உடல் பலத்தை விட அறிவு பலமே உயர்ந்தது. சிலபேரு ஆஜானுபாகுவா இருப்பாங்க. ஆனா, அறிவுங்கறது சுத்தமா இருக்காது. உடல் வலிமையில குறைவா இருந்தாலும் சிலபேரு அறிவு நெறைஞ்சவங்களா இருப்பாங்க. அதனால ஆளப்பாத்து எப்பவும் எடைபோடக்கூடாது. இதுக்குத் தகுந்த மாதிரி ஒரு கதை இந்தப் பக்கம் வழக்கத்துல இருந்து வருது.
பெரிய காடு ஒண்ணு இருந்துச்சு. அதுல பலவகையான விலங்குகளும் வாழ்ந்துகிட்டு வந்ததுங்க. அததுபாட்டுக்கு கெடைக்கிற இரையத் தின்னுட்டு இருந்துச்சுங்க. அப்ப அந்தக் காட்டுக்குள்ள ஒரு பெரிய சிங்கத்தோட கர்ஜனை கேட்டது.
சிங்கத்தோட கர்ச்ஜனையக் கேட்ட மிருகங்க எல்லாம் மூலைக்கொன்னா ஓடிப்போயி ஒழிச்சிக்கிட்டதுங்க. அந்தச் சிங்கம் காட்டுக்குள்ளாற அங்குட்டும் இங்குட்டுமா ஓடி ஓடி கண்ணுல கண்ட மிருகத்த எல்லாத்தையும் கொன்னு தின்னுச்சு. இதே மாதிரி தனக்குப் பசியெடுக்கிறப்ப எல்லாம் இந்தச் சிங்கம் ஓடியாந்து கண்டமேனிக்கு மிருகங்களை அடிச்சிக் கொன்னு தின்னுரும்.
இதப் பாத்த மிருகங்க எல்லாம் ஒருநாளு காட்டுக்குள்ளாற சிங்கத்துக்குத் தெரியமா ஒன்னாக் கூடுச்சுக. ஒவ்வொரு மிருகமும் அந்தச் சிங்கம் செய்யிறதப் பத்தி பேசுச்சு. இப்படியே போனா, அந்தச் சிங்கம் எல்லா மிருகங்களையும் ஒரேயடியா அழிச்சிரும். இதுக்கு ஏதாவது நாம செஞ்சாகணும். இல்லைன்னா நாம எல்லாரும் அழிஞ்சிர வேண்டியதுதான். அப்படீன்னு சொன்னதுக.
அப்ப அங்க இருந்த குள்ளநரி ஒண்ணு எந்திருச்சு, ‘‘நானொரு யோசனை சொல்றேன். கேளுங்க. நாம எல்லாரும் போயி அந்தச் சிங்கத்தப் பாத்து, நீயி எல்லாரையும் ஒரேயடியா அடிச்சிக் கொன்னுக்கிட்டு இருக்க. அப்படிச் செய்யாத. நாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரு வர்றோம். அப்படி முறைவச்சி வந்து ஒன்னோட பசியத் தீக்கறோம்னு சொல்லுவோம்..அப்பத்தான் நம்ம இனம் முழுக்க அழிஞ்சி போகாம இருக்கும்னு’’ சொன்னது.
அதைக் கேட்ட எல்லா மிருகங்களும், ‘‘குள்ளநரி சொல்றது சரிதான். வாங்க போயி அந்தச் சிங்கத்தப் பாத்துச் சொல்லிட்டு வருவோம்னு’’ கௌம்பிப் போயி அந்தச் சிங்கத்தப் பாத்து விவரத்தச் சொன்னதுங்க. அந்தச் சிங்கம், ‘‘அட நாம கஷ்டப்பட்டு வெரட்டிக் கொன்னு சாப்பிடறதுக்குப் பதிலா நாம இருக்கற எடத்துக்கே நம்மளத் தேடி வருதுகளா...? சரி சரி வரட்டும்னு’’ மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு, மிருகங்களப் பாத்து, ‘‘சரி சரி.. நீங்க சொல்லறத ஒப்புக்கறேன். தெனந்தோறும் யாராவது ஒங்களுக்குள்ள மொறைவச்சி வந்து என்னோட பசியத் தீத்துருங்க. அப்படிச் செய்யலைன்னா ஒங்க எல்லாரையும் அடிச்சிக் கொன்னுருவேன்’’ அப்படீன்னு சொன்னது.
