மூன்று லோகங்களைக் கொண்டது பிரம்மாண்டம் என்று கீதை சொல்லுகிறது. உச்ச லோகம், மத்ய லோகம், நீச லோகம் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. இந்த மூன்று லோகங்களிலுள்ள உயிரினங்களின் வாழ்க்கையும் மாறுபட்டுள்ளன. கர்ம வினைப்படி உயிரினங்களின் பிறப்பிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அது போல வெவ்வேறு லோகங்களில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை வெவ்வேறு விதமாக அமைந்துள்ளன.
உச்ச லோகத்திலுள்ள சத்ய லோகம் பிரம்மாவின் இருப்பிடம் என்று புராணங்கள் சொல்லுகின்றன. இந்த சத்ய லோகம் உயிரினங்களுக்கு ஜனனம் கொடுக்கிறது. பயம், முதுமை, மரணம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு சத்ய லோகத்திலுள்ள ரிஷிகளும், மகான்களும் தவம் புரிந்து ஆன்மாவை மிதக்க விட்டு இறைவனோடு இணைகின்றனர்.
அடுத்து வருவது தபோ லோகம். இந்த லோகத்திலுள்ள பெரும் முனிவர்களும், ரிஷிகளும் அரிய தவமிருந்து உடலில் இருந்து ஆன்மாவைத் தனியாக மிதக்க விட்டு, ஆசைகள், இச்சைகள் அனைத்தையும் தவிர்த்து இறைவழியை நாடுகின்றனர். தபோ லோகத்தில் ஆன்மாவின் மூலம் இறைவனை நாடுகின்றனர்.
மூன்றாவது ஜன லோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த லோகமும் உச்ச லோகத்தைச் சார்ந்தது. இந்த லோகத்திலுள்ள சாதுக்களும், முனிவர்களும் தவ சக்தியால் பலவற்றை உருவாக்கவும் அழிக்கவும் கூடியவர்கள். இவர்கள் இறைவனைத் தேடும் நிலையில் இல்லாததால் உருவாக்கும் அழிக்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றனர்.
அடுத்து வருவது மஹரலோகம். தியாகம், தானம், பொறுமை ஆகிய நற்குணங்களைக் கொண்டு ஞானதிருஷ்டியைப் பெற்ற முனிவர்களும் ரிஷிகளும் இந்த லோகத்தில் வாழ்கிறார்கள். மஹர லோகத்தில் வாழ்ந்த ப்ருகு முனிவரை யாவரும் அறிவார்கள். பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி ‘சிசுமாரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சிசுமாரா திருப்பு முனையில் தான் மஹர லோகம் அமைந்துள்ளது. இந்த லோகத்திலுள்ள முனிவர்களும் ரிஷிகளும் கடும் தவம் புரிந்து சத்ய லோகத்திற்கு செல்வதற்கு பாதையை வகுத்துக் கொள்கின்றனர்.
பாற்கடலில் வீற்றிருக்கும் மஹா விஷ்ணுவின் வைகுண்டத்தின் ஒரு பகுதி துருவ லோகம் என்று அழைக்கப்படுகிறது. விஞ்ஞானத்தில் இந்த லோகம் "துருவ நச்சத்திரம்" என்று சொல்லப்படுகிறது. துருவ லோகத்திலிருந்து கிரகங்கள் குறிப்பிட்ட வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த லோகத்திலிருந்து ஏழு கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இந்த கிரகங்களைப் பற்றி ஜோதிட சாஸ்திரமும், புராணங்களும் பல கோணங்களில் சித்தரித்துள்ளன. சனி, பிரஹஸ்பதி, அங்காரகன், புதன், சுக்ரன் என்று வரிசைப்படி சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த கிரகங்களைப் பின் பற்றி சந்திரலோகமும் இடம் பெற்றுள்ளது. அழகையும் குளுமையும் கொண்ட இந்த லோகத்தில் தேவர்கள் சோம பானம் அருந்தி ரதிகளின் நடனத்தைக் கண்டு களிப்பார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன.
அடுத்து வருவது சூரியன். சூரியன் பிரம்மாண்டத்திற்கு வெப்பத்தையும் வெளிச்சத்தையும் கொடுப்பவன். சூரியன் மஹா விஷ்ணுவின் ஒரு அம்சம் என்று சொல்லலாம். சூரிய நமஸ்காரம் செய்தால் நாராயணனை சேவித்ததற்கு சமமாகும் என்று முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். சூரியன் இல்லையென்றால் உயிரினங்கள் மடிந்து விடும்.
சூரியனுக்கு கீழே ராகு, கேது என்று கண்ணுக்கு தெரியாத கிரகங்களும் பிரம்மாண்டத்தில் மிதக்கின்றன. இந்த இரு கிரகங்களால் சந்திர கிரகணம் சூரியன கிரகணமும் ஏற்படுகின்றன என்று புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. ராகு, கேது கிரகங்களுக்கு அப்பால் சித்த லோகம் இடம் பெற்றுள்ளது. இந்த லோகத்திலுள்ள உயிரினங்கள் சித்த ஞானம் பெற்று பறக்கக் கூடிய சக்தியைக் கொண்டது.
பிரம்மாண்டத்தின் அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டிருப்பது யக்ச லோகம் என்று அழைக்கப் படுகிறது. காற்றையும் மேகத்தையும் அளவுகோலாகக் கொண்டு இந்த லோகம் அமைந்துள்ளது.
பூலோகம் மத்ய லோகம் என்று சொல்லப் படுகிறது. தண்ணீரையும் காற்றையும் கொண்ட இந்த லோகத்தில் வாழும் உயிரினங்கள் மாயாஜாலமான வாழ்க்கையை வாழ்கின்றனர். பிறப்பையும் இறப்பையும் இந்த லோகத்தில் காணலாம்.
அடுத்து வருவது நீசலோகம். பாதாள லோகம் நீசலோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த லோகத்தில் முதமை, பயம், நோய், நேரம், காலம் என்று ஒன்றுமே அறியாமல் உயிரினங்கள் வாழ்கின்றன. தைத்யர்கள், தானவர்கள், நரகர்கள் போன்றவர்களின் இருப்பிடம் பாதாளலோகம். பாதாளலோகம் நேரம் காலம் என்று பிரிவுகளே இல்லாமல் இருண்ட லோகம் என்று சொல்லலாம். பாதாள லோகத்தின் கீழே நரக லோகம் இடம் பெற்றுள்ளது. இந்த லோகத்தில் உயிரினங்கள் கர்ம வினைப்படி தண்டனையை அனுபவிக்கின்றனர்.
இந்த பிரம்மாண்டம் மிகவும் சக்தி பெற்றது, வியக்கத்தக்கது. பிரம்மாண்டத்தைப் பற்றி புராணங்கள் சொல்லும் தகவல்கள் இது.