வெற்றியாண்டாய் மலர்வாய்!
வார்த்தைகளால் வாழ்த்தொலிகள்
வானவேடிக்கைகளால் வரவேற்புகள்
கோர்த்து வைத்த பாமாலைகளால்
கோர்வாய் உனைப் பாடிக் குதூகலிப்பும்
கோலாகல வரவேற்பும் – நீ
கொண்டுவந்த சேதியென்ன சொல்லிவிடு – நீ
பூப்பதொன்றும் புதுமையில்லை – உலகில்
புரிகின்ற சாதனையில் புதுமை காண்பாய்
புரியாத அழிவுகளால் - இப்பூமி
புரியாது மாள்கிறது, புன்னகை யிழக்கிறது
பூரிப்பாய் வரவேற்ற பூலோகக் கண்களுக்கு
புரிய வைக்கும் சாதனைதான் யாதோ?
சாதனைகள் புரியப் பல வேதனைகள் காண்போம்
சான்றுகள் பெருகப் பல சோதனைகள் காண்போம்
வேதனையும் சோதனையும் கண்டுவிட்டோம்
சாதனையும் சான்றுகளும் சாதிக்க வேண்டும்
சாக்கடைப் புழுவாய் சகதியில் வாழும் மக்கள்
நோக்காடு இன்றி மேன்மை பெறல் வேண்டும்
சுழலுகின்ற பூலோகம் சுகங்கள் தர வேண்டும்
உழலுகின்ற துன்பங்கள் உருண்டோட வேண்டும்
உள்ளத்தில் நற்சிந்தனை உருக்கொள்ள வேண்டும்
செல்லச் சிறாரெலாம் சிந்தையறிவு பெறல் வேண்டும்
அத்தனையும் பெற்றுவிட்டால் அகிலம் போற்றும்
வெற்றியாண்டாய் மலர்வாய் நீ!
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.