இருட்டுக்குள்ள எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. குறிப்பா சாப்பிடக் கூடாது. அப்படி இருட்டுக்குள்ளாறச் சாப்புட்டா பேயி வந்து நம்ம கூட ஒக்காந்துக்கிட்டுச் சாப்புடும்னு சொல்லுவாங்க. இருட்டு நேரந்தான் பேயிகளுக்கு ரொம்ப உகந்த நேரம். இருட்டுக்குள்ளாற பேயிகளுக்குச் சக்தி அதிகம். அதுகள ஒண்ணும் செய்ய முடியாதுன்னும் சொல்வாங்க. இதப்பத்தி இந்தப் பக்கம் ஒரு கதை வழக்கத்துல வழங்கி வருது.
ஒரு ஊருல அக்கா தங்கச்சி ரெண்டு பேரு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரு மேல ஒருத்தரு ரெம்பப் பாசமா இருந்தாங்க. தங்கச்சிக்கு ஒண்ணுன்னா அக்காகாரி ஓடுவா. அக்காவுக்கு ஒண்ணுன்னா தங்கச்சிகாரி ஓடுவா. அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஒரே ஊருக்குள்ளாற வாக்கப்பட்டிருந்தாங்க. வெவ்வேற வீட்டுல வாக்கப்பட்டிருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருந்தாங்க.
தங்கச்சிகாரி நல்லா ஒழைச்சா. அவ வீடு வளமையா இருந்துச்சு. வீடு வாச, நெலம் நீச்சுன்னு குடும்பத்த ஒழைச்சு முன்னேத்துனா. ஆனா அக்காகாரி வறுமையிலேயே இருந்தா. அவ வாக்கப்பட்டுப் போனப்ப அந்தக் குடும்பம் கொஞ்சம் வளமையாத்தான் இருந்துச்சு. ஆனா இவ போன கொஞ்ச நாள்ல அந்தக் குடும்பம் வளமை மாறி வறுமைக்கு வந்துருச்சு.
அக்காகாரியும் கடுமையா ஒழைச்சா. ஆனா அவ வறுமையத் தவிர ஒண்ணையும் காண முடியல. இத நெனச்சி நெனச்சி அக்காகாரியும் அவ வீட்டுக்காரனும் ரொம்ப வருத்தப்பட்டாங்க. தங்கச்சிகாரி அப்பப்ப வந்து அவங்களுக்கு வேண்டிய ஒதவிகளச் செஞ்சிட்டு ஆறுதல் கூறிட்டுப் போவா. அக்காகாரி எல்லாம் தன்னோட தலைவிதின்னு நெனச்சிக்கிட்டு இருப்பா.
அவ வேலை செஞ்சிட்டு வந்து கெடைச்ச நெல்ல வச்சிக் குத்திச் சோறாக்குவா. நெறைய அரிசி போட்டுச் சோறு வடிச்சாலும் எல்லாருக்கும் அது காணாது. வீட்டுல உள்ள எல்லாரும் அரைகுறையாவே சாப்புடுவாங்க. சோறும் மிஞ்சாது. இது எதுனாலன்னும் அக்காகாரியாலயோ அவ வீட்டுக்காரனலாயோ கண்டுபிடிக்க முடியல.
அன்னாடு வேலை பாத்துக் கஞ்சிகுடிக்கிற நெலமையிலதான் அக்காகாரி இருந்தா. இருந்தாலும் எப்படியாவது நாமளும் முன்னேறணும்னு நெனச்சிக்கிட்டு கடுமையா வறுமைய எதுத்துப் போராடுனா. இருந்தாலும் அவளோட விதி அவளக் கீழ தள்ளிக்கிட்டே இருந்துச்சு.
இப்படி இருக்கறபோது ஒருநாளு அக்காகாரி நெல்லக் குத்தி சோறாக்கிச் சாப்புடுற நேரத்துல அவளோட தங்கச்சிகாரி வந்தா. அக்காகாரி தங்கச்சிகாரிய வான்னு கூப்புட்டு கும்பாவுல அவளுக்கும் கொஞ்சம் சோத்தப்போட்டுக் குடுத்துச் சாப்புடச் சொன்னா.
அவளும் சாப்புட்டாக. இருட்டான நேரம். அக்காகாரிக்கிட்ட தங்கச்சிபாத்து, ‘‘ஏக்கா ஏன் விளக்குப் பொருதாமச் சாப்புடரீங்க’’ அப்படீன்னு கேட்டா. அதுக்கு அக்காகாரி, ‘‘அதையேன்டி கேக்குற. வௌக்கேத்துறதுக்குக் கொஞ்சங்கூட எண்ணையே இல்ல. அதுமட்டுமில்லாம எண்ண வாங்குறதுக்கும் காசில்ல. நானு வயத்துப்பாட்டப் பாப்பனா. வௌக்குக்கு எண்ண வாங்கி ஊத்துவேனா’’ன்னு சொன்னா. தங்கச்சிகாரி எதுவும் சொல்லாம சாப்புட்டுட்டுப் போயிட்டா.
