சொர்க்கம்
மொட்டுக்களி லதிசயமாய் முடிந்துவைத்த தேனை
முறுவலுடன் பருகுதற்கு சிறகடிக்குந் தேனீ
தொட்டுவிட தட்டுவதே இல்லையடி பூவும்.
தொட்டணைத்து முத்தமிட்டு விளையாடும் அலைகள்
விட்டுவிடு மென்றெண்ணிக் கலங்கிடுமோ கரையும்?
வில்லங்க விழிபாய்ச்சிக் கொல்லுகின்ற நோக்கில்
கொட்டுகின்ற தேள்பார்வைக் குட்படுத்தல் நீக்கி
கொண்டவனாய் ஏற்பதற்கு குறிப்பொன்று வழங்கு.
முட்டுவதும் மோதுவதும் காதலுக்கு மகுடம்
முத்தமழை சிந்துவதோ ஊடலலங்காரம்
வெட்டுவதும் வீராப்புக் காட்டுவதுங் கூட
விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமென்று கொண்டு
தட்டுத்தடு மாறுகின்ற தவிப்புக்களைக் கேளு
தந்துவிட்டேன் எனையுனக்கு எனவுரைக்கும் நாணம்
இட்டமென இயம்புதற்கு இதழ்வார்த்தை தேடும்
இருவிழியோ இதயமதை ஈர்த்தெடுக்கத் தூண்டும்
எட்டுத்திசை வீசுகின்ற தென்றலுக்கு வேலி
எப்படித்தான் கம்பிகளால் போடுவது கூறு.
கட்டவிழ்ந்த ஆசைகளும் கடலலையை போன்று
கரைதாண்டும் நிலைகூட அப்படித்தான் பாரு.
திட்டமிட்டு காதல்பூ பூப்பதில்லை நெஞ்சில்
திடீரென்று தீண்டிடவும் மறுப்பதில்லை விண்ணில்
கட்டிவிடும் கருவண்ண முகிலென்னும் கூட்டின்
கசிந்துருகும் அமுதத்துளி அதுவன்றோ சொர்க்கம்.
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.