அரசருடைய தலைமையில அரசவை நடந்துக்கிட்டு இருந்தது. அப்பப் பாத்து அரசர் ஒரு கருத்தைச் சொன்னாரு. அது என்னதுன்னா, ‘‘இந்த உலகத்துல உண்மையான துறவியப் பாக்கவே முடியாது. எல்லாரும் போலித் துறவிங்க. துறவுன்னு சொல்லிக்கிட்டு நாட்ட ஏமாத்திக்கிட்டு இருக்கறாங்க’’என்பதுதான் அந்தக் கருத்து.
அந்தக் கருத்தை அரசர் சொல்லிட்டு அவையைப் பார்த்து, ‘‘நான் சொன்ன கருத்த யாராவது மறுக்க முடியுமா? மறுக்க முடியும்னா அதை யாரா இருந்தாலும் நிரூபிச்சிக் காட்டணும்’’ அப்படீன்னு கேட்டாரு.
அப்ப அவையில இருந்த அத்தனை பேரும் அரசருக்கு எதிரா எப்படி மறுத்துச் சொல்றது. அப்படி மறுத்துப் பேசினா ராஜதுரோகக் குற்றம்னு அரசர் நினைக்க மாட்டாரா? அதனால நமக்கு ஏன் வம்புன்னு பேசாம இருந்துட்டாங்க.
ஆனா அங்க உள்ள ஒரு மூத்த அமைச்சரால அப்படி சும்மா இருக்க முடியல. அவரு உடனே எழுந்து, ‘‘அரசே உண்மையான துறவிங்களும் இந்த உலகத்துல இருக்கறாங்க. நீங்க போலியான துறவிகளப் பாத்ததுனால இப்படிச் சொல்றீங்க. எதையும் விரும்பாத துறவையே பெரிதா நினைக்கிற துறவிங்க இருக்கறாங்க. அப்படிப்பட்ட துறவிகள நான் பாத்திருக்கேன்’’னு சொன்னாரு.
அரசர், ‘‘அப்படியா! ரொம்ப ஆச்சரியமா இருக்கே. சரி. நாளைக்கு நீங்க சந்தித்த அந்தத் துறவிய நாங்க எல்லாரும் பார்க்க வர்றோம். அவரு உண்மையான துறவியா இல்லையாங்கறத சோதனை செஞ்சி முடிவு செய்யறோம்’’னு சொன்னாரு. சரின்னு அந்த மூத்த அமைச்சர் ஒத்துக்கிட்டு துறவியத் தேடிப் போனாரு.
மூத்த அமைச்சருக்கு எங்க தேடியும் துறவியச் சந்திக்க முடியல. அவருக்கு மனசுல ஒரு யோசனை தோணிச்சி. அந்த ஊருக்குப் பக்கத்து ஊருல இருக்கற ஒரு திறமையான நடிகரைப் பாத்து துறவி வேடம் போடச் சொல்வோம்னு நெனச்சிக்கிட்டு அவரைப் பார்க்கப் போனாரு.
அந்த நடிகரைப் பாத்துத் தனக்கும் அரசருக்கும் இடையில நடந்தவைகளை எடுத்துச் சொல்லி, ‘‘நீங்க துறவியா நடிக்கணும். அதுக்கு நீங்க எவ்வளவு ஊதியம் கேக்குறீங்களோ அதை நான் கொடுத்துடறேன்னாரு’’ அந்த நடிகரும் சரி நாளைக்குக் காலையில ஒங்க ஊருல இருக்கற குளத்தங்கரை அரசமரத்தடியில வந்து தங்கி இருக்கறேன். அப்ப அங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு வாங்க. அப்பப் பாருங்க என்னோட நடிப்பன்னு’’ சொன்னாரு.