அக்காகாரி புள்ளகளுக்கும் அவளோட வீட்டுக்காரனுக்கும் சோத்தப்போட்டுக் கொளம்ப ஊத்திக் கொடுத்தா. அவங்களும் சாப்புட்டாங்க. அவளும் சோத்தப் போட்டுக்கிட்டு இருட்டுக்குள்ளாறச் சாப்புட்ட. அவளுக்குப் பசி ரொம்ப இருந்துச்சு. சோத்தப் போட்டுட்டுத் தண்ணிய எடுத்துக்கிட்டு வரலாம்னு அவ போனா. அப்போதைக்குக் கருப்பா ஒரு பேயி இருட்டுக்குள்ளாற வந்து இருந்துக்கிட்டு அவ சோத்துத் தட்டுல இருந்த சாப்பாட்டச் சாப்புட்டுருச்சு.
தண்ணிய மோந்துக்கிட்டு வந்த அக்காகாரி தட்ட எடுத்துச் சாப்புடலாம்னு போனா ஆனா தட்டுக் காலியா இருந்ததப் பாத்துட்டு, ‘‘அடடா நாமதான் சாப்புட்டதை மறந்துட்டு தண்ணி மோக்கப் போயிட்டோம்னு’’ நெனச்சிக்கிட்டு மறுபடியும் சோத்தப்போட்டுச் சாப்புட ஆரம்பிச்சா.
அப்ப அந்தப் பேயி அவ ஒரு கையி சோத்த எடுக்கறபோது பேயியும் ஒருகையி சோத்த அள்ளிச் சாப்புடுச்சு. இப்படி அக்காகாரியும் பேயும் மாறிமாறிச் சாப்புட்டாங்க. இப்படி ரெம்ப நாளு அந்தப் பேயி சாப்புட்டுக்கிட்டு இருந்துச்சு.
அப்புறமா அந்தப் பேயி தான் இந்த வீட்டுல ரொம்பச் சௌகரியமா இருந்துக்கலாம்னு நெனச்சித் தன்னோட மனைவி, ரெண்டு புள்ளங்க எல்லாரையும் நெரந்தரமா இந்த வீட்டுக்குக் கூட்டியாந்துருச்சி.
அக்காகாரி இருட்டு நேரத்துல சோத்த ஒவ்வொருத்தருக்கும் போட்டுக் கொடுத்த பெறகு அவங்கள்ளாம் சாப்புடறபோது இந்தப் பேயிகளும் அவங்க அவங்க பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு நல்லா சாப்புட்டுச்சுக. இதனால அந்தக் குடும்பத்துல இருந்த அத்தனைபேரும் நாளடைவில எலும்புந் தோலுமா ஆயிப்போயிட்டாங்க.
அவங்க நல்லாச் சாப்புட்டும் அவங்களுக்குத் திருப்தி இல்லாம இருந்துச்சு. அவங்க சாப்பாட்ட இந்தப் பேயிக சாப்புட்டதால அவங்க ஒடம்பு வத்தி எலும்பாப் போயிட்டாங்க. அக்காகாரியும் அவளோட குடும்பமும் இப்படி ஆயிப்போயிட்டாங்களேன்னு தங்கச்சிகாரி நெனச்சிக்கிட்டு ரொம்ப வெசனப்பட்டா.
அவளாள சும்மா இருக்க முடியல. அக்காகாரியோட குடும்பம் இப்படி ஆகறதுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கணும்னு நெனச்சிக்கிட்டு இத எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும்னு மனசுக்குள்ளாற வச்சிக்கிட்டு அக்காகாரி வீட்டுக்குப் போனா.
தங்கச்சிகாரி வந்ததப் பாத்துட்டு அக்காகாரி வாத்தான்னு கூப்புட்டா. அக்காகாரி வீட்டுல ரெண்டு மூணு நாளு தங்கிட்டுப் போறதா தங்கச்சிகாரி சொன்னா. அக்காகாரி சரி இருந்துட்டுப்போ அப்படீன்னு சொல்லி இருக்கற சாப்பாட்ட அவளுக்கும் பங்கிக் கொடுத்தா.
