எதுக்கும் தெறமை வேணும்பாங்க. அதைவிட எதையும் தெறமையோடச் சொல்லத் தெரியணும். எல்லாத்துக்கும் நேரம் கைகூடி வரணும்னு சொல்வாங்க. இதுக்கு ஒரு கதை வழக்கத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. அவருகிட்ட அரசவைக் கவிஞரா ஒருத்தரு இருந்தாரு. அவருக்கு ராஜாக்கிட்ட நல்ல செல்வாக்கு. அந்த நாட்டுல இருந்தவங்க எல்லாரும் ராஜாவுக்குத் தர்ற மரியாதையை அவருக்கும் கொடுத்தாங்க.
ராஜாவும் அந்தக் கவிஞரக் கலந்துக்காம எதையும் செய்யமாட்டாரு. அந்த அளவுக்கு அந்தக் கவிஞர ராஜா மதிச்சாரு. இப்படி இருக்கையில ஒரு நாளு பக்கத்து நாட்டு ராஜா சொல்லாமக் கொள்ளமா படையெடுத்து வந்துட்டாரு. இந்த நாட்டு ராஜாவுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. இருந்தாலும் தன்னோட படைகளைத் திரட்டி சண்டைக்குப் போனாரு. ராஜா கடுமையாச் சண்டை போட்டாரு.
ஆனாலும், சண்டையில பக்கத்து நாட்டு ராஜா இந்த ராஜாவைக் கொன்னுட்டாரு. படைகள் எல்லாம் அழிஞ்சிபோச்சு. பக்கத்து நாட்டு ராஜா அரண்மனைக்குள்ளாற நுழைஞ்சி அங்க இருந்தவங்க எல்லாரையும் கண்டந் துண்டமா வெட்டிப்போட்டாரு. அவ்வாறு வெட்டிப் போட்டதுல அந்தக் கவிஞரும் ஒருத்தரு.
அரண்மனையில இருந்தவங்க யாரும் மிஞ்சல. அதுக்குப் பின்னால பக்கத்து நாட்டு ராஜா ரெண்டு நாட்டுக்கும் ராஜாவாயிட்டாரு. இவரை எதுக்கிறதுக்கு ஆளே இல்லை. பழைய ராஜாவுக்கு வேண்டியவங்க எல்லாரையும் பக்கத்து நாட்டு ராஜா நாடு கடத்திட்டாரு.
செத்துப்போன ராஜாக்கிட்ட கவிஞரா இருந்தவரோட மனைவியும் மகனும் அந்த நாட்டோட எல்லையில ஓட்டைக் குடிசையில ரொம்ப ஏழ்மையில இருந்தாங்க. அந்தக் கவிஞரரோட பையன் வளர்ந்து பெரியவனா இருந்தான். அவன் எந்த வேலைக்கும் போறதில்லை. அவங்க அம்மாவும் சொல்லிப் பாத்தாங்க. கேக்கல. அவங்க அம்மா கெடச்ச வேலைக்குப் போயி எதையாவது கொண்டுக்கிட்டு வந்து அவனக் காப்பாத்துனாங்க.
ஒரு நாளு அந்த அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியல. அந்தப் பயலும் அங்கிட்டு இங்கிட்டு ஓடிப் பார்த்து ஒவ்வொருவருக்கிட்டயா ஒதவி கேட்டான். அவங்களும் தங்களால இயன்றதச் செஞ்சாங்க. எப்படியோ அவங்க அம்மாவக் காப்பாத்திட்டான். இருந்தாலும் அந்தம்மானால முன்ன மாதிரி ஓடியாடி வேலைக்குப் போக முடியல.
அந்தப் பயலப் பாத்து, ‘‘ஒங்க அப்பா எப்படிப் பேரும் புகழுமா இருந்தாரு. இந்த நாடே அவரக் கையெடுத்துக் கும்புட்டுச்சு. ஆனா நீ என்னடான்னா ஒண்ணுக்கும் ஒதவாம வீட்டுக்குள்ளறயே கெடக்கிற. எப்படியாவது எங்கயாவது நீ போயி சம்பாதிச்சி ஒங்க அப்பா மாதிரி வான்னு’’ சொல்லி அனுப்புனாங்க.