அமைச்சருக்கு ரொம்ப சந்தோஷம். வேலை சுலபமா முடிஞ்சிருச்சின்னு வீட்டுக்குத் திரும்பி வந்தாரு. மறுநாளு அமைச்சர் சொன்னது மாதிரியே அந்த நடிகர் துறவி வேடம் போட்டுக்கிட்டு வந்து குளத்தரங்கரையில இருந்த அரசமரத்து அடியில தங்கி இருந்தாரு.
அமைச்சரும் அவரைப் பாக்குறதுக்கு அரசரை வந்து அழைச்சாரு. அமைச்சர் சொன்ன உடனேயே அரசரும் தன்னோட பரிவாரங்களோட ராணியையும் கூட்டிக்கிட்டு ஒவ்வொருத்தருக்கிட்டயும் பல தட்டுக்கள்ள பொன்னும் மணியும் நிறைச்சுக் கொண்டுக்கிட்டுப் போனாரு.
அரச மரத்தடி வந்தது. அங்க சிவச் சின்னங்களோட ‘‘ஓம் நமசிவாய! ஓம் நமசிவாயன்னு’’ சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவரப் பாத்த அமைச்சருக்கு மனசுக்குள்ளாற ஒரு சிரிப்பு, ‘அட பாக்க நிஜமான சாமியாரவே அந்த நடிகன் ஆயிட்டானேன்னு’’ நினைச்சிக்கிட்டு அந்தத் துறவியான நடிகனோட கால்ல விழுந்து, ‘‘சாமி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கன்னு’’ கும்புட்டு விழுந்தாரு.
அந்தத் துறவியும் ‘‘மகனே! நீ வாழ்க! நீ நினைத்தது எல்லாம் நிறைவேறும். எல்லாம் நன்மையாகவே முடியும்னு’’ வாழ்த்தினார்.
அமைச்சர் கும்புட்டது மாதிரியே அரசர், ராணி, அரசரோடு வந்த தளபதி, பரிவாரங்கள் அனைவரும் பொன்னையும் மணியையும் நிறைத்த தட்டுக்களை வைத்து வணங்கினார்கள். அவற்றையெல்லாம் பார்த்த துறவி, ‘‘மகனே! உனக்கு வெற்றி கிட்டட்டும். நாடு மேன்மையடையட்டும். நீ நினைத்தவாறு மக்களின் வாழ்க்கை உயர்வடையும். வாழ்த்துக்கள்ன்னு’’ சொன்னார்.
அரசர் அந்தத் துறவியப் பாத்து, ‘‘சுவாமி இந்த எளியவனின் காணிக்கையாக இந்தப் பொன்னையும் மணிகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்னு’’ பவ்வியமாக கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டார்.
அதைக் கவனித்த துறவி, ‘‘மகனே! இவையெல்லாம் துறவியாகிய எனக்கு எதற்கு? இவற்றையெல்லாம் நீயே எடுத்துக் கொள். எமக்கு இறைவனுடைய அருள் ஒன்றே போதும். இவை எமக்குத் தேவையில்லை. இவற்றால் எனக்கு என்ன பயன்? இவை உன்னிடம் இருப்பதே சரியானது. இவையும் இந்தக் கல்லும் எமக்கு ஒன்றேன்னு’’ சொல்லிச் சிரித்தார்.
அரசருக்கு ஒரே வியப்பு. அட இவ்வளவு செல்வத்தையும் வேணாம்னு சொல்லக் கூடிய ஒரு துறவிய இப்பத்தான் நாம பாக்குறோம். சரி அவர நம்ம அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம் அப்ப என்ன செய்யிறாருன்னு பார்ப்போம்னு மனசுக்குள்ளாற நெனச்சிக்கிட்டு, ‘‘சுவாமி இனிமேல் தாங்கள் என்னுடன் அரண்மனையிலேயே இருந்து எனக்கு வழிகாட்டுதல் வேண்டும்னு’’ அவரை வணங்கித் தன்னோட வருமாறு அழைத்தார்.
