கந்த சஷ்டி விரதம்
சித்ரா பலவேசம்
பிரம்மாவும், சிவபெருமானும் பக்தர்கள் வேண்டும் வரங்களைக் கொடுப்பார்கள். அவர்கள் கொடுத்த வரங்களைப் பெற்ற பலர், அதைத் தவறாகப் பயன்படுத்தி மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் என்று அனைவரையும் பல வழிகளிலும் துன்புறுத்தித் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். பிரம்மாவும், சிவபெருமானும் தாங்கள் கொடுத்த வரங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை அழிக்க விரும்புவதில்லை. இதனால், மனிதர்களும், முனிவர்களும், தேவர்களும் தங்களைக் காப்பாற்ற விஷ்ணுவிடம் வேண்டுவார்கள். அவரும் தீயவர்களை அழித்து அனைவரையும் காப்பாற்றுவார். சிவபெருமானிடம் வரம் பெற்று அனைவரையும் துன்பத்துக்குள்ளாக்கிய சூரபத்மன் மட்டும் விஷ்ணுவால் அழிக்கப்படவில்லை, முருகப்பெருமானால் அழித்து அடையாளமாகக் கொள்ளப்பட்டார். சூரபத்மன் அழிவுக்கான நிகழ்வு ஆண்டுதோறும் கந்த சஷ்டி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமானை விட மேலானவர்
சிவபெருமான் தன்னிடம் வரம் கேட்ட சூரபத்மனுக்குப் பல வரங்களைக் கொடுத்தார். அதில் ஒன்றாக, “இந்தப் பேரண்ட வெளியிலிருக்கும் ஆயிரம் கோடி அண்டங்களுக்குள் 1008 அண்டங்களை, 108 யுகங்கள் நீ ஆள்வாய்” என்கிற வரத்தையும் தந்து, எளிதாக எங்கும் செல்ல உதவும் இந்திரஜாலம் எனும் தேர், சிங்க வாகனம், பாசுபத அஸ்திரம் போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கிறார். இதைப் பெற்றுக் கொண்ட சூரபத்மன் தேவர்கள், முனிவர்கள் போன்றவர்களைச் சிறை வைக்கிறான். மனிதர்களையும் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்துகிறான்.
சூரபத்மனை அழித்து, அனைவரையும் காக்க சிவபெருமான் இம்முறை விஷ்ணுவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை, தானே வரங்களைக் கொடுத்துவிட்டுத் தானே அவனை அழிக்கவும் விரும்பவில்லை, அதனால், தனக்கும் மேலாக ஒருவனை உருவாக்கி, அவன் வழியாக அவனுக்குத் தகுந்த பாடம் புகட்ட விரும்புகிறார். அவரது விருப்பத்திற்கேற்ப, அவரின் கண்களிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளிலிருந்து முருகன் தோன்றுகிறார். சிறுவனாக வளர்ந்து விட்ட முருகன் ஒரு சமயம், படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்கிறார். பிரம்மா தனக்குத் தெரியாது என்கிறார். முருகன் அவரைச் சிறையிலடைக்கிறார். பிரம்மாவை விடுவிக்கச் சென்ற சிவபெருமான் முருகனிடம், “பிரம்மாவிற்கு ஓம் எனும் மந்திரத்தின் பொருள் தெரியவில்லை என்று அவரைச் சிறையிலடைத்திருக்கிறாயே...! அந்த மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று கேட்கிறார். முருகன் தன் தந்தையான சிவபெருமானுக்குக் குருவாக இருந்து, ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசிக்கிறார். இந்நிலையில், முருகன் சிவபெருமானைக் காட்டிலும் மேலானவராக உயர்கிறார்.
சூரபத்மன் அழிவு
சூரபத்மனிடம் சிக்கித் தவிக்கும் மனிதர்கள், முனிவர்கள் மற்றும் தேவர்களை விடுவிக்க முருகன் அவனுடன் போருக்குச் செல்கிறார். அந்தப் போரில், சூரபத்மன் முருகனை அழிப்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்கிறான், சில மாற்று உருவங்களை எடுத்துப் போராடுகிறான். முருகனோ, ஆணவம் கொண்ட அவனை அழிப்பதை விட, அவனுடைய ஆணவத்தை அழிப்பது சிறந்தது என்று முதலில் நினைக்கிறார். பின்னர், ஆணவத்தை அழிப்பதை விட, அதை அடக்கி வைப்பதே சிறந்தது என்று கருதுகிறார். அதன்படி, முருகன் கடைசியாகத் தான் செலுத்திய ஆயுதத்தால், மரமாக மாறிய சூரபத்மன் உடலை இரண்டாகப் பிளக்கிறார். ஒன்றை மயிலாக மாற்றித் தனது வாகனமாகவும், மற்றொன்றைச் சேவலாக மாற்றித் தனது கொடியில் அடையாளமாகவும் வைத்துக் கொள்கிறார். அதாவது, சூரபத்மனிடமிருந்த ஆணவத்தில், நான் எனும் அகங்காரம், எனது எனும் மமகாரம் ஆகிய இரண்டையும் பிரித்து, ஒன்றைத் தனது வாகனமாகவும், மற்றொன்றைத் தனது கொடியின் அடையாளமாகவும் எடுத்துக் கொண்டதாகக் கொள்ள வேண்டும்.