அவனும் சரின்னுட்டு தன்னோட அப்பா அரசவைக்குப் போறபோது போட்டுக்கற உடுப்பெல்லாம் எடுத்துப் போட்டுக்கிட்டு பெரிய பட்டுத் துண்டை எடுத்து அவங்க அப்பா மாதிரி மடிச்சி தோள்மேல போடடுக்கிட்டு கால்போன போக்குல போனான். இவனுக்கு என்ன செய்யிறதுன்னும் தெரியல. இருந்தாலும் அங்கங்க வேடிக்கையப் பாத்துக்கிட்டு நடந்து போயிக்கிட்டே இருந்தான்.
அப்ப ஒரு பன்னி சேத்துல பொறண்டுட்டு ஓடி வந்து ஒரு புளியமரத்துல ஒடம்பப்போட்டு தேச்சிக்கிட்டு இருந்துச்சு. இவன் அந்தப் பன்றியையே பாத்துக்கிட்டு இருந்தான். அந்தப் பன்றி அவனையே பாத்துக்கிட்டு மரத்துல தன்னோட ஒடம்பப் போட்டுத் தேச்சிக்கிட்டு இருந்துச்சு.
அதப்பாத்த அந்தப் பய ஓலைச் சுவடிய எடுத்து, ‘‘நீ தேய்க்கிற தேய்ப்பும் பார்க்கற பார்வையும் தெரியும் தெரியும்னு’’ எழுதிக்கிட்டான். அப்படி எழுதின ஒடனே இவனுக்கு ஒரு யோசன வந்தது. நேராப் போயி இதை அரண்மனையில இருக்கிற ராஜாக்கிட்டக் கொடுத்து ஏதாவது சன்மானம் வாங்குவோம்னு நெனச்சிக்கிட்டு வேகவேகமா அரண்மனையை பாத்துப் போனான்.
இவன் அரண்மனைக்குள்ளாறப் போறபோது அங்க ராஜா கவிஞர்களோட பேசிக்கிட்டு இருந்தாரு. இவனும் போயி ராஜாவைப் பாத்தான். அந்த ராஜா அவனப் பாத்து, ‘‘நீ என்ன கவிதை எழுதிக்கிட்டு வந்துருக்கே. காட்டு’’ அப்படீன்னு சொன்னாரு.
அவனும் தன்னோட ஓலையை எடுத்து ராஜாக்கிட்டக் கொடுத்தான். அதை வாங்கிப் பாத்த ராஜா எங்க நீயே இதை வாசிச்சிக் சொல்லு பாக்கலாம்னு’’ அவங்கிட்டயே கொடுத்து வாசிக்கச் சொன்னாரு.
அவனும், ‘‘நீ தேய்க்கிற தேய்ப்பும் பாக்குற பார்வையும் தெரியும் தெரியும்னு’’ சொன்னான்.’’ அதைக் கேட்ட ராஜாவுக்கு ஒண்ணும் புரியல. ராஜா அங்க இருந்த கவிஞர்கள் எல்லாரையும் பாத்து, ‘‘இங்க பாருங்க நாளைக்கு காலையில இவரு சொன்ன கவிதை எங்க இருக்குது? இதுக்கு என்ன அருத்தம்னு நீங்க எல்லாரும் கண்டுபிடிச்சிச் சொல்லணும்னு’’ சொல்லிட்டு அவையக் கலைச்சிட்டுப் போயிட்டான்.
வீட்டுக்குப் போன எல்லாப் புலவர்களும் எல்லா இலக்கியங்களையும் எடுத்துப்போட்டுப் பார்த்தாங்க. ஒண்ணுலயும் இவன் சொன்ன கவிதை இல்லை. எல்லாரும் தேடித் தேடி சலிச்சிப் போயிட்டாங்க.
இருந்தாலும் தங்களுக்குக் கெடைச்ச புத்தகத்தை எல்லாத்தையும் பெரட்டிப் பாத்துட்டு சரி என்ன நடந்தாலும் நடக்கட்டும்னு ராத்திரி படுத்துட்டாங்க.
