ஆணியம்
அன்பு
இருபாலருக்கும் பொதுவெனினும்
பெண்ணுக்கே உரித்தானது
எனப் புகழாரம் சூட்டும்
சமூகம்
ஆண்களை மறந்தது ஏன்?
அன்பை வெளிக்காட்டாமல்
அகத்தில் வைத்து
உருகிக் கரைந்து
வாழ்க்கைக்கு ஒளி வீசும்
மெழுகுவர்த்தி
ஆண்கள் என்பதைச்
சமூகம் வெளிக்காட்டாமல் இருப்பது ஏன்?
தியாகச் செம்மல், தன்னிகரற்ற
தெய்வம், உயிரின் உறைவிடம்
எனத் தாய்மையைச் சிறப்பிக்கும்
சமூகம்
தந்தையைச் சிறப்பிக்கவில்லை ஏன்?
உயிர் தந்தது இருவர்
இதில்
உயர்வானவர் ஒருவர் எனப்
பாலினப் பாகுபாட்டைத்
தொடங்கி வைத்தவர்
யார்?
ஆண்கள் எனில்
வல்லினம்
பெண்கள் எனில்
மெல்லினம்
என நம் ஆழ்மனத்தில்
பதிய வைத்தது யார்?
பெண்ணுக்கு முன்னுரிமை
ஆணுக்கு ஏன் உரிமை
என நடுநிலை தவற வைத்தது ஏன்?
ஆண்கள் ஆணாதிக்கத்தின்
அடையாளம்
பெண்கள் பொறுமையின்
பூர்வீகம்
என ஆராயாமல்
ஆமோதிப்பது ஏன்?
ஆண்களின்
இதயம் இரும்பால் ஆனது
பெண்களின் இதயம்
மலரினும் மென்னையானது
எனப் பொய்யுரைப்பது ஏன்?
பெண்ணியம் பேச ஆண்கள்
உண்டு
ஆணியம் பேசும் பெண்களும்
உண்டோ?
ஒருபட்சமாய் பேசுவதை
இன்றே நிறுத்துவோம்
உண்மை ஆராய்ந்து
உலகறியச் செய்வோம்
- சரவிபி ரோசிசந்திரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.