அதைக் கண்ட அந்தத் துறவி, ‘‘மகனே எனக்கு இந்த உலகமே வீடு. உமது அரண்மனை யாம் வாழ்வதற்குப் பொருத்தமான இடம் அல்ல. அவை உம் போன்றவர்களால் வாழ்வதற்குரியவை. துறவியாகிய எனக்கு இறைவனது திருவடிகளே உறைவிடம். அதனால் யாம் அங்கு வரவிரும்பவில்லை. ஆறு அனைவருக்கும் பயன்படுமாறு இருக்க வேண்டுமே தவிர ஒருத்தருக்கு மட்டும் பயன்படுமாறு இருத்தல் கூடாது. அந்த ஆறு போன்றவனே துறவின்னு’’ சொல்லி மறுத்தார்.
அரசருக்கு வியப்புக்கு மேல் வியப்பு. சரி இந்தத் துறவி உண்மையான துறவிதான்னு முடிவு செஞ்சிக்கிட்டு எல்லோருடனும் மீண்டும் துறவியோட கால்ல விழுந்து கும்பிட்டுட்டு அரண்மனைக்குத் திரும்பி அமைச்சர் சொன்னத ஒத்துக்கிட்டாரு. அமைச்சரும் அரசருக்கிட்ட விடைபெற்றுக்கொண்டு தன்னோட வீட்டுக்குக் கிளம்பினாரு.
வீட்டுக்குக் கிளம்பினவரு அந்தத் துறவியப் பார்த்து அவருக்கு வேண்டியதைக் கொடுத்துருவோம்னு நெனச்சிக்கிட்டு, அந்தத் துறவி இருக்கற இடத்தைப் போய்ப் பார்த்தாரு.
அப்பவும் அந்தத் துறவி கண்கள மூடிக்கிட்டு, ‘‘ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!ன்னு’’ சொல்லிக்கிட்டு இருந்தாரு. அவருகிட்டப் போன அமைச்சர், ‘‘ஐயா நடிச்சது போதும். ரொம்ப அதிகமா நடிக்காதே. கண்ணத் தெறந்து பாருன்னு’’ சொன்னாரு. அப்பக் கண்ணத் தெறந்து பாத்த நடிகர். ‘‘மகனே உமக்கு என்ன வேண்டும். கேள்ன்னு’’ சொன்னார்.
அதைக் கேட்ட அமைச்சர், ‘‘ஐயா உமக்கு நடிப்பதற்காகக் கொடுக்கிற பணத்தை விட அதிகமாவே தர்றேன். இந்தா. பணத்தை வாங்கிக் கொண்டு போன்னு’’ சொன்னாரு.
அதைக் கேட்ட துறவியா இருந்த நடிகர், ‘‘அமைச்சர் அவர்களே! எனக்கு எந்தப் பணமும் வேண்டாம். நான் உண்மையிலேயே துறவியாக மாறிவிட்டேன். துறவியா நடித்ததற்கே இந்நாட்டை ஆளும் அரசர் உட்பட அனைவரும் எனது கால்களில் விழுந்து வணங்குகிறார்கள் என்றால் துறவியாகவே ஆகிவிட்டால் எவ்வளவு பெரிய உயர்வு கிடைக்கும் என்பதை எனக்கு நீங்கள் உணர்த்திவிட்டீர்கள். நன்றி இனிமேல் துறவியிலிருந்து இயல்பிற்கு என்னால் வரஇயலாது’’ என்று கூறிவிட்டார்.
அமைச்சருக்கு வியப்பிற்கு மேல் வியப்பு. துறவு வேடம் அணிந்த ஒருவனின் உள்ளம் உண்மையிலேயே துறவியாகவே மாறிவிடுமா? என்று நினைத்துக் கொண்டே தனது வீட்டைப் பார்க்க நடந்தார். எப்பவுமே உண்மைக்கு மதிப்பு உண்டுங்கறதுக்காக இந்தக்கதை இந்த வட்டாரத்துல வழக்கத்துல இருந்து வருகின்றது.