தவக்காலம் (Lent) என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் ஒரு முக்கியமான காலக்கட்டம் ஆகும். இது ‘சாம்பல் புதன்’ என்றும் ‘திருநீற்றுப் புதன்’ என்றும் வழங்கப்படுகின்ற நாள் தொடங்கி, இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்வைக் கொண்டாடும் உயிர்த்தெழுதல் ஞாயிறுவரை (Easter Sunday) நீடிக்கின்ற நாற்பது நாள் காலத்தைக் குறிக்கும்.
தவக்காலத்தின்போது கிறிஸ்தவர்கள் இறைவேண்டல், தவமுயற்சிகள், தருமம் செய்தல், தன்னொறுத்தல் போன்ற நற்செயல்கள் புரிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் (மத்தேயு 6: 1-18). மேலும், பிறர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, பிறரன்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகிறார்கள். இயேசு மனிதரின் மீட்புக்காகத் துன்பங்கள் அனுபவித்துச் சிலுவையில் இறந்தார் என்பதால் அவர் அனுபவித்த துன்பங்களில் தாமும் பங்குபெற முன்வருகிறார்கள்.
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தியாளர்கள் இயேசு வனாந்திரத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசமிருந்தார் என்னும் செய்தியைத் தருகிறார்கள்
(மத் 4: 1-11, மாற் 1: 12-13, லூக் 1: 1-13). இயேசு உபவாசமிருந்தபோது பிசாசானவன் அவரை மூன்று விதமாகச் சோதித்தான். அந்தச் சோதனைளை இயேசு முறியடித்து பிசாசை வென்றார். இவ்வாறே கிறிஸ்தவர்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பிசாசின் சோதனைகளை முறியடிக்கத் தவக்காலம் பயிற்சியளிக்கிறது.
தொடக்கக்காலத் திருச்சபையில் (5ஆம் நூற்றாண்டு) இயேசுவின் உயிர்த்தெழுதல் திருவிழாவை (Easter) மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடுவதற்கு முன்னால், ஓரிரு நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்தனர். உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கு முந்திய ஞாயிறு ‘பாடுகளின் ஞாயிறு’ என கடைபிடிக்கப்பட்டது. அந்த வாரத்தின் புதன், வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெறும் ஆராதனைகளில் நற்கருணை தவிர்க்கப்பட்டது. தவத்திற்கு அடையாளமாக உடல் மீது சாம்பல் பூசிக்கொண்டு, சாக்குத் துணி உடுத்துவது வழக்கமாயிருந்தது. 5ஆம் நூற்றாண்டுக்குப் பின் எல்லாக் கிறிஸ்தவர்களும் திருநீற்றுப் புதனன்று சாம்பல் பூசத் தொடங்கினர். கடவுள் முன்னிலையில் எல்லாரும் பாவிகளே என்னும் உண்மையை அது உணர்த்துவதாயிருந்தது. இவ்வாறாக, வேதாகம அடிப்படையிலும், திருச்சபையின் மரபுப் பின்னணியிலும் தவக்காலம் நாற்பது நாட்கள் உபவாசக்காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
இன்றைய கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை திருநீற்றுப் புதனன்று தொடங்குகின்றனர். அன்று கோவில் சென்று வழிபட்டு, தம் தலையில் (நெற்றியில்) சாம்பல் பூசப்பெறுகின்றனர். (புராட்டஸ்தந்து கிறிஸ்தவர்களிடம் நெற்றியில் சாம்பல் பூசப்பெறும் வழக்கம் இல்லை). ஏசுவானவர் பாடுபட்டு, சிலுவையில் உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த பெரிய வாரத்தில் வரும் பெரிய வியாழக்கிழமையன்று (Monty Thursday) ஏசுவானவர் செய்ததை நினைவுகூறும் விதமாகக் கத்தோலிக்க குருவானவர்கள் அவரவர் ஆலயங்களில் முதியவர்களின் பாதங்களைத் தண்ணீரால் கழுவுவார்கள்
. அடுத்தநாள், புனித வெள்ளிக்கிழமை (Good Friday) அன்று ஏசுவானவர் சிலுவையில் தொங்கி உயிர்விட்ட நாள். அப்போது அவர் சொன்ன ஏழு வார்த்தைகளையும் ஆலயத்தில் தியானிப்பார்கள் (மத்தேயு 27: 34-44; மாற்கு 15: 21-32; லூக்கா 23: 26-44; யோவான் 19: 17-27). அடுத்துவரும் ஈஸ்டர் ஞாயிறு (Easter Sunday) நாள், ஈஸ்டர் பண்டிகை நாள். அன்று ஏசுவின் உயிர்த்தெழுதலை ஆலயவழிபாட்டுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள்.
பொதுவாக 40 நாட்கள் தவக்காலத்தில், விவிலியத்தில் அடங்கியுள்ள கடவுளின் வார்த்தைகளைக் கவனமாக வாசிப்பதும், வாசிக்கக் கேட்பதும், அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதும் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதும், அதே மன்னிப்பைப் பிறருக்கு வழங்குவதும் தவக்காலத்தின் சிறப்பாகும்.
மேலும் இறைவேண்டலுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவதும், உணவில் சுயவெறுப்பைக் கடைபிடித்தலும், சுயவெறுப்பு அல்லது சிறப்புக் காணிக்கைகள் கொண்டு ஏழைகளுக்கும் பிறருக்கும் தர்மம் செய்வதும், தேவையானவர்களுக்கு அன்புப்பணி புரிவதில் அதிகக்கவனம் செலுத்துவதும் தவக்கால பண்புகள் ஆகும். இச்செயல்கள் எல்லாம் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும்.
வேதாகமம் கூறும் உபவாசம் யாதெனில்,
“நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்பலோடும், உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”
“நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (யோவேல் 2: 12-13).
இவற்றிற்கெல்லாம் மேலாகத் கடவுள் விரும்பும் உபவாசம் யாதெனில், “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக் கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்” (ஏசாயா 58: 7) என்கிறார்.
மதக்கோட்பாடுகளும், அறநெறிகளும், உபதேசங்களும், பண்டிகைகளும் மனிதனை நன்னெறிபடுத்தி தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்வதற்கே!