மட்டன் சுக்கா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. ஆட்டுக்கறி – 250 கிராம்
2. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
3. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
4. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
5. தேங்காய்ப் பால் – 2 மேசைக்கரண்டி
6. சின்ன வெங்காயம் – 100 கிராம்
7. பூண்டு – 10 பற்கள்
8. தக்காளி – 1 எண்ணம்
9. உப்பு – தேவையான அளவு
தாளிக்க
10. சோம்பு – 1/2 தேக்கரண்டி
11. பட்டை – சிறிது
12. கிராம்பு – 2 எண்ணம்
13. பிரியாணி இலை – 1 எண்ணம்
14. கறிவேப்பிலை – சிறிது
15. எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஆட்டுக்கறியை நன்கு சுத்தமாகக் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஆட்டுக்கறித் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விடவும்.
3. பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான நெருப்பில் 6 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிப்பதற்குரிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
6. பின்பு, அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும்.
7. பின்பு, அதில் வேக வைத்துள்ள ஆட்டுக்கறியைத் தண்ணீருடன் சேர்த்துக் நன்கு கிளறி விடவும்.
8. ஆட்டுக்கறியிலுள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய்ப்பால் சேர்த்து, தேங்காய்ப்பால் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.