........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

மனம் திறந்து-41

சாமியார்களிடம் சாய்ந்து விடும் பெண்கள்?

                                                                                                 -நெல்லை விவேகநந்தா.

காம வலையில் பெண்களை வீழ்த்தும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கோவில் கருவறையிலேயே பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒரு அர்ச்சகர் பற்றிய பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில்... அடுத்து ஒரு சாமியாரின் இன்ப லீலைகள்  தொலைக்காட்சி ஒன்றில் பார்க்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

இப்படி சில சாமியார்களின் காம லீலைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆன்மீகவாதிகளிடம் பக்தர்கள் தங்கள் குறைகளை போக்கிக் கொள்ளத்தான் அவர்களைத் தேடிச் செல்கிறார்கள்.

பக்தி அவர்களிடம் அதிகரிக்கும் போது, முழுக்க முழுக்க அந்த சாமியாரே தங்கள் கடவுள் என்கிற நிலைக்கு போய் விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அழகான பக்தைகளை தங்கள் வலையில் வீழ்த்தி, சில சாமியார்கள் தங்களது காம ஆசைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

போலிச் சாமியார்களை மட்டும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்ல முடியாது. அவர்களே கதி என்று அவர்களை சுற்றிச்சுற்றி வரும் அப்பாவி பொது ஜனங்களும் தங்களை அறியாமலேயே ஒருவகையில் அதற்கு காரணமாகி விடுகிறார்கள்.

உண்மையில், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் பக்தர்கள் மத்தியில், குறிப்பாக பக்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

ஆசிரமத்தை தேடிச் சென்றால், அங்குள்ள அமைதியான சூழ்நிலையில் நிச்சயம் மக்களுக்கு மனசாந்தி கிடைக்கும். ஆனால், அங்குள்ள போலிச் சாமியார்கள் பற்றி உங்களுக்கு தெரியாதே?

இனியாவது, போலிச் சாமியாராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த சாமியாராக இருந்தாலும் சரி, அவர்களைத் தேடிச் செல்வதை விட்டு விடுங்கள். வேண்டும் என்றால் கோவிலுக்குச் செல்லுங்கள்.

அங்கே சாமியிடம் மட்டும் முறையிடுங்கள். மனப்பாரம் குறையும். மாறாக, அர்ச்சகரிடம் சொன்னால்... அதுவும் சிக்கல்களில்தான் கொண்டு போய்தான் அதிகமாகிவிடும்.

பொதுவாக, சாதாரண போலிச் சாமியார்கள், பெண்களிடம் தங்களது வேலையை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிப்படியாகத்தான் காயை நகர்த்துவார்கள்.

இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுப் போன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான். ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். இந்த சபலங்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சி பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும்கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, "இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே..." என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்ப்பைத் தேடிக் கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணப்படுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.

இதே போன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள். இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்து விட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.

"விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்; அதே போன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்..." என்று ஆறுதல் சொல்வது போல் ஆசை வார்த்தைகள் கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்து விடும் பெண்கள், ஒருவித ஈர்ப்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராகி விடுகிறார்கள்.

ஒருமுறை இந்த "தவறு" நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்கள் திருந்தினாலும் கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த "தவறை" ஆயுதமாகக் கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களைத் தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

இது போன்ற சபலங்களிடம் இருந்து குடும்பப் பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்?

  • ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமூகமாக இல்லை என்றுதான் அர்த்தம். தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் செல்லாத விஷயம் வரை எந்த பிரச்சினை இருந்தாலும், கணவன் மற்றும் மனைவி இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் மூக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் ஈகோ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகிவிடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம்.

  • அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.

  • முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

  • சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக் கொண்டால் அப்போதே உஷாராகி விடுங்கள்.

  • சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களைப் பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டுக் காட்டி பேச ஆரம்பித்து விட்டால், அத்தோடு அவர் உடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களைத் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்து விடுங்கள்.

  • இப்போதெல்லாம் சிறுவர்கள் கூட கேமரா உள்ள செல்போனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இப்போதைய நவீன செல்போன் கேமராக்கள் மூலம் துல்லியமாக வீடியோ பதிவு செய்ய முடிகிறது. அதனால், உங்களது உடை அலங்காரம் எந்த சூழ்நிலையிலும் ஆபாசமாக இருக்க வேண்டாம்.

  • முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டிப் பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களே சபலத்தை நினைத்து விட்டால், சபலங்கள் எய்த அம்பு உங்களை குறி தவறாமல் அவர்கள் வலையில் வீழ்த்திவிடும்.

இன்னொரு விஷயம்... பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கப்பட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை. பிரச்சினைகளை வீதிக்கு கொண்டு வந்துவிட்டால், அதனால் ஏற்படும் அவமானத்தையும், பின்விளைவுகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும்! எனவே பெண்களே சாமியார்களிடம் மட்டுமில்லை.... உங்களுடன் பழகும் யாருடனும் எச்சரிக்கையாக இருங்கள்...!

நெல்லை விவேகநந்தா அவர்களின் பிற படைப்புகள்

முந்தைய மனம் திறந்து பார்க்க

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.