”எங்களை மரணிக்கச் செய்தது போன்ற தூக்கத்திற்குப் பிறகு, எங்களை உயிர்ப்பித்த அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அவனிடமே மீளுதலும் உள்ளது.
தினம் தூங்கி எழுந்த பின் ஓதும் துஆ மக்கள் உறங்குகிறார்கள் அவர்கள் இறக்கும் போது விழித்தெழுகிறார்கள்”
-அலி இப்னு அபீ தாலிப்
மிஷ்பா அஷ்ரப் குப்புறப் படுத்திருந்தான். மிஷ்பாவுக்கு வயது 21. 170 செமீ உயரம். திராவிட நிறம். வகிடு இல்லாத தலைக்கேசம். முதுகலை பௌதிகம் முதலாமாண்டு படிக்கிறான்.
மிஷ்பாவின் தூக்கம் ஒழுங்கீனமானது.
நெடுஞ்சாலையைக் கடக்க முயன்று வாகனத்தால் அடிபட்டுக் கிடக்கும் கங்காரு போலக் கிடந்தான்.
இரு கைகளை மடித்து அதன் மேல் முகம் வைத்திருப்பான்.
ஒரு கால் கன்னியாகுமரியைப் பார்த்தால் இன்னொரு கால் காஷ்மீரைப் பார்க்கும்.
காலை எட்டு மணி.
மிஷ்பா அஷ்ரப்பின் தந்தை நர்கீஸ் கான். மகனின் படுக்கை அறைக்குள் பிரவேசித்தார். நர்கீஸ்கானுக்கு வயது 47. ஒரு தனியார் கல்லூரியில் உருது விரிவுரையாளராகப் பணி புரிகிறார்.
இரண்டு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தூங்கும் மகனை வேடிக்கை பார்த்தார் நர்கீஸ்கான்.
பஜ்ரு தொழுகைக்குத் தன்னை அடித்து எழுப்பிய தந்தை நர்கீஸ் கான் நினைவுக்கு வந்தார்.
சுவாசத்தில் தாழ்ந்து எழும் மகனின் முதுகை மெதுவாகத் தொட்டார். மகன் எழவில்லை. மெதுவாகத் தட்டினார்.
“யாரு? யாரு?” என அலங்கமலங்க கத்தியபடி எழுந்து அமர்ந்தான் மிஷ்பா.
“யார் என்னை எழுப்பினா?”
“அஸ்ஸலாமு அலைக்கும் மகனே!”
“வஅலைக்கும் ஸலாம். என் அறைக்குள் என் அனுமதி இல்லாமல் எதற்கு வந்தீர்கள்?”
“அதிகாலையில் எழாமல் காலை 8 மணி வரை தூங்குகிறாய். எழுப்ப வந்தேன்!’”
“இன்று கல்லூரி வகுப்பு கிடையாது. தூங்குகிறேன். உங்களுக்கென்னப் பிரச்சனை?”
“தூக்கத்திற்கு ஒரு அளவு உண்டு மகனே!”
“என்ன அளவு?”
“மூணு மாதக் குழந்தை தினம் 14-லிருந்து 17 மணி நேரம் தூங்கலாம். நான்கிலிருந்து 12 மாதக் குழந்தை தினம் 12-லிருந்து 16 மணி நேரம் தூங்கலாம். ஒரு வயதிலிருந்து இரண்டு வயது குழந்தைகள் 11 முதல்14 மணி நேரம் தூங்கலாம். மூன்றிலிருந்து ஐந்து வயது குழந்தைகள் தினம் 10 முதல் 13 மணி நேரம் தூங்கலாம். ஆறிலிருந்து 12 வயது சிறுவர்கள் தினம் 9 முதல் 12 மணி நேரம் தூங்கலாம். 13-லிருந்து 18 வயது பதின்மவயதினர் 8 முதல் 10 மணி நேரம் தூங்கலாம். 18-லிருந்து 64 வயதினர் தினம் 7 முதல் 9 மணி நேரம் தூங்கலாம். கிழவர்கள் 7 முத்ல் 8 மணி நேரம் தூங்கலாம். நீயோ தூங்கினால் 12-லிருந்து 15 மணி நேரம் தூங்குகிறாய்!”
“என் தூக்கத்தை நீங்கள் ஏன் கணக்கெடுக்கிறீர்கள்?”
“தூக்கம் என்றால் என்ன?”
“தெரியாது. அதனை நீங்களே சொல்லுங்கள்…”
“மனிதர்கள் மற்றும் விலங்குகள் தங்கள் உடல் மற்றும் மனச் செயல்பாடுகளைக் குறைத்து விழிப்புணர்வு மாற்றி ஓய்வெடுக்கும் ஒரு இயல்பான இயற்கை நிலையே தூக்கமாகும். தூக்கத்தை துயில் எனவும் கூறுவர்!”
