பணம் குறித்த உலகப் பழமொழிகள்

இறைவன் வானத்தை ஆள்கிறான், பணம் உலகத்தை ஆள்கின்றது.
- ஜெர்மனி

வெறும் கை முழம் போடாது.
- தமிழ்நாடு (இந்தியா)

பணம் இருந்தால், இரும்பும் மிதக்கும்.
- இந்தியா

பணமில்லாதவன் பாய்களில்லாத கப்பல் போன்றவன்.
- ஜப்பான்

பணத்தைக் காட்டினல், குருடர்களும் கண்ணைத் திறந்து விடுவர்.
- சீனா

பணமிருந்தால் நீ பாம்பு. இல்லாவிட்டால் புழு.
- சீனா

பணமுள்ளவனுக்குப் பயம், இல்லாதவனுக்கு வருத்தம்.
- பாரசீகம்

ஏழையின் பணம் சூரியனைக் கண்ட பனி போல் தீர்ந்து விடுகின்றது.
- பிரான்ஸ்

பணமில்லாதவன் சந்தையில் வேகமாய்ச் சுற்றுவான்.
- இங்கிலாந்து

பைக்குள் கிடக்கும் பணம் சலசலக்கும்.
- எஸ்டோனியா

பணம் பேசத் தொடங்கினல், உலகம் வாயை மூடிக் கொள்ளும்.
- எஸ்டோனியா

நாய்கள் குரைக்கும், பணம் பேசும்.
- ஹங்கேரி

பணமுள்ள இடத்திற்கே பணம் போய்ச் சேரும்.
- ரஷ்யா

பணம் வரும் போது இரண்டு கால்களுடன் வரும்; போகும் போது பல கால்களுடன் போகும்.
- ரஷ்யா

பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது; பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது.
- ஸ்பெயின்

எந்த முட்டாளும் பணம் சம்பாதிக்க முடியும், அறிவாளிதான் அதை வைத்திருக்க முடியும்.
- அமெரிக்கா

இரண்டு கைப்பிடி உண்மையைக் காட்டிலும் ஒரு பிடி பணம் வல்லமையுள்ளது.
- டென்மார்க்

பணமில்லாத மனிதன் அம்பில்லாத வில்.
- இங்கிலாந்து

பை நிறையப் பணமுள்ளவனுக்கு நண்பர்களுக்குப் பஞ்சமில்லை.
- இங்கிலாந்து

மனிதனைப் பிடிப்பதற்குச் சிறந்த துாண்டில் பணம்தான்.
- இங்கிலாந்து

பெரிய மனிதனுக்கு உன் பணத்தைக் கடனாகக் கொடுக்க வேண்டாம்.
- பிரான்ஸ்

பணம் பேசும் பொழுது, உண்மை வாயடங்கிக் கிடக்கும்.
- ரஷ்யா

பணம் வெண்மையாயிருந்தால் போதும், ஆளின் முகம் கறுப்பாயிருக்கலாம்.
- துருக்கி

பணம் பெருகும் பொழுது, பணத்தின் ஆசையும் பெருகும்.
- லத்தீன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.