இராமனின் இராவண அழிவு, கிருஷ்ணனின் துரியோதன அழிவு போன்றவைகளெல்லாம் கொண்டாடப்படாத நிலையில, முருகனின் சூரபத்ம அழிவு மட்டும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறதே, இது ஏன்? என்கிற கேள்வி எழலாம். இராமன், கிருஷ்ணன் போன்றவர்களால் நிகழ்ந்த அழிவு எதிராளர்களின் முழுமையான அழிவுகளாகப் போய்விட்டன. சூரபத்மன் அழிவு முருகனின் அடையாளங்களாக மாறியதுடன், அனைவரது வணக்கத்துக்கும் உரியதாகவும் மாற்றப்பட்டு விட்டன. எனவே இந்நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி கொண்டாடுவதற்கு இது தவிர்த்து, வேறு இரண்டு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை;
முனிவர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து, உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டி, யாகம் ஒன்றை நடத்தினர். அந்த யாகம் ஐப்பசி மாத அமாவாசையன்று தொடங்கி, ஆறு நாட்கள் நடத்தப் பெற்றது. யாக குண்டத்தில் எழுந்த தீயிலிருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் தோன்றினார். இவ்வாறு முருகன் தோன்றிய நாளே கந்தசஷ்டி என்று மகாபாரதம் கூறுகிறது.
தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச் செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி மாத அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்று கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.
கந்த சஷ்டி விரதம்
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி என்ற பதினான்காம் நாளில் தீபாவளியும், அதற்கு மறுநாள் அமாவாசையும் வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் திதிகளிலான ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சஷ்டி விரதமிருப்பவர்கள் ஆறு நாட்களும் காலையில் நீரில் மூழ்கி, சந்தியாவந்தனம் முடித்துத் தியானத்தில் அமர்ந்து, அக்கினி, கும்பம், பிம்பம் மூன்றிலும் முருகனை எழுந்தருளச் செய்து வழிபட வேண்டும். திருமுருகன் புகழ்பாடி குளிர்ந்த நீர் பருகி உபவாசம் இருத்தல் வேண்டும். பெண்ணாசையை மறந்தும், பகலில் தூங்காமலும் இருத்தல் வேண்டும் என்று கந்த புராணம் சொல்கிறது.
திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றிக் கீழ்க்காணும் குறிப்புகள் காணப்படுகின்றன.
சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்துச் சுக்ல பட்ச சஷ்டியில் தொடங்கி, ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், ஐப்பசி மாதத்துச் சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பிக்கப்படுகிறது. கந்த சஷ்டியில் சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரை உள்ளே விழுங்காதபடி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்த வேண்டும். உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் போன்றவைகளை சிறிதும் அருந்தக் கூடாது.
கந்த சஷ்டி விரத நாட்களில், ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து, தினசரிக் கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்து, சிவதீர்த்தத்திலோ, புண்ணி நதிகளிலோ நீராட வேண்டும். அதன் பிறகு தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, முருகனை நினைத்து வழிபட்டு, இரவில் வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த உணவினை முருகனுக்குப் படைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஏழாம் நாள் காலையில் சிறப்பு வழிபாடுகள் செய்திட வேண்டும். இக்காலத்தில் வீட்டில் தூய்மை காக்க வேண்டும். யாரிடமும் கடுமையாகவோ, தகாதவைகளாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லற உறவைத் தவிர்க்க வேண்டும். நல்லறத்துடன் முருகன் திருவுருவத்தை நினைத்துத் தியானம் செய்ய வேண்டும்.
கந்த சஷ்டியின் போது, இவற்றைப் பின்பற்றுபவர்களில் குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். மற்றவர்களுக்கு உடல் வளமும், மனவலிமையும் கிடைக்கும். பொதுவாக, வாழ்க்கையில் பல மேன்மைகளை அடையலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.