“இன்று தூக்கத்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டீர்கள். நான் தொலைந்தேன்!’”
“ஒரு மனிதன் விழி நிலையில் இருக்கும் போது 2800-லிருந்து 3300 கலோரி வரை செலவழிக்கிறான். தூக்கத்திலோ ஒரு மணி நேரத்திற்கு 40-லிருந்து 55 கலோரி செலவு செய்கிறான். எட்டு மணி நேரத் தூக்கத்திற்கு 440 கலோரி செலவு!’”
“நான் தூக்கத்தில் ஆயிரம் கலோரி செலவழிக்கிறேன் போல…”
“நம்ம இஸ்லாமில் தூக்கத்திற்கென தனி கடவுள் இல்லை. கிரேக்கத்தின் தூக்கக் கடவுள் ஹிப்னோஸ். இவர் நிக்ஸ் என்கிற இரவுக்கும் எரெபஸ் என்கிற இருளுக்கும் பிறந்த மகன்தான் ஹிப்னோஸ். இந்து மதத்தில் தூக்கத்திற்கான கடவுளின் பெயர் நித்ரா தேவி…”
“மற்ற மதங்களில் தூக்கக் கடவுளின் பெயர்கள் தெரிந்தால் அதனையும் சொல்லுங்கள்!”
“நபிகள் நாயகம் மக்களை வலது பக்கம் சரிந்து படுக்கச் சொன்னார். நீ குப்புறப்படுக்கிறாய். குப்புறப்படுப்பது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது!”
தந்தையை முறைத்தான் மிஷ்பா அஷ்ரப்.
“மகனே! சில விஷயங்களைப் பேசியே தீர வேண்டும். உனக்கு வயது 21. உன்னை மத விஷயங்களில் பலவந்தப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டு வந்திருக்கிறேன். இனி உன்னுடைய பல விஷயங்களை நேர்படுத்த வேண்டியுள்ளது!”
“அத்தா! லீவ் மீ அலோன். எல்லாம் நான் சரி பண்ணிப்பேன்!”
“நோ. கொஞ்சம் அமைதியா கேளு. இஸ்லாமில் தூக்கத்தை அல் மௌத் அஸ் சுக்ரா என்பர். சிறிய மரணம் அல்லது தற்காலிக மரணம் என்பது அந்த வார்த்தைக்குப் பொருள்.
தூக்கம் மரணத்தின் முன்னோட்டம்.
தூக்கம் சிறிய மரணம். மரணம் பெரிய மரணம்…”
கண்களை இடுக்கினான் மிஷ்பா அஷ்ரப்.
“மகனே! மனிதன் தூங்கும் போது ஆன்மா தற்காலிகமாக உடலை விட்டுப் பிரிக்கப்படுகிறது. அல்லாஹ் தூங்குபவர்களின் ஆன்மாக்களைக் கைப்பற்றுகிறான். மரணம் விதிக்கப்பட்ட ஆன்மாக்கள் பூமி திரும்புவதில்லை. மரணம் விதிக்கப்படாத ஆன்மாக்கள் அதனதன் உடல்களுக்குத் திரும்புகின்றன…”
“ஓ...!”
“மறுமையை மனிதனுக்கு ஞாபகப்படுத்தும் அடையாளமே தூக்கமாகும். ஒவ்வொரு காலை விழிப்பும் ஆன்மாவின் மீள்வருகை. இயேசுநாதர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். அல்லாஹ்வின் கருணையால் வழங்கப்படும் ஒரு சிறிய உயிர்த்தெழுதலே தூக்கமாகும். அப்படிப் பார்த்தால் உலகின் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தினம் தினம் உயிர்த்தெழுகின்றனர்!”
“தூக்கத்தை பற்றி விஞ்ஞானம் வேற மாதிரி சொல்கிறது தந்தையே?”
“சொல்!”
“தூக்கம் நிறைவாற்றலை ஒருங்கிணைக்கிறது. தூக்கம் மூளையில் உள்ள வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுகிறது. தூக்கம் மனித உடலின் ஆற்றலைச் சேமிக்கிறது!”
“சரி!”
“மூளையின் ஹைப்போதாமஸில் அமைந்திருக்கும் சர்காடியன் ரிதம் என்கிற முதன்மைக் கடிகாரமே மனிதரின் தூக்கத்தை அல்லது விழிநிலையைக் கட்டுபடுத்துகிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் இருட்டு மெலடோனினை வெளியிடுமாறு மூளையைத் தூண்டுகிறது. இது உங்களைத் தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. காலை வெளிச்சம் மெலடோனின் சுரப்பைத் தடுத்து கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது. தூக்கம் முற்றுப்பெற்று ஆக்டிவ் ஆகிறோம்!”
“ரைட்டோ!”
