சிவபெருமான் அறுபத்தி நான்கு தோற்றங்களில் பைரவர் தோற்றம் சிறப்பு மிக்க தோற்றமாகும்.
அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்கள் மற்றும் முனிவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டுச் சாமரம் வீசும் ஏவல் பணியைச் செய்ய வைத்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றிருந்ததால், உலகை இருள் மயமாக்கி அவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழித்துத் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவமூர்த்தியாகச் சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
பைரவர் எட்டு திசைகளைக் காக்கும் பொருட்டு எட்டு பைரவர்களாகத் தோற்றம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த அஷ்ட பைரவர்கள், காசி மாநகரில் திசைக்கொன்றாக எட்டு திசைகளிலும் கோவில் கொண்டிருக்கின்றனர்.
1. அசிதாங்க பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் அசிதாங்க பைரவர் ஆவார். அன்னப் பறவையினை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரகத் தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான பிராம்ஹி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார்.
2. ருரு பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றம் ருரு பைரவர். ரிசபத்தினை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் சுக்கிரனின் கிரகத் தோசத்திற்காக ருரு பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்தகன்னிகளில் ஒருவரான மகேஸ்வரி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.
3. சண்ட பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றம் சண்ட பைரவர். மயிலை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் செவ்வாய்க் கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான கௌமாரி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள் செய்கிறார்.
4. குரோதன பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றம் குரோத பைரவர். கருடனை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் சனி கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான வைஷ்ணவி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார்.
5. உன்மத்த பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றம் உன்மத்த பைரவர். குதிரையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் புதன் கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான வராகி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள் செய்கிறார்.
6. கபால பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றம் கபால பைரவர். யானையை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் சந்திர கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான இந்திராணி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார்.
7. பீக்ஷான பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றம் பீக்ஷான பைரவர். சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் கேது கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாகச் சப்த கன்னிகளில் ஒருவரான சாமுண்டி இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவர் கோவிலில் அருள்செய்கிறார்.
8. சம்ஹார பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றம் சம்ஹார பைரவர். நாயை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் ராகு கிரகத் தோசத்திற்காக இந்தப் பைரவரைச் சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருவரான சண்டிகை இருக்கிறார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.
இதே போன்று, பைரவர் அறுபத்து நான்கு பணிகளைச் செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாக விளங்குவதாகச் சொல்வதுண்டு. அவர்களை;
1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்
சொர்ண ஆகர்ஷண பைரவர்
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்தத் திருக்கோலத்தில், இடது கையில் கபாலத்துக்குப் பதிலாக அட்சயப் பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சயப் பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்குத் தேய்பிறை அஷ்டமி சரியான நாளாகும். பொருளாதாரச் சிக்கலுடையவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழிலில் முன்னேற்றமின்றி இருப்பவர்கள் இந்த வழிபாட்டைச் செய்து பொருளாதார நிலை மேம்பாடடையலாம். மேலும், சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்டலட்சுமிகளின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில் வழிபடுவதுடன் அவருக்குப் பாலாபிஷேகம் அல்லது இளநீர் அபிஷேகம் செய்வதற்கான பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவது அதிக பலன்களைத் தரும் என்கின்றனர்.
பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று வேறு சில பெயர்களிலும் வழிபடுகின்றனர்.
வழிபாட்டுப் பலன்கள்
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில், பரணி நட்சத்திரத்தில் தோன்றிய பைரவருக்கு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று வழிபாடு நடத்தப்படுகிறது. பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் பிற நட்சத்திரக்காரர்களை விட அதிக பலன் கிடைக்கும். தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உரியதாகக் கூறப்படுகிறது. வாசனை மலர்களில் மல்லிகையைத் தவிர்த்து மற்ற அனைத்து மலர்களும் பைரவருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிவபெருமானின் தோற்றமான பைரவருக்குச் சந்தன அபிஷேகம் மிகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
குழந்தை இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கும் தம்பதியர், தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தைக் கொண்டு பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
பிரிந்திருக்கும் உறவினர்கள் ஒன்று சேர்வதற்கும், உயர் பதவி பெற விரும்புபவர்களுக்கும் பைரவர் வழிபாடு மிகுந்த பலனளிக்கும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். சனி மாற்றத்தால் அசுப பலன் ஏற்ப்படக்கூடிய ராசிகாரர்களும் சனி திசை, புக்தி நடப்பவர்கள் தினமும் கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்வது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.