இராத்திரி நேரம் வந்துச்சு. அக்காகாரி இருட்டுக்குள்ளாற சமைச்சி இருட்டுக்குள்ளாறயே வீட்டுல உள்ளவங்களுக்குப் போட்டா. அப்ப தங்கச்சிகாரியும் தட்டுல சோத்த வாங்கிக்கிட்டு சாப்புட ஒக்காந்தா. அவ தட்டுல கைவைக்கறதுக்குள்ளாற அவளோட தட்டுல உள்ள சாப்பாடு காணாமப் போயிருச்சு.
அவளுக்கு ஆச்சரியமாப் போச்சு. இங்க ஏதோ பேயிக இருந்துக்கிட்டு இப்படி இந்தக் குடும்பத்தப் போட்டு ஆட்டிப் படைக்குதுங்க போலருக்குன்னு அக்காகாரியும் அவளோட வீட்டுக்காரங்களும் எலும்புந் தோலுமாப் போனதுக்கு இதுதான் காரணம்னு நெனச்சிக்கிட்டு இதுகல வெரட்டரதுக்குத் திட்டம்போட்டா.
மறுநாளு அவ அக்காகாரி சோத்த வடிச்சி எல்லாரும் சாப்புடறதுக்காக ரெடிபண்ணுனா. தங்கச்சிகாரியும் அக்காகாரிக்கு ஒதவி பண்ணுனா. அதனால சீக்கிரமா இருட்டுறதுக்குள்ளாறயே சமையலை முடிச்சிட்டாங்க. அக்காகாரி சத்த நேரம் ஒக்காந்துட்டு இருட்டுன பின்னால சாப்புடுவோம்னு சொன்னா. ஆனா தங்கச்சிகாரி அக்காகாரியப் பேசாம இருக்கச் சொல்லிப்புட்டு தட்டெல்லாம் கழுவி அன்னைக்குச் சாப்பாட்டத் தட்டுல போட்டு எல்லாரும் சாப்புடுறதுக்குக் கொடுத்தா.
எல்லாரும் நல்லாச் சாப்புட்டாங்க. தங்கச்சிகாரியும் சாப்புட்டுட்டுப் பாத்தா நெறையச் சாப்பாடு மிஞ்சி இருந்துச்சு. அதப்பாத்த அக்காகாரிக்கு ரொம்ப ஆச்சரியம். அட என்னடா நாமளுந்தேன் தெனமும் இதேமாதிரி சோத்த வடிச்சிச் சாப்பிட்டுட்டுப் பாக்குறோம் ஒரு பருக்கக் கூட மிஞ்சிறது இல்ல. இப்ப என்னடான்னா இம்புட்டுச் சாப்பாடு மிஞ்சியிருக்குதேன்னு வாயப்பொளந்தா.
தங்கச்சிகாரி எதுவும் பேசாம நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிட்டுப் பேசாமா படுக்கான்னு சொல்லிட்டு எல்லாருஞ் சேந்து படுத்துத் தூங்கினாங்க. அப்போதைக்குச் சாப்பிட எதுவுங் கிடைக்காததால அங்கிருந்த பேயிங்க பசியால பட்டினி கிடந்துச்சுங்க. ஆம்பளப் பேயி தன்னோட பொண்டாட்டியப் பாத்து, ‘‘இந்த தங்கச்சிகாரியாலதான் இன்னைக்கு நாம பட்டினியாக் கிடக்க வேண்டியதாப் போயிருச்சு. நாளைக்கு அக்காகாரி இதுமாதிரி இருட்டுறதுக்கு முன்னால சாப்புட மாட்டா. இருட்டுன பின்னாலதான் சாப்புடுவா. அதனால நாளைக்கு நாம நல்லாச் சாப்புடுவோம்’’னு சொல்லிட்டு சமாதானப்படுத்திச்சு.
மக்காநாளும் அக்காகாரிக்கு ஒதவுனா தங்கச்சிகாரி. ஆனா அன்னைக்கு தன்னோட வீட்டுல இருந்து கொஞ்சம் வௌக்கெரிக்க எண்ணையக் கொண்டுவந்து வச்சி விளக்கேத்தினா. வீடு முழுக்க வெளிச்சமா இருந்துச்சு. இந்த வெளிச்சத்தப் பாத்த பேயிங்க அரண்டுபோயி வெளியில போயி நின்னதுங்க.
எப்படா வௌக்கு அணையும் நாமபோயி வீடடுக்குள்ளாற நொளஞ்சி அவங்க இருட்டுக்குள்ளாற சாப்புடுறபோது சாப்புடலாம்னு காத்துக்கிட்டு இருந்துச்சுங்க. ஆனா வௌக்க நல்லாத் தூண்டிவிட்டு வெளிச்சத்தக் கூட்டி வைச்சிட்டு எல்லாரும் சாப்புட்டாங்க. அன்னைக்கும் எல்லாரும் வகுறாறச் சாப்புட்டாங்க. சோறும் மிச்சப்பட்டது.
