இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும்.
இவர் கைலாயத்தில் இருப்பவர். அந்தக் கைலாயத்தில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர்.
இவரைப் புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம்தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன.
இந்த மகா சதாசிவ மூர்த்தி வடிவம் கோயில்களில் சிலை வடிவில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் கோயில் கோபுரங்களில் சுதை வடிவில் காணப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் சுரகரேஸ்வரர் கோயில் விமானம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரம், வைத்தீசுவரன் கோயில் கோபுரம், தில்லைக் கோயில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது தொன்ம நம்பிக்கை.
மேலும், கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறுவர் என்பதும் தொன்ம நம்பிக்கையாக இருக்கிறது.