இறைவனைப் பக்தியுடன் பூஜித்தல் அடுத்த வழிபாட்டு முறை. இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் இருந்தாலும் எப்படிப் பூஜித்தாலும் பக்தியுடன் பூஜித்தால் இறைவன் மனமுவந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார்கள் பெரியோர்கள்.
மனமுவந்து பூஜிப்பவர்கள் பூஜிக்கும் முறைகளில் தவறு இருந்தாலும் அந்தத் தவறுகளை அலட்சியப்படுத்தி அவர்களுடைய அன்பில் இறைவன் நெகிழ்கிறார் என்பதற்கு கண்ணப்ப நாயனாரும், சபரியும் சிறந்த உதாரணங்கள்.
இறைவனை வணங்குதல் அடுத்த வழிமுறை. பொதுவாகப் படிப்பவர்களுக்குப் பூஜித்தல், திருவடி தொழல், வணங்குதல் என்ற இந்த மூன்று வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தெரியாது. மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கிறது. இங்கு தலை வணங்குதல் என்று பொருள் கொள்வது சற்றுப் பொருத்தமாக இருக்கும்.
திருவடி தொழுவதிலும் பூஜித்தலிலும் பக்தி முக்கியமான பங்கு வகிக்கிறது. இதிலோ “நான்” என்ற அகங்காரம் களைந்து மேலான இறைவனைத் தலைவணங்குவது முதன்மையாகிறது. எல்லாம் நீ என்ற பணிவு இங்கு முதன்மையாகிறது. “நான்” என்பதை விட்டால் ஒழிய இறைவன் அருள் நமக்குக் கிடைக்க வழியே இல்லை என்பதால் இது முக்கியமாகிறது.
தாஸ்யம் (தொண்டு)
அடுத்த வழிபாட்டு முறை தொண்டு. இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கும் தொண்டு செய்வது இறைவனருள் பெற அடுத்த வழி. தன்னலம் இல்லாமல், புகழுக்காகவோ இலாபத்திற்காகவோ அல்லாமல் தாசராகத் தொண்டு புரிவதும் வழிபாடாகவேக் கருதப்படுகிறது.
தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணமாகத் திருநாவுக்கரசரைச் சொல்லலாம். முதுமையிலும் கோயில்கள் தோறும் சென்று தொண்டுகள் செய்தவர் திருநாவுக்கரசர். இறைவனை மகிழ்விக்க இது போன்ற சேவைகளை விட உயர்வானது எது இருக்க முடியும்?
சக்யம் (சிநேகம்)
இறைவனை சினேகத்துடன் (நட்புடன்) பார்க்க முடிவது இந்திய ஆன்மிகத்தின் தனிச்சிறப்புத் தன்மை என்றே சொல்லலாம். சினேகமும், காதலும் இறைவனிடத்தில் ஏற்படுவது ஒருவித வழிபாடாகவேக் கருதப்படுகிறது. இதற்கு ஆண்டாளும், ராதையும் நல்ல உதாரணங்கள்.
அதேபோலக் கண்ணனைத் தாயாக, தந்தையாக, தோழனாக, குழந்தையாக, காதலனாக, காதலியாகக் கருத முடிந்த பாரதியையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படி அனைத்துமாக இறைவனைக் கண்டு சினேகித்தால் இறைவனால் அதை அலட்சியப்படுத்தி விட முடியுமா? ”அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே” என்று வள்ளலார் பாடினார். இறைவன் என்ற மலை நம் அன்பெனும் பிடியில் அகப்படும் அதிசயம் கற்பனை அல்ல நிஜம் தான்.
ஆத்ம நிவேதனம் (ஒப்படைத்தல்)
கடைசி வழிபாட்டு முறை உடல், பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது. இது மகான்களுக்கே முடிகிற காரியம் என்றாலும், ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக் கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வு நிலை.
இறைவனை அடையவும், அவன்பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது பாதைகளும் உதவும். அவரவர் இயல்புக்கு ஏற்ப ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து இறைவனை நோக்கிப் பயணிக்கலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.