ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதேக் கொல்ல முயன்றார்கள். பெருமாள் அவர்களைத் தடுத்து, “பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்” என்றார்.
அதனைக் கேட்ட அசுரர்கள் அலட்சிய மாக, “நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்” என்றனர்.
சுவாமி சிரித்தபடி, “அப்படியா? சரி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவேப் பிறக்க வேண்டும்” என்றார்.
அசுரர்கள் திகைத்தார்கள்.
பின்னர், “சுவாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. நாங்கள் உங்களோடு ஒரு மாத காலம் சண்டையிட வேண்டும். அதன் பிறகு, தங்களுடைய அருளினால் நாங்கள் முக்தி பெற்றிட வேண்டும்” என வேண்டினார்கள்.
அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள்.
இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ”தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்” என வேண்டிக் கொண்டனர்.
ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.
அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.
“சுவாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாகப் (விக்கிரக வடிவமாக) நிறுவி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை விழாவாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று கோயிலின் வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களைத் தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் வேண்டுதல்... இதனை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டினார்கள்.
”அப்படியே ஆகட்டும்!” என அருள் புரிந்தார் அச்சுதன்.
அசுரர்கள் வேண்டுதலை ஏற்ற இறைவனும், வைகுண்ட ஏகாதசியன்று அனைவருக்கும் முக்தி கிடைக்க உதவுகிறார்.
எனவே, வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோயில்களின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெருமாளைக் கண்டு வழிபட்டால், இந்த மனித வாழ்வு வளமடைவதுடன், மறுபிறவி இல்லாத இறைவனடியைச் சேர முடியும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
வைகுண்ட ஏகாதசி நாளில் ஏன் கண்விழிக்க வேண்டும்?
ஏகாதசி நாளில் நாம் கண் விழித்து விரதம் கடைபிடித்தால் இறைவன் மகாவிஷ்ணுவின் முழுமையான அருள் கிடைப்பதுடன், நீங்காப் புகழுடன் வாழ முடியும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை.
சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ‘ஏகாதசி’ எனப்படுகிறது. இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப் படுகின்றன. அமாவாசை நாளையும், பெளர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி எனப்படும்.
திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது. அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை, த்விதியை என்று ஒவ்வொரு நாளாகச் சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகிப் பௌர்ணமி நாளன்று நேர் எதிர் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து சரியாக 180வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார்.
முப்பது நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பெளர்ணமி வரை உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பெளர்ணமி அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக்காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பெளர்ணமியை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
இந்த ஏகாதசி தோன்றியதற்கும் புராணங்களில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
முரன் என்னும் அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான்.
இதனால் அவனை அழித்துத் தங்களைக் காக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.
அவர், அவர்களை மகாவிஷ்ணுவைச் சந்தித்து முறையிடச் சொன்னார்.
அதன்படி அனைவரும் விஷ்ணுவைச் சந்தித்து முரண் எனும் அசுரனின் தொல்லைகளைச் சொல்லி, அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி வேண்டினர்.
அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் ஆயிரம் ஆண்டுகள் வரை கடுமையாக நீடித்தது.
அந்தப் போரில் களைப்படைந்த மாகாவிஷ்ணு, பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அந்த நேரத்தைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைத்த முரன், விஷ்ணுவைக் கொல்லத் துணிந்தான்.
அப்போது, அவருடைய உடலிலிருந்து தோன்றிய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.
அவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரம், அசுரனை எரித்துச் சாம்பலாக்கியது.
விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்தச் சக்திக்கு "ஏகாதசி" எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என்று வரமளித்துத் மீண்டும் தன்னுள் சக்தியாக ஏற்றுக் கொண்டார்.
ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில், நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் முழுமையாகக் கிடைக்கப் பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது நம்பிக்கையாகத் தொடர்கிறது.