“உறக்கம் என்பது மாறுபட்ட உணர்வு நிலை. தூக்கம் குறைக்கப்பட்ட உணர்வு நிலையின் ஒரு உடலியல் நிலை. தூக்கத்தில் பௌதிக இருப்போ பிரக்ஞையோ கிடையாது!”
“ஓகே!”
“தூக்கத்தில் இரண்டு வகைத் தூக்கங்கள் உள்ளன!”
“அவை என்னப்பா?”
“விரைவாக கண்ணசைவு உள்ள ரெம் தூக்கம். கண்ணசைவு இல்லாத என்ரெம் தூக்கம். ரெம் தூக்கத்தில் கனவு காணுதல் உண்டு. என்ரெம் தூக்கத்தில் நனவு நிலை செயலிழந்து விடுகிறது. மரணத்தின் விளிம்பு அனுபவங்களை என்டிஇஎஸ் என்பர். விஞ்ஞானத்தில் மதத்தைக் கொண்டு வந்து திணிக்காதீர்கள் அத்தா!”
“திணிக்கவில்லை… தூக்கத்தைப் பற்றி இஸ்லாமியக் கருத்துகள் விஞ்ஞானத்தோடு முரண்படவில்லை. மரணத்தின் இரட்டைச் சகோதரன் தூக்கம். ஒரு மனிதன் 70 வருடங்கள் உயிர் வாழ்கிறான் என்றால் அவனது வாழ்நாளில் 25550 சிறு மரணங்களைச் சுவைக்கிறான். உறக்கம் மற்றும் விழிப்பின் தினசரி சுழற்சியானது, நமது ஆன்மாக்கள் எப்போதும் இறைவனின் பிடியில் உள்ளன மற்றும் அவன் விரும்பியபடி உள்ளன என்பதனை மறைமுகமாக உணர்த்துகின்றன…”
மௌனித்தான் மிஷ்பா அஷ்ரப்.
“இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல் ஜமக்சரி கூறுவதைக் கேள். உறக்கத்தின் போது அல்லாஹ் மனிதனின் உடலிலிருந்து நப்ஸை உணர்வுள்ள ஆன்மாவைத் திரும்பப் பெறுகிறான். ஆனால் ரூஹ் (உயிர் சக்தி) மட்டும் உடலை உயிருடன் வைத்திருக்க உடலிலேயே இருக்கிறது. அல்லாஹ் அந்த மனிதனின் மரணத்தை விரும்பினால் அவனின் ரூஹையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். சிறிய மரணமும் பெரிய மரணமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!”
“இம்!”
“மனித உடலுடன் ஆன்மாவின் தொடர்பு மூன்று படிநிலைகளில் இருக்கிறது.
1. ஒருவர் விழித்திருக்கும் போது முழுமையான தொடர்பு.
2. உறக்கத்தின் போது பகுதித் தொடர்பு (ஆன்மா புலன்கள் மீதான தீவிரக் கட்டுப்பாட்டிலிருந்து விலகி உடலை வாழ்வதற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட நிலையில் விட்டு விடுகிறது)
3. மரணத்தின் போது முழுமையான துண்டிப்பு.
இந்த மூன்று படிநிலைகளை நமக்கு சொன்னவர் ஷியா அறிஞர் அல் மக்கரிம் ஷிராஸியால்…”
“ஆகவே!”
“ஆகவே மகனே… சிறிய மரணம் எப்போது பெரிய மரணமாகும் என்பது யாருக்கும் தெரியாது. பெரிய மரணம் வருவதற்கு முன் நன்மையின் பக்கம் நின்று நாம் சார்ந்திருக்கும் துறையில் நிறையச் சாதித்து தங்க முத்திரை பதிக்க வேண்டும். தூக்கத்தை ஒழுங்குபடுத்து. தூக்கத்தை அளவாக்கு. தூக்கத்தைக் கண்ணியப்படுத்து. தூக்கத்தைத் தத்துவார்த்தமாய் அணுகு. தூக்கத்திற்கு அடிமையாகாதே. முதுகலை பௌதிகம் படிக்கும் நீ அடுத்து இளம் முனைவர் பட்டம் பெறு. அதனையடுத்து முதுமுனைவர் பட்டம் பெறு. பௌதிக விற்பன்னன் ஆகு. அத்துடன் தொழுகையை கைக்கொள்…”
ஆழமாக யோசித்து நிமிர்ந்தான் மிஷ்பா அஷ்ரப். “எனது அறிவு மற்றும் ஆன்மிகக் கண்களைத் திறந்து விட்டீர்கள் அத்தா. இஸ்லாமிய இறக்கைகளை மாட்டிக் கொண்டு சாதனை வானம் பறப்பேன்!”
“ஆமீன்!” என்றார் நர்கீஸ் கான்.