இசுலாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைத் தூதரான முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுகச் சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமியச் சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் விளங்கும் குரான், ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைத் தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில் இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் குறிப்பிடுகிறது. முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக இருக்கின்றன.
அரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானல் தொகுக்கப்பட்ட குரானானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழி பெயர்க்கும் போது பொருள்கள் மாறவும் வாய்ப்புண்டு என்று கருதப்பட்டது. இருப்பினும், முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். இருப்பினும், இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143 ஆம் ஆண்டில் இலத்தீன் மொழிக்குக் குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சான்டர் ரூசு என்பவர் மொழி பெயர்த்த ஆங்கில மொழியிலான குரான் 1649 ஆம் ஆண்டில் வெளியானது.
தமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்துல் கஃகீம் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983 ஆம் ஆண்டில் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் தமிழ் மொழியிலான குரான் வெளியிடப்பட்டு வருகின்றன.
நூல் வடிவில் வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் அச்சுப் பதிப்புகள் தற்போது மின் புத்தகங்களாகவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இடம் பெற்றிருக்கும் திருக்குர் ஆன் மின் புத்தகங்கள் இணையதளம் ஒன்றின் மூலமாக இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது. திருக்குர் ஆனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள
http://www.qurandownload.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.