ஒருவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பாக இருந்தது.
ஒரு சமயம் அவன் ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தான். கல்யாணம் முடிந்து, சாப்பாப்டு பந்தி ஆரம்பமாகியது.
அவன் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து சாப்பிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்தது. அவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால்பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அருகிலிருந்தவனுடைய எச்சில் அவன் மேலே தெரித்தது.
அதனைக் கண்ட அவன், இந்தக் கருமத்தைக் காசியில் போய்த்தான் தொலைக்கணும் என்று நினைத்தான்.
மறுநாளே அவன் காசிக்குக் கிளம்பிப் போனான்.
அந்தக் காலத்தில் காசிக்கு நடந்துதான் போக முடியும். பகல் முழுவது நடந்து செல்லும் அவர்கள், இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்துத் தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடர்வர்.
இப்படி பயணிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக அந்தக் காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டியிருப்பார்கள், திண்ணையில் வந்து தங்குபவர்களுக்கு சாப்பாடு, நீர் மோர் அல்லது அவர்களால் இயன்ற ஒன்றை அவர்களுக்குச் சாப்பிடக் கொடுப்பார்கள்.
பகல் முழுக்க நடந்து சென்ற அவன் இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து படுத்தான்.
அந்த வீட்டு ஆள், "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைத்துப் போனவராகத் தெரியுது. நான் உங்களுக்குச் சிறிது சாப்பாடு தருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்து உறங்குங்கள்..." என்றார்.
அவனுக்குப் பசி அதிகமிருந்தாலும், அவனது ஆச்சாரம் அவனைத் தடுத்தது. இருப்பினும், அவனால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை, சாப்பிடச் சம்மதித்தான்.
கை, கால்களைச் சுத்தம் செய்து சாப்பிட உட்கார்ந்தான். அந்த வீட்டிலிருந்த பெண்மணி அவனுக்குச் சாப்பாடு பரிமாற வந்தள்.
அப்போது அவன், “அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனால் இலையிலேயேப் பரிமாற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
சிறிது நேரம் யோசித்த அந்தப் பெண்மணி, "சரி" என்றுசொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினார்.
பசியோடிருந்த அவனுக்கு, அந்தச் சாப்பாடு அருமையாக இருந்தது. அவனும் திருப்தியாகச் சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்த அவன் இலையை எடுக்கப் போனான்.
அப்போது அந்தப் பெண்மணி ஓடி வந்து, "ஐயா, நான் எடுக்கிறேன்” என்று சொல்லி அந்த இலையை மிகவும் கவனமாக எடுத்துச் சென்றார்.
அதைப் பார்த்த அவன், “தூர வீசி எறியப் போகிற இலையை எதற்கு இவ்வளவு கவனமாக எடுத்துக் கொண்டு போகிறீர்கள்..." என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பெண்மணி, "இந்த ஊரில் வாழை இலை சரிவரக் கிடைப்பது இல்லை. என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடறவர். அவருக்காக ஒரு வாழை இலையை வாங்கி வைத்திருக்கிறோம். அவர் சாப்பிட்டதும், அதைக் கழுவி பத்திரமாக எடுத்து வைத்து விடுவோம். நீங்கள் வாழை இலையில் தான் சாப்பிடுவேன் என்று சொன்னதால், இலை இல்லை என்று சொல்ல எங்களுக்கு மனசு வரவில்லை. உங்களைப் பட்டினியாகப் போடவும் மனசு வரவில்லை. அதனால், என்னோட மாமனார் சாப்பிடுகிற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுவிட்டு, இப்போது பத்திரமா எடுத்து வைக்கிறேன்..." என்று சொன்னார்.
அதைக் கேட்ட அவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கொண்டது போலாகிவிட்டது.
சரி, இந்தக் கருமத்தையும் காசியிலே போய்த் தொலைசிடுவோம்னு நினைத்துக் கொண்டு படுத்துத் தூங்கினான்.
மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்குப் பகலெல்லாம் நடந்து, இரவு வேளையில் ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான்.
அந்த வீட்டுப் பெண்மணி அவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் படுங்க..." என்றார்.
அவன் முன்னெச்சரிக்கையாக, “வாழை இலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க..." என்றான்.
அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி, ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் அவனுக்குச் சாப்பாடு வைத்தாள்.
திருப்தியாகச் சாப்பிட்ட அவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைந்து போனது.
அதைப் பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பித்தா.
"என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்தப் பாத்திரத்தில்தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்தப் பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே..." என்று சொல்லிப் புலம்பினாள்.
அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும், நாம் காசிக்குத்தானேப் போகிறோம். இந்தக் கருமத்தையும் அங்கே போய்த் தொலைத்திடுவோம்..." என்று நினைத்துக் கொண்டு படுத்தான்.
மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு இரவும் ஒரு வீட்டுத் திண்ணையில் போய்த் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி அவனைச் சாப்பிடச் சொன்னாள்.
அவன் முன்னெச்சரிக்கையா, "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்துப் போடுங்க..." என்று சொன்னான்.
அந்தப் பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத்தான் வைத்திருக்கிறது போலிருக்கிறது என்று நினைத்து, ஒரு பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான்.
அவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டுக்குள்ளே இருந்த பாட்டிக்குக் கேட்டது.
பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து, "என்ன...? " என்று விசாரித்தாள்.
"ஒன்னுமில்லே... இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தேன். அந்தச் சத்தம் தான்..." என்று அவன் சொன்னான்.
"பரவாயில்லை. தம்பி உங்க பல்லு ரொம்பவும் பலமாத்தான் இருக்கு. நானும் இந்தப் பாக்கைப் பத்து நாளா வாயிலேப் போட்டுக் கடிக்க முடியாம எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரேக் கடியிலேக் கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்..." என்று பாராட்டினாள்.
அதைக் கேட்ட அவன் ரொம்பவும் நொந்து போனான்.
பின்னர் அவன் "போதும்டா சாமி, காசிக்குப் போன லட்சணம்... மறுநால் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும்" என்று நினைத்துக் கொண்டு படுத்தான்.