மிருகங்களும் சிங்கத்துக்கிட்ட சொன்னது மாதிரியே நடந்துக்கிடுச்சுங்க. இப்படியே ஒவ்வொரு மிருகமாப் போயி சிங்கத்தோட பசியப் போக்கிக்கிட்டு இருந்துச்சுங்க.
அப்படி இருக்கறபோது ஒருநாளு ஒரு மொயலோட முறை வந்துச்சு. அந்த முயலுக்கு ஒரு குட்டி மொயலு ஒண்ணு இருந்துச்சு. தாய் மொயலு தன்னோட குட்டியப் பாத்து, ‘‘மகனே ஒண்ண விட்டுட்டு நான் சிங்கத்துக்கு எரையாகப் போறேன். நான் சாகறதப்பத்திக் கவலைப்படல. இனிமே ஒன்ன யாரு பாத்துக்குவா? அத நெனச்சாத்தான் எனக்கு ரெம்பக் கவலையா இருக்கு... நமக்கு யாரு ஒதவுவா?ன்னு’’ சொல்லி தன்னோட குட்டி மொயலக் கட்டிப்புடுச்சு அழுதுச்சு.
அதுக்கு அந்தக் குட்டி மொயலு, ‘‘அம்மா நீ கவலப் படாத ஒனக்காக நாம் போறேன். நான் எப்படியாவது அந்த சிங்கத்தக் கொல்லப் போறேன். கொன்னுப்புட்டு ஒன்கிட்டே வர்றேன். நீ கவலைப்படாம இரு’’ அப்படீன்னு சொன்னது.
அதக் கேட்ட தாய் மொயலு, ‘‘அடேய் தம்பி நீயி சின்னப்பய நீ போயி எப்படிப்பா அத்தப் பெரிய சிங்கத்தக் கொன்னுட்டு வருவ. நீ பேசாம இரு... நாம் போயி அந்தச் சிங்கத்துக்கு எரையாயிடறேன்னு’’ சொல்லி அழுதுச்சு.
அந்தக் குட்டி மொயலு அம்மாவோட கண்ணீரத் தொடச்சிட்டு, ‘‘ஏம்மா நீயி அழுகுற. அழுகாதேம்மா... நான் போயி அந்தச் சிங்கத்துக்கிட்ட போயிட்டு வந்துறேன்’’ அப்படீன்னு சொல்லிட்டு வேகவேகமா ஓடுச்சு. தாய் மொயலால எதுவும் செய்ய முடியல. குட்டி மொயலு ஓடுறதையே பாத்துக்கிட்டு இருந்துச்சு.
வேகவேகமா ஓடுன மொயலுக்குட்டி, காட்டுக்குள்ளாற இருந்த பெரிய பாறை மேல ஒக்காந்து நல்லாத் தூங்குச்சு. பெறகு, ஆஹா சிங்கம் பசியோடு இருக்கும் அதப் போயிப் பாத்துருவோம்னு யோசனை பண்ணிக்கிட்டே போச்சு. அப்ப ஒரு பாழடைஞ்ச கெணத்தப் பாத்துக்கிட்டே மொயலுக்குட்டி போச்சு. அதுக்கு ஒரு யோசன பளிச்சின்னு தோணுச்சு...
