சிறுவர் பகுதி
தொடர் கதைகள்

துரத்துவது யார்?

பாரதி தேவராஜ்


1. எழுத்தாளரின் மரியாதை!

மணி ஏழாகியிருந்து. கிழக்கே சூரியன் மெல்ல எட்டிப் பார்த்தான் கோவை ரயில் நிலையம் கலகலத்துக் கொண்டிருந்தது. இன்று ஏகப்பட்ட கூட்டம். எழுத்தாளர் கீர்த்தீயனை வரவேற்க ஒரு கும்பல் மாலையோடு காத்திருந்தது. அவர்களில் ஓரமாய் ஒரு சின்னஞ்சிறிய சிறுவனும் வந்திருந்தான். அவன்தான் சுந்தர். சுந்தர் கீர்த்தீயனின் பரமரசிகன். அவருடைய ஒவ்வொரு கதையும் வெளியாகிற அடுத்த நாள் அக்கதை பற்றி ஒரு சிறு விமர்சனமாய் சுந்தரின் கடிதம் அவரை அசர வைக்கும்.

அதோ ரயில் வந்து விட்டது. இஞ்சினை அடுத்திருந்து முன்பதிவு செய்யாத சாதாரண பெட்டியிலிருந்து அவர் இறங்கினார். அவரது ரசிகர்கள் மாலை போட்டும் கதர் துண்டு போர்த்தியும் வரவேற்றனர். ஓரமாய் நின்ற சுந்தர்,

“சார்.நான் சுந்தர் அடிக்கடி கடிதம் எழுதுவேன்”

“ ஓ! சுந்தர். வாவா. என்ன அங்கேயே நின்னுட்டே வா இங்கே.”

சுந்தர் அவரின் அருகில் வந்து தன் கையிலிருந்த எலுமிச்சங்கனியை அவரிடம் கொடுத்தான். கூட்டத்தினர் என்ன நினைத்தார்களோ படபடவென கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சுந்தருக்கு வெட்கமாய் போய் விட்டது.

கீர்த்தீயன் சுந்தரை நோக்கி, “சுந்தர் நான் கனகா லாட்ஜ்லே தங்கியிருக்கேன் ஒரு பத்து மணிக்கு நீ அங்க வந்துரு. சாயந்தரம் நாலுமணி வரைக்கும் புல்ப்ரிதான் பிரியா பேசுவோம். எழுத்து வேலை கொஞ்சம் முடிக்கணும் இல்லேன்னா உன்னையும் இப்பவே எங்கூடவே கூட்டிட்டு போயிடுவேன். உனக்கொண்ணும் வருத்தமில்லையே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்”.

சுந்தர் சைக்கிளை முன்வாசலில் நிறுத்திவிட்டு, “அம்மாம்மா இன்னிக்கி கீர்த்தீயன் சாரைப் பார்த்தேன். என்ன உயரமாயிருக்கார் நானே என்னை அறிமுகம் செஞ்சுகிட்டேன். அவர் ரொம்ப சந்தோசப்பட்டார். என்னுடைய கடிதங்களைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசப் படுவேன்னு சொன்னார்ம்மா!”

— பேப்பர் கொண்டுபோகும் ரெக்ஸின் பையை சுவற்று ஆணியில் மாட்டினான் சுந்தர்.

“அப்புறம்”



“ஏதோ தொடர்கதையோட அத்தியாயம் எழுதணுமாம். பத்து. மணிக்கு மேலே என்னை வரச் சொல்லி இருக்கார்.. இன்னைக்கு பூரா அவரோடதான் இருப்பேன்.” சுந்தரின் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.

“நல்ல புள்ளப்பா. சரிசரி டிபனச் சாப்பிட்டுட்டு எங்கவேணா போ” என்று சொல்லி விட்டு அடுக்களையில் நுழைந்து தட்டெடுத்து வைத்தாள்.

*****

கோமளத்தம்மாவிற்கு சுந்தர் ஒரேபிள்ளை. ரம்யா சுந்தருக்கு மூத்தவள். கோமளத்தம்மாவின் கணவர் கொஞ்சமும் பொறுப்பில்லாதவர் எப்போதாவது வருவார். கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து விட்டுப் போவார். மறுபடியும் எப்போது திரும்புவார் எனச் சொல்லவே முடியாது, நல்ல வேளை குடியிருந்த வீடு சொந்தமாயிருந்தது. ஒரு போர்சன் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் ரம்யா எப்படியோ பள்ளியிறுதி வகுப்பு வரை படித்து விட்டாள். டைப்புக்குப் போய் பாஸ் செய்திருந்தாள். ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குப் போகிறாள். சுந்தர் பனிரெண்டு வயது பையனானாலும் படு புத்திசாலி பள்ளிக்குச் சென்ற நேரம் போக மீதி நேரத்தில் எதையாவது செய்வான்.

