கற்றாழைக் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சோற்றுக் கற்றாழை - 2 மடல்
2. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
3. பூண்டு - 10 பல்
4. புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. மிளகு - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
1. சோற்றுக் கற்றாழை மடலை மண் போகக் கழுவி, மேல் தோலை மட்டும் சீவி எடுக்கவும்.
2. உள்ளே ஜெல் போல இருப்பதை பட்டாணி அளவுக்குப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. புளியை ஒன்றரை தம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைக்கவும்.
4. வெங்காயம், பூண்டை உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.
5. தேங்காய்த்துருவலை மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.
6. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்தக் கற்றாழையைச் சேர்த்து வதக்கவும்.
8. வதக்கும் போதே கற்றாழை காணாதது போல் கரைந்து விடும்.
9. புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
10. கொதிக்கும் போது அரைத்தத் தேங்காயைச் சேர்த்து கொதிக்க விடவும்.
11. சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து நைசாகப் பொடித்துக் குழம்பில் சேர்க்கவும்.
12. நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வருவது போல் வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
* இந்தக் கற்றழைக் குழம்பைச் சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.
* உடல் ரொம்ப சூடு கண்டவர்கள் சாப்பிட்டால் உடனடியாகப் பலன் கிடைக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.