பெரியவர்கள் பேச்சை மீறினால்...?
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒரு ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.
ஓநாய், "நண்பா... இங்கே இளசான புல் கிடைக்கும் போலிருக்கிறது. இளம்புல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது. எனக்கு அது கிடைக்கவில்லை..." என்று வருத்தத்துடன் கூறியது.
"அப்படியா? நீ புல்லையாச் சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே...?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.
"சேச்சே... அதெலாம் சுத்தப் பொய். நான் சைவம்" என்றது ஓநாய்.
"அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, இந்த வேலியைக் கடந்து இந்தப் புல்வெளிக்குள்ளே வருவதற்கான வழியைக் காட்டுகிறேன்” என்றபடி அருகிலிருந்த வேலி இடைவெளியின் வழியாக வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன் மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
குழந்தைகளாக இருப்பவர்கள் பெரியவர்கள் சொன்னதை நினைவில் கொண்டு, அதன்படி என்றும் நடக்க வேண்டும், இல்லையேல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.