யாரையோ கேட்டுக் காலை நேரத்தில் எழுந்து போய் பேப்பர் போடும் வேலையைத் தேடிக் கொண்டான். அதில் வருவது சொற்பமானாலும் ஒருசின்ன செலவுக்காவது ஈடுகட்டத்தான் செய்தது. சுந்தருக்குப் படிப்பதில் ஆர்வம். வார, மாதப் பத்திரிக்கைகள் ஒன்று விடமாட்டான். இன்று பிரபலமாகி எல்லாப் பத்திரிக்கைளிலும் எழுதிக் குவித்து வரும் கீர்த்தியன் என்றால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் படித்து விட்டு அதைப் பற்றி அவருக்குக் கடிதமெழுதுவான். நாலைந்து கடிதங்களுக்குப் பின் ஒரு ஒற்றை வரியில் கீர்த்தீயனிடமிருந்து பதில் வரும். அதைப் பார்த்ததும் மிகப் பெரிய விருது கிடைத்தது போல எல்லோரிடமும் காட்டி மகிழ்வான்.

“ஏண்டா இன்னும் ஒரு இட்லிதான் வைச்சுக்கோயேன்”

“ வேண்டாம். வேண்டாம். ”என்றவன்.

தட்டைத் தூக்கிக் கிணற்றடியில் கிடந்த பாத்திரங்களுக்கருகில் வைத்து விட்டு அவசரமாய்; கையலம்பினான்.

கனகா லாட்ஜ் வெய்யிலின் அருமை தெரியாமல் குளுமையோடிருந்தது. வரவேற்பறையில் சந்தனக் கீற்றோடு நின்று கொண்டிருந்தவர். யாருடனோ சுவாரஸ்யமாய் செல்லில் பேசிக் கொண்டிருந்தார். சுந்தர் நிதானமாய் கவுண்ட்டர் அருகே போய் நின்றான்.

சுந்தரைக் கண்டதும் அந்த வரவேற்பாளர், “தம்பி உங்க பேர் சுந்தரா?”

“ஆமாம்”

“ம் கீர்த்தீயன் சார் கொஞ்சம் வெளியே போயிருக்கார். அறைச் சாவிய உங்கிட்ட கொடுக்கச் சொன்னார். ரூம்லே பத்து நிமிஷம் இருக்கச் சொன்னார். இந்தா ரூம் 203 மேலே லெப்ட் சைடுல இருக்கு.”

பெரிய ‘கீ’ செயினோடிருந்த சாவியைச் சுந்தர் கையில் கொடுத்தார்.

சுந்தருக்கு கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் உற்சாகமாய் மாடிப்படிகளில் தாவி 203-ம் அறையின் கதவைத் திறந்து உள்ளே போனான். கொசுவலை ஸ்டேண்டில் ஒரு ஈரத்துண்டு தொங்கியது. பேன் வேகமான சுழற்சியில் ஈரத்தை காய வைக்க முயன்றது. ஹாலின் நடுவில் ஒரு டபிள்பெட் சுத்தமாகயிருந்தது. தலைமாட்டிலிருந்த சின்ன டீபாயில் நாலைந்து புத்தகங்கள் புதுக்கருக்கோடிருந்தது.

ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஜன்னலோரமாயிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு புத்தகத்தைப் பிரித்தான். ஜன்னல் வழியாக கீழே பார்த்தான். தெருவில் ஒரு மாட்டுவண்டி சலங்கைகள் குலுங்கப் போய்க் கொண்டிருந்தது. டவுன் பஸ் ஒன்று அதை முந்திக் கொண்டு போனது. நடுத்தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு பெரியவர் பயந்து அலறியபடி பிளாட் பாரத்திற்கு ஓடிப்போய் திரும்பிப் பார்த்தார், சுந்தருக்கு சிரிப்பாயிருந்தது.



தூரத்தில் பாண்டு வாத்திய சத்தம் கேட்டது. பையனொருவன் நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு வீடுவீடாய் போய்க் கொண்டிருந்தான் சுந்தர் இன்னும் நன்றாக எட்டிப்பார்த்தான். பார்வையற்ற உடல் ஊனமுற்ற ஐந்தாறு பேர் பாண்ட் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தனர். தெருவில் வருவோர் போவோர் நின்று, நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

லாட்ஜ்க்கு நேராய் வாத்தியம் வாசிப்போர் வந்த போது ஜனக் கூட்டம் சற்று அதிகமானது. டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் சட்டென்று கூட்டத்தை விலக்கி லாட்ஜ்க்குள் ஒடிவந்தான் முன்னால் நின்ற வரவேற்பாளரிடம் விசாரித்தவன். மாடிப்படிகளில் சரசரவென்று ஏறினான். சுந்தர் இருந்த அறையில் சட்டென்று புகுந்து கதவைச் சாத்தினான். அவசர அவசரமாய் டிரம்ஸின் நட்டுகளைக் கழட்டி, கேக் வடியிலிருந்த காகிதம் சுற்றிய ஒரு பொருளை சுந்தரின் கையில் கொடுத்து, “இது பத்திரமாய் ரூமில் எங்கயாவது ஒளிச்சு வை யாருக்கும் தெரியக் கூடாது” என்று சொல்லியவன் மறுபடியும் டிரம்ஸ் நட்டுகளைப் பழையபடி போட்டு முறுக்கிய அதே நேரம் கதவைத் தட்டும் ஒலி கேட்டது டிரம்ஸை விட்டுவிட்டு பாத்ரூமுக்குள் அந்தப் பையன் பாய்ந்து ஓடினான். சுந்தர் கதவைத் திறந்தான்.

மொட்டையடித்த ஒரு கருப்பு மனிதன் மாமிச மலை போல பயங்கரமாய் நின்று கொண்டிருந்தான்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/serial/p1a.html