ஒரே தட்டில்...!
வாழ்ந்து முடித்த கோழியும்
வாழப்போகும் முட்டையும்
செத்துக் கிடக்கின்றன
ஒரே தட்டில் பிரியாணியாய்....!
பட்டம் பதவி பணம் புகழ் பறிக்கும்
துட்ட மனத்தார் இட்டதே சட்டம்
மேடைப் பேச்செல்லாம்
வேடப் பேச்சாயிற்று
உங்களால் நான்
உங்களுக்காக நான் என
அடிக்கடி மேடையில்
முழங்கப்படும் ஒலி
உதட்டில் தடவிய வெல்ல ஒலி
தேர்தல் நிதி என்றே சொல்லி
தேத்துவார் குடும்பத்திற்கு நிதி
பிறந்த நாள் பெயரிலோ
பெரும் பொருட்கொள்ளை
கிளை விட்டு கிளைதாவும் மந்திபோல்
கட்சிவிட்டு கட்சி தாவும் மந்திரிகள்
பதவிக்கும் புகழுக்கும் ஆசை கொண்டு
பொது நலம் பேணுவதாய் நடிக்கிறார்
கைக்காட்டி பிழைக்கும் எட்டப்பன்களை
வழிகாட்டியாய் எண்ணி புகழ்வார்
காட்டில் வாழும் மிருகங்களெல்லாம்
நாட்டிலே நடமாடும் நிலைதான்
வாழ்ந்து முடித்த கோழியாய் ஆட்சியாளர்களும்
வாழப்போகும் முட்டையாய் மக்களும்
ஒரேத்தட்டில் பிரியாணியாய்
செத்துக் கிடக்கிறார்கள்
நலமிழந்து வாழ்க்கைத்துயரோடு!
- சரஸ்வதி ராசேந்திரன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.