அக்காகாரிக்கு ஒண்ணுமே புரியல. அவ தங்கச்சியத் தனியாக் கூப்புட்டு, ‘‘என்னடி இது அநியாயமா இருக்கு. நானுந்தேன் எம்புட்டோ பண்ணிப் பாத்துட்டேன். நீ வந்த ரெண்டு நாளா சோறு இம்புட்டு மிஞ்சுது. என்னதான் மாய மந்திரம் போட்டே’’ அப்படீன்னு கேட்டா.
அதுக்குத் தங்கச்சிகாரி, ‘‘அக்கா நீ சோத்த இருட்டுக்குள்ளறயே வச்சிச் சாப்புட்ட. ஒன்னோட வீட்டுக்காரருக்கும் பிள்ளங்களுக்கும் போட்டுக் குடுத்துச் சாப்புட வச்சே. இதத் தெரிஞ்சிக்கிட்ட பேயிங்களும் இருட்டுக்குள்ளாற வந்து ஒங்க வீட்டுக்குள்ளாறத் தங்கிக்கிட்டு ஒங்க தட்டுல இருக்குற சாப்பாட்ட ஒங்களுக்குத் தெரியாம அள்ளி அள்ளிச் சாப்புட்டுச்சுங்க. அதனால நீங்க எல்லாரும் ஒழுங்காச் சாப்பாடு கெடைக்காம எலும்பும் தோலுமா ஆயிப்போயிட்டீங்க. சாப்பாடும் மிஞ்சல. ஆனா இப்ப வெளிச்சத்துல சாப்புடறதுனால நீங்க நல்லாச் சாப்புடறீங்க. சோறும் மிஞ்சுது. பேயிகளால ஒங்களோட சாப்பாட்டச் சாப்புட முடியல. வெளிச்சத்தக் கண்ட பேயிங்க எல்லா பதறி அடிச்சிக்கிட்டு ஓடிப்போயிட்டதுங்க. இனிமே இருட்டுக்குள்ளாறச் சாப்புடாம வௌக்க ஏத்தி வச்சிக்கிட்டு வெளிச்சத்துல சாப்புடுங்க. எல்லாம் மிஞ்சும். நீங்களும் நல்லாருப்பீங்கன்னு’’ சொன்னா.
இதக்கேட்ட அக்காகாரி, ‘‘அடடா இது தெரியாமப் போச்சே. வௌக்குப் பத்தவச்சா அதுக்கு எண்ணெ செலவாகும்னு நெனச்சுத்தேன் இருட்டுக்குள்ளறயே சாப்பாடு போட்டு நானுஞ் சாப்புட்டேன். இத இந்தப் பேயிக சாதகமா ஆக்கிக்கிட்டு என்னோட ஒழைப்பையெல்லாம் உறிஞ்சி எடுத்துப்புடுச்சுங்க. இனிமே நீ சொன்ன மாதிரியே வௌக்கேத்தி வச்சிக்கிட்டு அந்த வெளிச்சத்துலேயே சாப்புடுறேன். என்னோட குடும்பத்துக்கு நல்ல வழி காமிச்ச நீ நல்லா இருக்கணும்னு’’ வாயாற வாழ்த்துனா.
இதையெல்லாம் ஒண்டிநின்னு கேட்ட ஆம்பளப்பேயி, ‘‘இனிமே இந்த வீட்டுல இருக்க முடியாது. வாங்க வேற இடந்தேடிப் போயிருவோம்னு’’ சொல்லிக்கிட்டே தன்னோட குடும்பத்தக் கூட்டிக்கிட்டு ஓடிருச்சு.
அப்பறம் அந்த அக்காகாரி தங்கச்சி சொன்னது மாதிரி நடந்துக்கிட்டா. அந்த வீட்டுல வளமை வந்து சேந்தது. வறுமை ஓடிப்போயிருச்சு. அதனாலதான் இருட்டுக்குள்ளாறச் சாப்புடக் கூடாதுன்னு சொல்றாங்க. இருட்டுக்குள்ளாறச் சாப்புட்டா பேயிகளும் வந்து நம்மளோட சேந்து சாப்புடும். குடும்பத்துல வறுமை வந்துரும்னு நெனச்சிக்கிட்டு யாரும் இருட்டுக்குள்ளாற சாப்புடமாட்டாங்க. இந்தக் கத இன்னக்கி வரைக்கும் இந்தப் பக்கத்து வழக்கத்துல இருக்குது.