பட்டம் சூட்டப்பட்ட கடதாசி!
பட்டம் சூட்டப்பட்ட கடதாசி
பல்லாக்குப் போகிறது!
திட்டம் போட்டு வைத்தாலும்
திசைதெரியாது பறக்கிறது!
பட்டை பட்டையாய்க் கடைக்காரன்
பதுக்கி வைத்தாலும்
நட்டக் கணக்கைக் காட்டி
நயமாய்ச் சிரிக்கிறது!
பையைவிட்டு வெளியே வந்தால்
ஆளைவிடுடா சாமியென
அடுத்த கைக்குத் தாவுறது!
ஆண்டவனைத் தரிசிக்க
ஆலயத்தை அடைந்தாலும்
ஆட்சியைப் பிடித்து
ஆட்டிப் படைக்கிறது!
பழமரம் தேடும் பறவைகள் போல்
படையெடுக்கும் நண்பர் குழாம்
பணமனம் இல்லையென்றால்
தடம் தெரியாது ஒழிந்திடும்
கோடி கோடியாய்ச் சேர்த்தவனும்
தேடித் தேடியதை வளர்க்க
பேயாய் அலைகின்றான்
நாடித் துடிப்படங்கும் வரை
நாடிநாடிச் செல்வது அதைத் தான்
வாழ்வில் அதனாட்சி அதிகரித்தால்
வழிமறக்கும் வசந்தமும் வாழ்வில்
வாழ்வில் அது இல்லையென்றால்
வாழ்வே இல்லை உலகில்!!
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.