சகுனம் பாக்குறத ராசி பாக்குறதுன்னு சொல்வாங்க. ராசின்னா அதிர்ஷ்டம்னும் சொல்வாங்க. காலையில எழுந்து யாரு முகத்தப் பாக்குறமோ, அன்றைக்கு நல்லது நடந்தா நல்ல ராசின்னும், கெட்டதா நடந்தா முழிச்ச மொகம் சரியில்லைன்னும் முடிவு பண்ணிக்குவாங்க. இப்படி ராசி பாக்குறது எல்லாப் பக்கமும் இருக்குது.
இந்த ராசி பாக்குறதப் பத்தின கதையொன்னு வழக்கத்துல இருக்குது. வளமான செல்வம் நிறைந்த பெரிய நாட்டை ஒரு ராஜா ஆண்டுகிட்டு வந்தாரு. அவரு சாத்திரம் சகுனம்னு எல்லாத்தையும் பாத்துக்கிட்டு அதும்படி நடப்பாரு. அவரத் திருத்தணும்னு அமைச்சர்கள்ளாம் முயற்சி செஞ்சாங்க. ஆனா முடியல. ராசா எதுக்கெடுத்தாலும் அவரு சகுனம் பாக்க ஆரம்பிச்சதுனால பிரச்சனை மேல பிரச்சனைதான் ஏற்பட்டுச்சு.
இப்படி இருக்கையில ஒரு நாள் காலையில ராசா அரண்மனை மாடியில தூங்கிட்டு அதிகாலையில எழுந்துருச்சாரு. அப்படி எழுந்திரிச்சவரு மாடியில நின்னுக்கிட்டே அரண்மனைக்கு வெளியில பாத்துக்கிட்டு இருந்தாரு. அப்ப துணிதொவைக்கிற தொழிலாளி ஒருத்தன் வெள்ளாவி வைச்சித் துணிகளைத் தொவைக்கிறதுக்காகத் துணிகளையெல்லாம் மூட்டையாக் கட்டி அதைக் கழுதைங்க மேல ஏத்திக்கிட்டு ஆத்தை நோக்கிப் போயிக்கிட்டு இருந்தான்.
அப்படிப் போய்க்கிட்டு இருந்தபோது அரண்மனை வழியாப் போனான். அப்ப அரண்மனை வழியாப் போறபோது தலைய நிமிர்ந்து அரண்மனை மாடியப் பாத்தான். அங்க ராஜா நின்னுக்கிட்டு இருந்தாரு. ராஜாவாப் பாத்ததும் அவனுக்கு ரொம்ப சந்தோஷம் வந்துருச்சு. ஆஹா இன்னைக்கு ராசா மொகத்துல முழிச்சிருக்கோம் நல்ல வருமானம் நெறையக் கிடைக்கும்னு நெனச்சிக்கிட்டு அவன் ராஜாவப் பாத்து கீழ விழுந்து கும்புட்டான். ராசா காலையில எழுந்துருச்சி மொதல்ல பாத்த முகம் இந்தத் துணிதொவைக்கிற தொழிலாளியோட முகம். ராசாவும் அவனோட வணக்கத்த ஏத்துக்கிட்டாரு. அவனும் கும்புட்டுக்கிட்டே மெதுவாக் கழுதைங்களை ஓட்டிக்கிட்டுப் போனான்.
அவன் போனதையேப் பாத்துக்கிட்டு இருந்த ராஜா மெதுவா தலையத் திருப்புனாரு. அவரோட தலை நிலைப்படியில மடார்னு மோதிருச்சு. அப்படி மோதுனதால தலையில பொடைச்சிப்போயி ரத்தம் வந்துருச்சு. ஒடனே ராஜா இதுக்கெல்லாம் காரணம் இந்த துணிதொவைக்கிறவன்தான். அவன் மொகத்துல முழிச்சதுதான் காரணம். நமக்கே இப்படி நடந்துச்சுன்னா அவன் மொகத்துல முழிக்கிறவங்க எல்லாருக்கும் இதே நிலைமைதானே ஏற்படும். இனிமே அவன உசுரோட விட்டு வைக்கக் கூடாது. அவனை கொன்னுரணும்னு நெனச்சிக்கிட்டு வீரர்களைக் கூப்பிட்டு அந்த துணி தொவைக்கிறவனைப் பிடிச்சித் தலைய வெட்டச் சொல்லி ஆணையிட்டாரு.
வீரர்களும் அவரு சொன்ன துணி தொவைக்கிறவனைத் தேடிக்கிட்டுப் போயி அவனக் கண்டுபிடிச்சி கைதுசெஞ்சி அழைச்சிக்கிட்டுக் கொல்றதுக்காகப் போனாங்க. துணி தொவைக்கிறவனுக்கு ஒண்ணும் புரியல. என்ன ஏதுன்னு கேட்டான். அந்த வீரர்களும் நடந்ததச் சொன்னாங்க. அவனுக்கு வேதனையா இருந்துச்சு.
அவன் வீரர்களைப் பாத்து, ‘‘ஐயா நான் சாகுறதப் பத்திக் கவலைப் படல. அதுக்கு முன்னால நம்ம ராஜாவப் பாத்து ஒரு கேள்வி மட்டும் கேக்கணும். அப்படிக் கேட்டதுக்கப்பறம் என்னைக் கொன்னுருங்க’ன்னு சொன்னான்.
அவன் கெஞ்சுறதப் பாத்த வீரர்களும் சரி, சாகப்போறவனோட கடைசி ஆசையை நிறைவேத்தறது நம்மளோட கடமைன்னு நெனச்சிக்கிட்டு ராஜாக்கிட்ட அனுமதி வாங்கிக்கிட்டு அவன ராஜா முன்னால கொண்டுபோயி நிறுத்துனாங்க.
அவனப் பாத்த ராஜா, ‘‘சரி நீ என்கிட்ட என்ன கேக்கணும்னு நெனக்கிற. கேளு’’ன்னாரு.
அவன் ராஜாவப் பாத்துச் சிரிச்சான்.
அவன் சிரிச்சதப் பாத்த ராஜாவுக்கு ஒண்ணும் புரியலை. அவரு அவனப் பாத்து, ‘‘நீ சாகப் போற. என்கிட்ட என்ன கேள்வி கேக்க நினைக்கிறியோக் கேளு’’ அப்படீன்னாரு.
அவனும், ‘‘மகாராஜா, நீங்க என்னோட முகத்தப் பாத்ததால ஒங்களோட தலை சுவத்துல முட்டி காயம்பட்டுருச்சு. ஆனா இன்னைக்கு மொத மொதல்ல நான் ஒங்க மொகத்தத்தான் பாத்தேன். ராஜா மொகத்துல முழிச்சா பெரிய ராஜயோகம் வரும்னு பெரியவங்க சொல்றதக் கேட்டிருக்கேன். ஆனா இப்ப எனக்கு ராஜயோகம் வரலை. மரண யோகம் தான் வந்துருக்கு. என்னோட மொகத்துல முழிச்ச நீங்க உயிரோட வாழறீங்க. ஒங்க மொகத்துல முழிச்ச நான் சாகப் போறேன். இப்ப யாரோட மொகம் ராசியானதுன்னு தெரிஞ்சிக்கோங்கன்னு’’ சொல்லிட்டுப் பேசாம இருந்தான்.
இதக் கேட்ட ராஜாவுக்கு யாரோ நெஞ்சுல பளார்னு அடிச்ச மாதிரி இருந்துச்சு. ஆஹா நாம முட்டாள்தனமா ஒருத்தனக் கொல்ல இருந்தோமே! நம்ம மொகத்துல முழிச்சதுக்காக ஒருத்தனோட உயிராப் போகணும். நாட்டுல ராஜா மொகத்துல முழிச்சா சாக வேண்டியதுதான்னு பேசிக்குவாங்களே! நம்ம மொகம் ராசியில்லாத மொகம்னு சொல்வாங்களேன்னு நினைச்சிக்கிட்டு, அவனப் பாத்து, ‘‘இங்க பாருப்பா இன்னிக்கு ஒனக்கு ராஜயோகமப்பா. இன்னியில இருந்து எனக்கு ஆலோசனை சொல்ற குழுவுல நீயும் ஒரு ஆளா இரு’ அப்படீன்னு சொல்லி அவனுக்குப் பொன்னும் பொருளும் பரிசாக் கொடுத்து அனுப்பி வச்சாரு.
அவனும் மொக ராசிய நெனச்சிக்கிட்டு வீட்டுக்குப் போயிச் சேந்தான். ராசிங்கறது மொகத்துல இல்ல. மனசுலதான் இருக்கு...