அந்தக் குட்டி மொயலு சிங்கத்தோட குகையப் பாத்து மாவேகம் மழைவேமாகப் போச்சு. சிங்கத்தோட குகைக்குள்ளாற மூச்சிறைக்க அந்தக் குட்டி மொயலு வந்து நின்னதைப் பாத்த சிங்கம், ‘‘ஏன்டா தாமதமா வந்தே? எவ்வளவு நேரமா நான் பசியால காத்துக்கிட்டு இருக்கேன்...? எவ்வளவு திமிரு இருந்தா நீ தாமதமா வந்து ஏம்முன்னால பயமில்லாம நிப்பே?’’ அப்படீன்னு கோபமா சத்தம் போட்டுக்கிட்டே பாயறதுக்காக குட்டி மொயலப் பாத்து குகைக்குள்ளாற இருந்து வேகமா வந்துச்சு.
அதப் பாத்த குட்டி மொயலு, ‘‘சிங்க ராஜ சிங்க ராஜா... நீங்க என்னய மன்னிச்சிருங்க... நானு ஒங்களுக்குப் பசிக்குமேன்னுட்டு வேகவேகமாத்தான் வந்தேன். ஆனா வழியில ஒங்கள மாதிரியே ஒரு சிங்கம் என்னய வழிமறிச்சிக்கிட்டு வரவிடாம தடுத்துருச்சி… அந்தச் சிங்கத்துக்கிட்ட இருந்து சாமர்த்தியமா தப்பிச்சு ஒங்கக்கிட்ட வந்துருக்கேன்… என்னய மன்னிச்சிருங்க’’ அப்படீன்னு சொன்னது.
அதக் கேட்ட சிங்கத்துக்கு கோபம் தலைக்கேறிடுச்சு. அந்தச் சிங்கம், மொயலப் பாத்து, ‘‘என்னயத் தவிர இந்தக் காட்டுக்குள்ளாற யார்றா இருக்கா? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட எரைய எனக்குக் கிடைக்கவிடாமப் பண்ணிருப்பான்… அவன் எங்க இருக்கான்னு காட்டு அவன அடிச்சிக் கொன்னுட்டு ஒன்னச் சாப்புடறேன்னு’’ சொன்னது.
அந்தக் குட்டி மொயலும் அப்படியே நடுங்கிக்கிட்டே சிங்த்தக் கூட்டிக்கிட்டு அந்தப் பாழடைஞ்ச கெணத்தப் பக்கம் போனது. அந்தக் கெணத்துல கொஞ்சூண்டு தண்ணீ கெடந்துச்சு. அந்தக் கெணத்துக்குள்ளாற குட்டி மொயலு அந்தச் சிங்கத்த எட்டிப் பாக்கச் சொன்னது. அதுக்குள்ளாறதான் தன்ன வழிமறிச்ச சிங்கம் இருக்கறதாச் சொன்னது மொயலு.
சிங்கமும் கோபத்தோட அந்தக் கெணத்தை எட்டிப் பாத்தது. கெணத்துக்குள்ளாற அதனோட நெழலப் பாத்துட்டு, ‘‘அட திருட்டுப் பயல இங்கயா நீ ஒழிஞ்சிருக்க ஒன்னய என்ன செய்யிறேன் பாருன்னுட்டு’’ வேகமா தன்னோட நெழலு மேல பாஞ்சிச்சு. அந்தக் கெணத்துல சேறும் சகதியும் கலந்த தண்ணி கொஞ்சமாக் கிடந்ததால அந்தச் சேத்துல சிக்கிக்கிட்டு சிங்கம் செத்துப் போச்சு.
சிங்கம் செத்ததை உறுதிப்படுத்திக்கிட்ட குட்டி மொயலு வேகவேகமா வந்து எல்லா மிருகங்களும் கூடுற எடத்துல நின்னுகிட்டு எல்லாத்தையும் கூப்பிட்டது. எல்லா மிருகங்களும் வந்து என்னான்னு கேட்டதுக. அப்ப நடந்ததை எல்லாத்தையும் குட்டி மொயலு சொன்னவுடனேயே அந்தக் குட்டி மொயல சந்தோஷமா தூக்கிப் போட்டு எல்லா மிருகங்களும் வெளையாடிச் சந்தோஷப் பட்டதுங்க. குட்டி மொயலோட தாய் மொயலு தன்னோட குட்டிய கட்டிப் பிடிச்சிச் சந்தோஷப்பட்டது.