ஆந்தைக் கிளி (kakapo) என்பது ஒரு வகைக் கிளி. இந்தக் கிளி ஒரு பறக்காத பறவையாகத் தரையில் வாழக்கூடியது. ஆந்தையின் முகத்தையொத்த உருவ அமைப்பு கொண்ட இந்தக் கிளி, ஆந்தையைப் போலவே இரவு காலப் பறவைதான். இதனை ஆங்கிலத்தில் Owl Parrot என்றும் அழைப்பதுண்டு.
நியூசிலாந்து நாட்டில் மட்டும் காணப்படும் இக்கிளி மஞ்சள், பச்சை கலந்த நிறத்துடன், பூனை மீசை போன்று வாயைச் சுற்றி முளைத்துள்ள மயிர் போன்ற இறகுகள், பெரிய சாம்பல் நிற அலகு, குறுகிய கால்கள், பெரிய கால் அடிகளை உடையவை. இவற்றின் இறக்கைகள் மற்றும் வால் ஒப்பீட்டளவில் குறுகிய நீளமுடையவை. இது உலகின் ஒரே பறக்கமுடியாத கிளியாக இருக்கிறது. இவை உடல் பருமன் கொண்டவை. இரவு நேரங்களில் மட்டும் திரியக்கூடிய தாவர உண்ணிகளாகும்.
மேலும் இவ்வினப் பறவைகள் உடல் தோற்றத்தில் பால் ஈருருமை தோற்றம் உடையவை, இவை உலகில் நீண்டநாள் வாழும் பறவைகளில் ஒன்றாகும். சில கிளிகள் 120 ஆண்டுகள்வரைகூட உயிர் வாழும். தனது உடம்பில் நிறையக் கொழுப்பைச் சேகரித்து வைக்கும் இக்கிளியானது, 24அங்குல உயரமும் சுமார் 4 கிலோ எடையும் கொண்டது. ஆந்தைக் கிளிகளில் ஆண் பறவைகள் தமக்கு 4 வயதாகும் வரையும், பெண் பறவைகள் தமக்கு 6 வயதாகும் வரையும் இனவிருத்தியில் இறங்குவதில்லை.
நியூசிலாந்தின் பல பறவை இனங்களைப் போலவே, ஆந்தைக் கிளியும் மாவோரி பழங்குடி மக்களின் வாழ்வில் வரலாற்று சிறப்புமிக்கதாக, பாரம்பரியப் புனைவுகள் மற்றும் நாட்டுப்பறவியல் முக்கியத்தவம் மிக்கதாக இருந்தது. இவற்றின் இறைச்சி உணவுத் தேவைக்கும், இவற்றின் சிறகுகள் ஆடைகளை மதிப்பு மிக்கதாக மாற்றுவதற்கும் பயனுள்ளதாக இருந்ததால், இவை அங்குள்ள மாவோரி பழங்குடி இனத்தவரால் வேட்டையாடப்பட்டு வருகின்றன. தற்போது நியூசிலாந்து நாட்டில் 200 எனும் அளவில் இதன் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன.