எல்லாக் கிராமங்கள்லயும் சிறுதெய்வங்கள் உண்டு. அச்சிறுதெய்வங்கள் ஒவ்வொன்னுக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறுக்கு ஒரு காரணமும் இருக்கும். கதையும் இருக்கும். தமிழகத்துல நெறைய அம்மன் கோயில்கள் இருக்குது. அதுலயும் புதுக்கோட்டை மாவட்டத்துல கொஞ்சம் கூடுதலாவே அம்மன் கோயில்கள் இருக்குது.
ஒவ்வொரு அம்மனுக்கும் ஒரு பேரு உண்டு. தீப்பாஞ்ச அம்மன்னு ஒரு கிராம தேவதை இருக்கு. அந்த அம்மனப் பத்தின கதை நெஞ்சைக் கரைய வைக்கும்.
ஒரு விவசாயி வீட்டுல ஏழு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்துச்சு. அந்த ஏழு பேரும் அந்தத் தங்கச்சி மேல ரொம்ப உசிரா இருந்தாங்களாம். எல்லாரையும் விட அந்தத் தங்கச்சி அறிவானவளா இருந்தா. அவ சின்னப் பிள்ளயைா இருந்ததால வெளையாட்டுத் தனம் அதிகமா அவகிட்ட இருந்துச்சு.
ஒருநாளு அந்த கிராமத்துக்கு ஒரு குரங்காட்டி குரங்கப் பிடிச்சிக்கிட்டு வந்தான். அவன் அந்தக் குரங்க வச்சி வித்தையக் காட்டுனான். தங்கச்சிகாரி சின்னப் பொண்ணுங்கறதால அந்தப் பிள்ளை அந்தக் குரங்காட்டி பின்னால போயி அவங்காட்டுற வித்தையப் பாத்துக்கிட்டே இருந்தா.
இப்படி இருந்ததால அவ அந்தக் குரங்காட்டி பின்னால போயிட்டா. அவ கிராமத்த விட்டுட்டு பக்கத்துக் கிராமத்துக்கு அந்தக் குராங்காட்டியோட போயிட்டா.
பொழுது போயிருச்சு. இருட்ட ஆரம்பிச்சதால அவளுக்குத் திரும்பி தன்னோட கிராமத்துக்கு வர்றதுக்குப் பயந்துக்கிட்டு அந்த ஊருல இருந்த கோயில்ல தங்கிட்டா. தங்களோட தங்கச்சியக் காணமே காணமேன்னு ஏழு அண்ணன்களும் ஒவ்வொரு இடமாப் போயித் தேடுனாங்க. கடைசி வரைக்கும் அவங்களால கண்டுபிடிக்க முடியல.
அண்ணன்களுக்குக் குழப்பமா இருந்துச்சு. இராத்திரி முச்சூடும் ஏழு அண்ணன்களும் தங்கச்சிய நெனச்சி நெனச்சி அழுது பொலம்பிக்கிட்டு இருந்தாங்க. இராத்திரிப் பொழுது விடிஞ்சிரிச்சு. மறுபடியும் தங்கச்சியத் தேடத் தொடங்கினாங்க.
இராத்திரி முழுக்கப் பக்கத்தூருக் கோயில்ல இருந்த அந்தச் சின்னப்பிள்ளையான தங்கச்சிகாரி ஐயையோ நம்ம அண்ணனுங்க தேடுவானுகளேன்னுட்டு அரக்கப் பரக்க வேகவேகமா ஓட்டமும் நடையுமா தன்னோட கிராமத்த நோக்கி ஓடியாந்தா. அப்படி ஓடியாரபோது அவளோட கிராமத்து எல்லையில அவளோட அண்ணனுங்க அவளத் தேடிக்கிட்டு வந்தவனுங்க அவளைப் பாத்துட்டானுக.
அவங்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் மனசுக்குள்ளாற ஆத்திரமும் அழுகையுமா இருந்துச்சு. அவனுகளப் பாத்த தங்கச்சி அழுதா. அவனுக அவள அழுகாதன்னு சொல்லிக் கிராமத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்தானுக. அப்ப மூத்தவன் தங்கச்சிக்கிட்ட, ‘‘ஏத்தா எங்கத்தா போன?’’ன்னு கேட்டான்.
அதுக்கு அவ, “நேத்து குரங்காட்டி நம்ம ஊருக்குள்ளாற வந்தான். குரங்க வச்சி வித்தை காட்டிக்கிட்டு இருந்தான். அதப் பாத்துக்கிட்டே அவன் பின்னால நான் போயிட்டேன். பக்கத்தூருக்குப் போயிட்டுத் திரும்ப வந்துரலாம்னு பாத்தேன் இருட்டிப் போச்சு. அதனால அந்த ஊருக் கோயில்ல படுத்துருந்துட்டு விடிஞ்ச ஒடனே இப்பத்தான் வந்தேன்னு” சொன்னா.
