உதிர்ந்து விட்ட காலமது!

சொர்க்கம் ஒன்று கண்டேனே - வாழ்வில்
சொல்லவொண்ணா சுகம் ஒன்று கொண்டேனே – உன்
சொக்க வைக்கும் சுவர்க்கச் சிரிப்பினிலே – என்
துக்கமெல்லாம் துறந்தேனே
கலகலத்து வந்த குரலினிமை தனிலே
காதுமடல் கனிந்து வர வுணர்ந்தேனே – நீ
காலெடுத்து தத்தித் தத்தி வருகையிலே – சொர்க்கம்
காலடியில் கிடப்பதைக் கண்டேனே
பச்சைக்கிளியாய் நீ பகர்ந்த மொழி – என் செவியில்
பாலும் தேனும் கலந்தொலிக்கிறது
பத்துவிரலாலே பதம் பார்த்தவுன் உணவை – நான்
பகிர்ந்து உண்கையிலே
பஞ்சாமிர்தச் சுவையும் தோற்றுப் போகுதடி
குட்டை வண்ணச் சட்டையிலே
குதித்திரு கைதட்டி
கும்மாளம் இடுகையிலே – எனதுள்ளம்
குதிக்குதடி விண்ணோக்கி
கட்டி அணைக்கையிலே கள்ளி! நீ தந்த
கன்னத்து முத்தமதில்
என்னுள்ளம் கொள்ளை போகுதடி
உள்ளமெல்லாம் துள்ளல் கொள்ளுதடி
கழுவி மடித்து வைத்த ஆடைகளை – நீ
கசக்கி மீண்டும் நீரில் போட்டு
கன்னத்தில் கைவைத்து நின்றநிலையது
கண்டுள்ளம் கோபம் கொள்ளவில்ல
சிட்டாய்ப் பறக்குதடி – உன்னைச்
சுற்றிச் சிறகடிக்குதடி
கட்டித் தங்கமே! கரும்பே! தேனே!
உனை நான் பார்க்கையிலே
உனைப் போல் யானிருக்க
உள்ளம் ஏங்குதடி
உதிர்ந்து விட்ட காலமது
உருப்பெற்று வாராது
உள்ளம் தான் ஏங்கினாலும்.
- சந்திரகௌரி சிவபாலன். ஜெர்மனி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.