ஆட்டுக்குடல் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ஆட்டு கறி குடல் – 500 கிராம்
2. வெங்காயம் – 4 எண்ணம்
3. தக்காளி – 3 எண்ணம்
4. தேங்காய் துருவல் – 1 கப்
5. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
6. பட்டை – 1 துண்டு
7. கிராம்பு – 2 எண்ணம்
8. சோம்பு – 1 தேக்கரண்டி
9. கசகசா – 1 /2 தேக்கரண்டி
10. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
11. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
12. கரம் மசாலாத் தூள் – ½ தேக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு
14. எண்ணெய் – தேவையான அளவு
15. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. ஆட்டுக் குடலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
2. ஆட்டுக் குடலைச் சுத்தம் செய்யும் போது சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து நன்கு கழுவ வேண்டும்.
3. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்துத் தாளிக்கவும்.
5. அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வரும் வரை வதக்கவும்.
7. அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
8. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
9. பின்னர் அதில் சுத்தம் செய்து அலசி எடுத்து வைத்துள்ள ஆட்டுக் குடலைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
10. ஆட்டுக் குடலுடன் மசாலா முழுவதும் நன்கு சேரும் வரை வதக்கவும்.
11. தேங்காய் துருவல், கசகசா, சோம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
12. அரைத்த தேங்காய் மசாலாவைக் குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
13. விசில் அடங்கியதும் குக்கரை திறந்து, அதில் பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம்.
குறிப்பு: ஆட்டுக் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.