இருந்தாலும் மூத்தவனுக்கு மனசு ஆறல, “நீயி சொல்றது எல்லாஞ் சரித்தான். ஆனா இந்த ஊருக்காரவுங்க ஒன்னயப் பத்தித் தப்பால்ல பேசுறாங்க. அந்த குரங்காட்டிகூடப் போயிட்டான்னு தப்பாப் பேசுறாங்க... எங்க மானமே போகுது. இப்பவே இந்தக் குரங்காட்டி கூடப் போனவ இன்னும் வளந்த பெறகு எப்படி இருப்பாளோன்னு தெரியலையே”ன்னு சொல்றாங்க. எங்களால தலைநிமிர்ந்து நடக்க முடியல. என்ன செய்யிறது. எங்களுக்கு இருக்கறது ஒரே ஒரு தங்கச்சி. அதனால எங்களால என்ன செய்யிறதுன்னு தெரியல’’ அப்படீன்னு சொன்னான்.
அதக் கேட்ட அந்த தங்கச்சிகாரி, “அண்ணே எனக்காக நீங்க யாரும் மானத்தை இழக்க வேண்டாம். ஏம்மேல நெருப்பப் பத்தவச்சிக் கொன்னுருங்க. நான் சின்னப் பிள்ளை. என்னையப் பாத்து இந்த ஊரு தப்பாப் பேசுது. இப்ப மட்டும் பேசாது. நான் பெரியபுள்ளையானாலும் பேசிக்கிட்டுத்தான் இருக்கும். ஒங்க தங்கச்சி ஒங்களுக்கு எப்பவும் நலல பேரத்தான் எடுத்துக் குடுப்பா. ஏம்மேல தீப்பத்த வைக்காட்டியும் இங்க ஒரு குழிய வெட்டி தீயப் பத்த வச்சி எறிங்க நான் அதுல விழுந்து இறந்து போயிடறேன்”னு அழுதுக்கிட்டேச் சொன்னா.
அதக் கேட்ட அண்ணனுங்க அழுதுகிட்டே இருந்தானுங்க. அவனுங்க அதுக்கு முன்வரலை. அதப் பாத்த தங்கச்சிகாரி அங்கன கெடந்த பட்ட வெறகு, மரங்குச்சி சருகு எல்லாத்தையும் ஒன்னா அள்ளிக் குமுச்சு சிக்கி முக்கிக் கல்லை எடுத்து ஒரசி தீப்பத்த வச்சி அதுல விழுந்து செத்துப் போயிட்டா. அதக் கண்ட அண்ணனுக ஐயோ நம்ம தங்கச்சி அநியாயமா நெருப்புல விழுந்து எரிஞ்சிட்டாளே இனிமே நாம ஏன் உயிரோட இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு அவங்களும் தங்களோட கழுத்தை ஒவ்வொருத்தரும் அறுத்துக்கிட்டு இறந்துட்டாங்க.
இந்தமாதிரி அண்ணன்களும் தங்கச்சியும் இறந்து போனதப் பாத்த ஊரு ஜனங்க... அலறி அடிச்சிக்கிட்டு அந்தப் பக்கமா வந்தாங்க. அப்படி வந்தவங்க அங்க எட்டு பேரு எரிஞ்சி சாம்பலாக் கிடக்கிறதப் பாத்துட்டு அழுதாங்க. அப்ப அங்க இருந்த ஒரு சின்னப் பொம்பளப்பிள்ள மேல சாமி வந்து, “டேய் நான்தான் நெருப்புல பாஞ்சி இறந்து போன சின்னப்புள்ள வந்துருக்கேன்டா. இந்த ஊரு நல்லா இருக்கணுமின்னா என்னையச் சாமியா நெனச்சிக் கும்பிடுங்க ஒங்கள நல்லா வச்சிக்கிறேன்”னு சொன்னது. அதக் கேட்ட ஊர் ஜனங்களும் சரி இனிமே ஒன்னைய தீப்பாஞ்ச அம்மனா நெனச்சிக் கும்புட்டுக்கிட்டு வர்றோம். எங்கள நல்லா வச்சிக்கோன்னு சொல்லிக் கும்புட்டு விழுந்தாங்களாம்.
அன்னியிலிருந்து இன்னைக்கு வரைக்கும் இந்த வட்டாரத்துல இருக்கற குமராபட்டி உள்ளிட்ட அந்தப் பகுதி மக்களாள தீப்பாஞ்ச அம்மன் பூத்திருவிழா கொண்டாடப்பட்டு வருது. மக்களும் நல்லா இருக்கறாங்க.