மனிதன் இன்பம் காணக்கூடியதாக இருக்குமா? என்னும் கேள்வியை மனங்களிலே
எழுப்புவதாகக் கூட அந்தப் பாடல் அக்கவிஞனின் மனதிலே விளைந்திருக்கலாம்.
"தனிமை" , "சுயநலம்" இவை இரண்டிற்கும் ஏதாவது தொடர்புண்டா ? என்னும் கேள்விக்கு,
ஆமாம் உண்டு என்று பதில் சொல்பவர்கள் இருக்கலாம். ஏன் அதில் ஓரளவு உண்மை கூட
இருக்கலாம். ஆனால் தனிமை எப்போது சுயநலமாக மாறுகிறது? மிகவும் ஆழமாகச்
சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி.
தான் மற்றொருவரோடு சேர்ந்திருக்கும் பொழுதுகளில் எங்கே தன்னோடு
சேர்ந்திருப்பவர்கள் ஏதாவது பயனடைந்து விடுவார்களோ என்னும் பொறாமையினால்
தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் தனிமை சுயநலத்தினால் விளைந்தது எனலாம்.
தான் மற்றையரோடு சேர்ந்திருக்கும் பொழுதுகளில் தன்னுடைய சேர்க்கை அவர்களுடைய
நேரத்தை விரயமாக்க மட்டுமே பயன்படுகிறது என்னும் எண்ணத்தில் தானாகவே ஒதுங்கிக்
கொண்டு தனிமையைத் தேடிக் கொள்பவன் சுயநலவாதியாக இருக்க முடியுமா?
சரி எந்த வகையிலாவது தனிமையிலே அதிக நேரத்தை ஒருவன் கழிக்க முற்படுவது அவனைப்
பரிதாபத்துக்குரியவனாக்குகிறதா? இல்லையே !
நம்மையே நமக்கு நண்பனாக்கிக் கொண்டால்...! நம்மையே நாம் புரிந்து கொண்டால்...!
தனிமை என்னும் உணர்வு நம்மை விட்டு மறைந்து போய் விடுகிறது. நமது உணர்வினிலே
தூய்மை கலந்து விடுகிறது.
அதுமட்டுமல்ல இந்த உணர்வுகளின் தாக்கம் மற்றையோர் மீது நாம் கொள்ளும் பார்வையை
அதிகரிக்கிறது. நமது வசதி குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் சௌகானுபவத்தை
மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு மனப்பான்மையை அளிக்கிறது.
இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. உணர்வுகளின் மூலம் எழுந்த
விமர்சனமே !

சக்தி
சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

|