இந்தச் சமயத்துல பக்கத்து நாட்டு ராஜா இந்த நாட்டு ராஜாவுக்குச் சவரம் பண்ற நாவிதர ரகசியமா ஆளனுப்பிக் கூப்புட்டு அனுப்பிச்சி நெறையப் பணத்தைக் கொடுத்து, ‘‘நாளைக்குக் காலையில ஒங்க ராஜாவுக்கு மொகச்சவரம் செய்யிறபோது அவரோட கழுத்தை அறுத்துக் கொன்னுடு. அப்படிக் கொன்னுட்டா ஒனக்கு அரசாங்கத்துல பெரிய பதவியும் தர்றேன்னு’’ சொல்லி வீட்டுக்கு அனுப்பிச்சாரு.
வீட்டுக்கு வந்த நாவிதன் நல்ல கத்தியா எடுத்து வச்சிப்பிட்டுப் படுத்துட்டான். மறுநாள் பொழுது விடிஞ்சது. ராஜாவுக்குச் சவரம் பண்றதுக்காக அரண்மனை நாவிதர் நல்ல பதமான கத்திய எடுத்துக்கிட்டு வந்தாரு.
வந்தவரு எப்படிடா ராஜாவைக் கொல்லலாம்னு நெனச்சிக்கிட்டு தான் கொண்டு வந்த வார இழுத்துப் புடிச்சிக்கிட்டு ராஜாவப் பாத்துக்கிட்டே கத்தியத் தீட்ட ஆரம்பிச்சாரு.
இந்த நாட்டு ராஜாவுக்கு கொஞ்சம் சந்தேகம். என்னடா இந்தப் பய எப்பவும் வந்தவுடனேயே சவரம் பண்ண ஆரம்பிச்சிடுவான். ஆனா இன்னக்கிக் கத்தியத் தீட்டிக்கிட்டு இருக்கான்னு மனசுக்குள்ளாற நெனச்சாரு. இருந்தாலும் அத வெளிக்காட்டிக்காமா நாவிதனப் பாத்து, ‘‘நீ பாக்குற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் தெரியும் தெரியும்னு’’ சொன்னாரு.
இதக் கேட்ட நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஐயையோ நாம ராஜாவக் கொல்ல நெனச்சது அவருக்குத் தெரிஞ்சி போச்சு. ராஜா நம்மளக் கொன்னுப்புடுவாரேன்னு நெனச்சிக்கிட்டு, ‘‘மகாராஜா மகாராஜா என்ன மன்னிச்சிடுங்க. பக்கத்து நாட்டு ராஜாவோட பேச்சில மயங்கி ஒங்களக் கொல்ல நெனச்சேன். அதுக்காகத்தான் நான் கத்திய வாருல நல்லாத் தேய்ச்சித் தீட்டுனேன். எப்படிடா ஒங்களக் கொல்லறதுன்னும் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். இதை நீங்க சரியாக் கண்டுபிடிச்சி, நீ பாக்குற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் தெரியும் தெரியும்னு சொல்லிட்டீங்கன்னு’’ காலப்புடிச்சிக்கிட்டு அழுதான்.
ராஜா ஆகாகா புதுசா கவிதை எழுதுன கவிஞனோட வரியச் சும்மா சொன்னதுனால நம்ம உயிரக் காப்பாத்திக்கிட்டோம். இல்லைன்னா இந்த நாவிதன் நம்மளக் கொன்னுருப்பான்னு மனசுக்குள்ளறயே நெனச்சிக்கிட்டு, நாவிதனப் புடுச்சி சிறையில போட்டாரு.
புதுசா கவிதை எழுதிக்கிட்டு வந்தவனக் கூப்புட்டு அவன தன்னோட அரசவைக் கவிஞர்களுக்குத் தலைவனாக்கிட்டாரு. அங்க இருந்த பெரும்புலவருங்க எல்லாருக்கும் ஒண்ணும் வௌங்கவே இல்ல. ஒரு சாதாரணமான ஒண்ணுமில்லாத வார்த்தை ஒருத்தன கவிஞருக்கெல்லாம் தலைவனாக்கிடுச்சி.
எல்லாம் நேரங்காலம் ஒத்துவந்தா சரியா நடக்குங்குறதுக்கு இதுதான் உதராணமாச் சொல்லப்பட்டு வருது.